பெரும்பாலான ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் சூப் பரிமாறப்படுவது வழக்கமாகி விட்டது. சைவம், அசைவம் என இரு பிரிவிலும் இது இப்போது கிடைக்கிறது. கீரை, தக்காளி, மஷ்ரூம், வெஜிடபிள், சிக்கன், ஆட்டுக்கால் என நீள்கிறது சூப்களின் வகைகள். வெஜிடபிள் சூப்பில் நம் உடலுக்குத் தேவையான சில தாதுக்களும் வைட்டமின்களும் கிடைக்கும். அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டினும் நிறைந்திருக்கும்.

ஒரு கப் வெஜிடபிள் சூப்பில் 50ல் இருந்து 100 கலோரிகள் இருக்கும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள் காய்கறிகளில் இருந்து கிடைப்பவை. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவும். நன்கு காய்ச்சப்பட்ட சூப்பில் கார்போஹைட்ரேட் 15 கிராம், நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 5 கிராம் இருக்கும். கொலஸ்ட்ரால் குறைவாகவே இருக்கும். சூப்பில் நாம் சேர்க்கும் காய்கறிகளுக்கு ஏற்ப வைட்டமின் சத்துகள் கிடைக்கும் வைட்டமின் இ, தயாமின், நியாசின், வைட்டமின் பி 6, பொட்டாசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருக்கும்.

இது ஒரு லோ கிளைசமிக் தன்மை கொண்ட திரவ உணவு. ஒரு கப் குடித்தால், பசியைத் தூண்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடை குறைய உதவும். அதுமட்டுமல்ல.. புற்றுநோய் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளும். இதய நோயில் இருந்து காக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகள்கூட குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

சிக்கன், ஆட்டுக்கால் போன்றவற்றில் செய்த சூப்களை கடைகளில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், அவை ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை மிகப்பழைய இறைச்சி, எலும்பில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நம் உடலுக்கு கெடுதி விளைவிக்கலாம். இன்றைக்கு பல சூப்களை ரெடிமேடு மிக்ஸாக தயாரிக்கிறார்கள். ரோட்டோரக் கடைகளில் கிடைப்பவற்றில் பெரும்பாலானவை இந்த ரகங்களே. நம் கண் முன்னால் சில காய்கறி ரகங்களை சேர்த்து தயாரிப்பார்கள் அவ்வளவுதான்.

எனவே, இவை நமக்கு சக்தியை தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது சூப் நமக்கப் பலவழிகளில் நலம் தருகிறது. கிராமங்களில் உடல் பலவீனமானவர்களுக்கு, எலும்பில் அடிபட்டவர்களுக்கு நாட்டுக் கோழியில் ரசம் வைத்துக் கொடுப்பார்கள். ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும். மூட்டுவலி தீரும். எனவே, சூப் நமக்கு பல நன்மைகளைத் தரும். சூப்பை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு 100 சதவீதம் உத்தரவாதம்.