
டாக்டர் ஜி.ராஜமோகன்.
மனிதர்களின் அடிப்படை தேவைகளாக உணவு,உடை, இருப்பிடம் என்று சொல்வார்கள்.இது உண்மைதான். இதோடு பாலியல் நலமும் மிகவும் முக்கியம்.
மனிதன் இல்லற உறவில் ஈடுபட்டால்தான் மனித சமூகம் நிலைத்திருக்க முடியும்.
நமக்கு காய்ச்சல்,தலைவலி, மூட்டு வலி வருவதைப் போலவே ஆண்மைக் குறைவும் ஏற்படுகிறது.
ஆண்மைக் குறைவைப் போக்கும் மாத்திரையின் பெயர்தான்,வயக்ரா. இதன் வேதிப்பெயர் சில்டினாஃபில் சிட்ரேட்.இந்த மருந்து சந்தைக்கு வந்த கதை ஒரு சுவாரஸ்யம் நிறைந்தது.அதைப் படித்து ரசிப்பதற்கு முன்னால்,இந்த மருந்தின் அவசியம் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஆண்மைக் குறைவு என்பது பாலுறவின்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் குறிக்கிற ஒரு குறைபாடு. ஆண்குறியில் பஞ்சு போன்ற தசைகள் உள்ளன. இவற்றுக்குள் போதுமான அளவுக்கு ரத்தம் பாய்ந்தால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும்.இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமானால் விறைப்புத்தன்மை குறையும் அல்லது இல்லாமல் போகும்.
உலகில் 20 சதவிகிதம் ஆண்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது.வயது கூடும்போது இந்த சதவிகிதம் கூடுகிறது.இது ஏற்படுவதற்கு மன அழுத்தம்,பாலுறவு பற்றிய தவறான புரிதல்,கணவன் மனைவிக்கு இடையில் சந்தேகம் போன்ற மனரீதியான காரணங்கள் தான் அதிகம்.இவை தவிர, உடல்ரீதியாகவும் சில காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக நீரிழிவு நோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், ரத்தக்கொழுப்பு மிகுந்த நிலைமை, ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு பிரச்னைகள்,நரம்புக் கோளாறுகள், ரத்தக்குழாய் பாதிப்புகள், விபத்துகள், மருந்துகளின் பக்கவிளைவு,மது அருந்துவது, முதுமை இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம்.
இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரிஜிஸ்கேன், டாப்ளர் ஸ்கேன், கவர்னசோகிராபி, கோவாமெட் கருவிப் பரிசோதனை போன்ற பலதரப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு காரணம் தெரிந்து சிகிச்சை அளிக்கப்படும்.
விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்ய களிம்புகள், மாத்திரைகள், ஊசிகள்,வெற்றிடக் கருவி மற்றும் பினைல் புராஸ்தெசிஸ் எனும் செயற்கைக் கருவியை ஆண்குறியில் பொருத்தும் அறுவை சிகிச்சை,உளவியல் ஆலோசனைகள் எனப் பலதரப்பட்ட சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளன.என்றாலும் இப்போது உலகம் முழுவதிலும் இந்தக் குறைபாடு உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்திப் பயனடைவது வயக்ரா மாத்திரையைத்தான்.
இந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்தில் உள்ள பைசர் மருந்து நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் இயன் ஆஸ்டர்லோ. இதைக் கண்டுபிடித்த ரகசியத்தை அவர் வாயாலேயே கேட்போமே!
‘மாட்டை வாங்கப் போனவர் ஆட்டை வாங்கிவந்தால் எப்படி இருக்குமோ அந்த நிலைமைதான் எனக்கும் ஏற்பட்டது. நான் 1973ல் இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்கினேன். நான் கண்டுபிடித்த அந்த மருந்து இதய நோயைக் குணப்படுத்தியதை விட 1997ல் ஆண்மைக் குறைவை நீக்குவதற்குத்தான் பெரிதும் பயன்பட்டது என்பதுதான் சுவாரஸ்யம்.
1973ல் நான் சான்ட்விச் நகரிலுள்ள பைசர் நிறுவனத்தில் சேர்ந்தபோது ஆஞ்சைனா எனும் இதய வலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளச் சொன்னார்கள். ஆஞ்சைனா என்பது இதயத்தசைகளுக்கு ரத்தம் குறைவதால் ஏற்படுகிற தெஞ்சுவலி, ரத்தக்குழாய்கள் சுருங்கும்போது இந்த வலி ஏற்படுவதுண்டு. ரத்தக்குழாய்களை விரியச் செய்தால் இந்த வலி குறையும். ரத்தக்குழாய்களில் உள்ள பாஸ்போடைஎஸ்டிரேஸ் 5 எனும் என்சைம் செய்யும் வேலையைத் தடுத்தால், ரத்தக்குழாய்கள் விரிவடையலாம் என்ற கருத்தில் அந்தத் தடுக்கும் மருத்தைக் கண்டுபிடிக்க என் தலைமையில் ஒரு மருத்துவக் குழு ஆராய்ச்சியில் இறங்கியது.
12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தபின் UK 92480 என்ற பொதுவான பெயரில் ஒரு மருந்தைக் கண்டுபிடித்தோம். இதைத் தன்னார்வ நோயாளிகளுக்குக் கொடுத்துப் பார்த்ததில் அவர்களுக்கு நெஞ்சுவலி குறைந்தது.ஆனால் இதைச் சாப்பிட்ட ஆண்களுக்கு ஒரு வாரம் கழித்து ஆண்குறியில் விறைப்பு ஏற்பட்டதாகச் சொன்னார்கள். முதலில் நாங்கள் இதைப் பொருட்படுத்த வில்லை.அப்போது ஆஞ்சைனா நோயாளிகளுக்கு நைட்ரேட் மாத்திரைகளைக் கொடுப்பது வழக்கம். இந்த மருந்தையும் நாங்கள் கண்டுபிடித் திருக்கும் புது மருந்தையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் கொடுத்தால் நோயாளிக்கு என்னவாகும் என்பது குறித்த அடுத்தகட்ட ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோம். UK – 92480 மருந்தின் அளவைக் கூட்டினால் நைட்ரேட் மருந்து இன்னும் வேகமாக வேலை செய்து நெஞ்சுவலியை உடனே குறைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, எங்கள் மருந்தின் அளவைக் கூட்டினோம்.
இப்போது இதைச் சாப்பிட்டவர்கள் இதயவலியும் குறைகிறது; அதேசமயம் முன்பு ஒரு வாரத்திற்குப் பிறகு விறைப்புத் தன்மை ஏற்பட்டதற்குப் பதிலாக இப்போது தினமும் இது ஏற்படுகிறது என்று சொன்னார்கள். இதை வரவேற்றும் விறைப்புக்குக் காரணம் தெரிந்து கொள்ளவும் பல லட்ச நோயாளிகள் எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போதுதான் எங்களுக்கு ஆண்மைக் குறைவு நோய் இல்லற வாழ்க்கையில் எந்த அளவுக்கு மோசமாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது புரிந்தது.
எனவே, இதயவலிக்கு மருந்து தேவைப்படுவதைவிட ஆண்மைக் குறைவுக்குத்தான் இப்போது உடனடியாக மருந்து தேவைப்படுகிறது என்ற முடிவுக்கு வந்து,எங்கள் ஆராய்ச்சியின் திசையைத் திருப்பினோம். 1993லிருந்து ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்துப் பார்த்தோம்.இதைச் சாப்பிட்ட சில மணிநேரத்தில் ஆணுறுப்புக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களை இது நன்றாக விரித்துவிடுவதால், ரத்தம் ஏராளமாகப் பாய்ந்து,ஆண்குறி விறைத்துக் கொள்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம்.
நீரிழிவு நோயாளிகள், முதுகுத்தண்டில் அடிபட்டவர்கள், ஹார்மோன் கோளாறு மற்றும் நரம்புக் கோளாறு உள்ளவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களுக்கும் இதைக் கொடுத்துப் பரிசோதித்தோம். இது எல்லோருக்கும் ஒரேமாதிரியாகவே வேலை செய்து திருப்தியான விறைப்புத் தன்மையைக் கொடுத்தது. எனவே, 1997ல் இதற்கான விற்பனை உரிமையைப் பெற்று,ஆண்மைக் குறைவைப் போக்கும் மருந்தாகவே இதைச் சந்தைப்படுத்தினோம். இன்றைக்கு உலக அளவில் பலகோடி ஆண்கள் தினமும் இதைப் பயன்படுத்தித்தான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். ‘ என்று முடித்தார் இயன் ஆஸ்டர்லோ.

