
தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான். உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்துக்கொண்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, சளி பிரச்னை போன்ற உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும். முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொஞ்சம் இஞ்சிச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
அதேமாதிரி வெள்ளைப்பூண்டும் ரத்த அழுத்தத்தை சரி செய்யக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழுப்பூண்டை தீயில் சுட்டு நன்றாக வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பைக் கரைப்பதோடு இதயத்துக்கும் வலுவூட்டும். சளி தொந்தரவு உள்ளவர்கள் இரவில் உறங்கப்போவதற்கு முன் ஒரு முழு வெள்ளைப் பூண்டை உறித்து 50 மில்லி பால், அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
பாதியாக வற்றியதும் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். பிறகு நன்றாகக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் மேலும் கீழும் இழுக்கும் இளைப்பு சரியாகி மூச்சுத் திணறல் நிற்பதோடு சளி மலத்தோடு வெளியே வந்துவிடும்.

