கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP, PG.Dip. Diabetology, F.C.G.P.

லகம் முழுவதும் இனிப்பு கலந்த உணவைவிட,காரம் கலந்த உணவைத்தான் மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காரம் போதுமான அளவு இல்லை என்றால் உணவு ருசியில்லாமல் போய்விடுகிறது.

உணவில் காரத்தை தீர்மானிப்பதில் முதன்மையானது மிளகாய்.அடுத்தது மிளகு.உலகம் முழுக்க காரத்திற்காக இவை இரண்டில்,அதிகம் பயன்படுத்தப்படுவது மிளகாய்தான். உலகின் பல பகுதிகளிலும் மிளகாய் விளைவிக்கப்படுகிறது.அவற்றில் காரமான வகையும் காரம் குறைந்த வகையும் உண்டு.

இந்தியாவில் அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும், வங்காளதேசத்திலும் விளையும் ‘கோஸ்ட் பெப்பர்’என்கிற ஒருவகை மிளகாய்தான் ‘உலகிலேயே அதிக காரம் கொண்ட மிளகாய்’என்கிற அந்தஸ்துடன் 2009-ம் ஆண்டு வரை இருந்தது.

உள்ளூர் மொழியில் புத் ஜொலோக்கியா(Bhut Jolokia)என்று அழைக்கப்பட்ட இந்த மிளகாயை, அமெரிக்க மிளகாய் தோற்கடித்துவிட்டது. அங்கு தெற்கு கரோலினா மாகாணத்தில் விளையும் கரோலினா ரீப்பர்(Carolina Reaper) என்கிற மிளகாய்தான், 2013-ம் ஆண்டிலிருந்து உலகிலேயே மிக அதிக காரம் கொண்டதாக கின்னஸ் சாதனையில் பதிவாகியிருக்கிறது.

காரத்தில் இந்திய மிளகாய்தான் உலகின் நம்பர் ஒன் என்று இருந்ததை, இந்த அமெரிக்க மிளகாய் முறியடித்துவிட்டது. ஆனாலும்,காரம் அதிகம் சாப்பிடுபவர்களில் உலகிலேயே நாம் எப்போதுமே முதலிடத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்.

நமது முன்னோர்கள் ஒருசிலர்,பச்சை மிளகாயை கடித்து வயிறு நிறைய சாப்பிட்டதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். சிலர் அல்வாபோல் அதை சாப்பிடுவார்கள். ஆனால்,காரம் அதிகமாகிவிட்டால் கண்,மூக்கு எல்லாவற்றிலிருந்தும் நீர் வழிய ஆரம்பித்துவிடும். உச்சந்தலை சுள்ளென்று எரியும். தலை சூடாகும். வியர்த்துக்கொட்டும். உடம்பு முழுவதுமே கதகதவென்று உஷ்ணம் ஏறும். நாக்கு துடிக்கும். வயிறு எரிந்து, சிலருக்கு ஆசனவாயில் அமிலம் விட்டதுபோல் இருக்கும்.காரம் இவ்வளவு கடுமையானது.

அதனால்தான் பெரும்பாலானவர்கள் மிளகாய் வகைகளை நேரடியாக உணவில் சேர்க்காமல் இன்னொன்றோடு கலந்தே சமையலில் பயன்படுத்துவார்கள்.மிளகாயை மற்ற உணவுப்பொருட்களுடன் சேர்த்து வறுக்கும்போது, அரைக்கும்போது, வேகவைக்கும்போது அதனுடைய வீரியம், அதாவது காரத்தன்மை கொஞ்சம் குறைந்துவிடுகிறது. அதனால்தான் காரம் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனாலும்,காரத்தை அதிகமாக சேர்த்தால், உணவுப்பாதையில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏராளமான சத்துகள் மிளகாயில் இருக்கின்றன.அதிக அளவில் வைட்டமின் சி சத்து,குறைந்த அளவில் கரோட்டீன் சத்து,B6 சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இன்னொரு முக்கியச் செய்தி என்னவென்றால், அதிக காரத்தைக் கொடுக்கக்கூடிய மிளகாயில் சர்க்கரையும் இருக்கிறது. அதாவது,100 கிராம் பழுத்த மிளகாயில் 5.3 கிராம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. அதனால்தான் கிளி போன்ற சில பறவைகள் மிளகாய்ப் பழத்தைக் கொத்தி ருசித்து தின்னுகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மிளகாய் ஆங்கிலத்தில் ‘Chill’ என்றழைக்கப்படுகிறது.மற்ற நாடுகளில் மிளகாய் ஆங்கிலத்தில் ‘Pepper’ என்றழைக்கப்படுகிறது.இந்தியாதான் உலகிலேயே மிளகாயை அதிகமாக உற்பத்தி செய்கிறது. அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தியாதான் அதிகமாக மிளகாயை பயன்படுத்தவும் செய்கிறது. இந்தியாவில் பயிராகும் மொத்த மிளகாயில் 30 சதவீதம் ஆந்திராவிலுள்ள குண்டூரில் விளைகிறது.

அதேமாதிரி இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த மிளகாயில் 75 சதவீதம் ஆந்திராவிலிருந்துதான் செல்கிறது. குண்டூர் மிளகாய் வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது.மிளகாய் சேர்த்த காரமான உணவுகளை சாப்பிடுவதென்பது, ராட்சத ராட்டினத்தில் நாம் சுற்றுவதுபோன்றது. அதில் நாம் சுற்றும்போது சந்தோஷத்தைவிட பதற்றமும், பயமும்தான் அதிகமாக இருக்கும். அதேபோல்தான், அதிக காரம் சாப்பிடும்போதும் நமக்குள் மாற்றங்கள் நிகழும். எந்த வகை
மிளகாயாக இருந்தாலும் அதிக அளவில் சாப்பிட்டால் கண்டிப்பாக வயிற்றுப் பிரச்சினை ஏற்படும்.

காரம் சாப்பிட்டு பழக்கமில்லாதவர்கள் திடீரென்று ஒரு நாள் அதிக காரமான உணவுகளைச் சாப்பிட்டால் நிறைய தொந்தரவுகள் வரும். அஜீரணம், நெஞ்செரிச்சல் வயிற்றெரிச்சல், நெஞ்சு கரிப்பது, வாந்தி வருவது போன்ற உணர்வு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. சிலருக்கு வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.மிளகாயை அதிக அளவில் தொட்ட பின்பு, வினிகர் கொண்டு கையை கழுவினால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாது.மிளகாய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டு வாய், தொண்டைப்பகுதி எரிகிறதென்றால் உடனே வாழைப்பழத்தை சாப்பிடவேண்டும். எரிச்சல் குறையும்.

காரம் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் புண் வந்துவிடும் என்று பொதுவாக சொல்வதுண்டு. வயிற்றில் புண் உண்டாக மிளகாய் காரணமில்லை. வயிற்றில் ஏற்கெனவே இருக்கும் புண்ணை, மிளகாயின் காரம் அதிகப்படுத்தி வலியை உருவாக்கிவிடும். மிளகாயால் வயிற்றுப்புண் உருவாகாது. ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் மிளகாயை நேரடியாக பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.  கார உணவுகளை அவர்கள் அதிகம் சாப்பிட்டால், காற்றுக் குழாய் சுருங்கி மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

காரம் சேர்க்காவிட்டால் உணவு சுவையிருக்காதுதான்.ஆனால், அளவோடு காரம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.இனிமேல் காரத்திலும் கணக்கு பார்த்து சாப்பிடுங்கள்.

நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டும்

கேப்ஸெய்ஸின் (Capsaicin) என்று சொல்லப்படும் ஒருவித ரசாயனப் பொருள் எல்லாவிதமான மிளகாய்களிலும் இருக்கிறது. அதுதான் காரத்திற்கான அடிப்படை பொருள். இந்தப்பொருள் கெட்டுப்போன செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் மிக உபயோகமாக இருக்கிறது.இந்த கேப்ஸெய்ஸின் புற்றுநோயை தடுக்கும் சக்தியாகவும் திகழ்கிறது. அதற்காக அதிக காரத்தை எடுக்க வேண்டாம்.
அளவோடு சாப்பிடுங்கள்.