
டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர்.
மனைவியிடம் கணவன் சொல்லக்கூடாத வார்த்தைகள் ஏராளமாக உள்ளன.எப்போதும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
கணவன், மனைவியிடையே வருகிற சிறு சிறு வார்த்தை மீறல்கள்கூட, அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்துவிடலாம். அந்த வார்த்தை மீறல்கள் கோபத்தால் மட்டுமல்ல, வாழ்க்கைத் துணையைக் கேலி பேசும் இயல்பாலும் நிகழலாம்.

தாம்பத்ய உறவு பற்றி பேசுகிற பெண்கள் ஒழுக்கமானவர்கள் கிடையாது என்கிற பொதுப்புத்தி நம் சமூகத்தில் இன்னமும் இருக்கிறது. அதைப்பற்றி கணவரிடம் பேசுவதும்,எனக்கு இன்னும் தேவைகள் இருக்கின்றன என்று கணவரிடம் கேட்பதும் குடும்பப் பெண்களுக்கு ஏற்றதல்ல என்கிற எண்ணத்தையும் நம் சமூகம் பெண்கள் மனதில் ஏற்றிவைத்திருக்கிறது.
கூடவே,பெண் என்றால்,அவள் உடல்வாகு இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஆழ விதைத்திருக்கிறது. உண்மையில்,இப்படி விதைத்திருப்பவையெல்லாம் ஆண்களின் விருப்பங்களைத்தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இதன் காரணமாக, இடுப்பு பெரிதாக இருக்கிறது; மார்பகம் சிறியதாக இருக்கிறது என்பதுபோல தங்கள் உடலில் ஏதாவது குறை இருப்பதாக பெண்கள் மனதில் தோன்றி விட்டால், அது அவர்களுடைய தாம்பத்திய உறவிலும் பிரதிபலிக்கும். விளைவு உறவின்போது அந்தப் பகுதிகளை மறைக்கப் பார்ப்பார்கள்.இது புரியாமல், நீ ஏன் இப்படிப் பெருத்துப்போய் கிடக்கிறே; அந்த ஆக்ட்ரஸுக்கு இருக்கிற மாதிரி பிரெஸ்ட் இருந்தாதான் லேடீஸ்க்கு அழகு… என்பது போன்று கணவர்கள் வார்த்தைகளை விட்டுவிட்டால்,அதை மனைவிகள் மறக்கவும் மாட்டார்கள்; கணவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
சினிமாவில் சில நடிகர்கள், தங்களுக்கு மனைவியாக நடிக்கும் பெண்களின் உடலை மிக மோசமாக உருவ கேலி செய்வார்கள். அதை நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பல கணவர்களும் தங்கள் மனைவியிடம் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த உருவ கேலி எல்லை மீறும் போது, அது தாம்பத்திய உறவையே அழித்துவிடும் என்பதை ஆண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்க வேண்டும்.இறந்த பிறகு வானத்தில் சொர்க்கத்தை தேட வேண்டாம்.அந்த அதிசய சொர்க்கம் வாழும் இந்த பூமியில்… உங்கள் வீட்டிலேயே இருக்கிறது… கொண்டாடி மகிழுங்கள்.

