பெண்களை நவநாகரிக யுவதியாக காட்ட வேண்டும் என்றால் அவர்களுடன் ஒரு தோள் பை இருக்கும். பழைய படங்களில் இதையெல்லாம் பார்த்திருப்பீர்கள். தோள் பையும், ‘ஹேண்ட் பேக்’கும் முன்பு ‘பேஷனாக’ இருந்தது தற்போது அத்தியாவசியமானதாகி விட்டது. தாங்கள் எடுத்து செல்லும் தோள் பை ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். தோள் பை அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.
பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக தோள் பையில் பொருட்களை திணித்து வைக்கக் கூடாது.
கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், அலங்கார அத்தியாவசியப் பொருட் களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான சுமை தோளை அழுத்தும். அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.
பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந் திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும், எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும், தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடல் சமநிலையை இழக்கும். கனமான கைப்பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலி தோன்றும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல பரிசோதனைகளை செய்யவேண்டிய தாகிவிடும்.
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும். இப்போது நிறைய பாக்கெட்டுகளை கொண்ட சவுகரியமான தோள்பைகள் வந்துவிட்டன. அவைகளை வாங்கி, அது அதற்குரிய இடங்களில் பொருட்களைவைத்தால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் குவிவதையும் தவிர்த்துவிடலாம்.
தோள் பையை பயன்படுத்தும் பெண்கள் பெரிய பட்டை கொண்ட பைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. ‘லைட் வெயிட்’ பைகளை வாங்குங்கள். இரவில், தனியாக பயணிக்க வேண்டி இருந்தால் அந்தப் பையில், பாதுகாப்புக்காக ‘பெப்பர் ஸ்பிரே’ போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் தோள் பை, உங்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். உடலுக்கு நாளடைவில் உபத்திரவம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

