திறமையான ஆசிரியர்கள், அன்புகலந்த கண்டிப்பு, பாதுகாப்பான சூழல், நவீன உள்கட்டமைப்பு, ஒவ்வொரு மாணவரிடமும் இருக்கும் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகம், விசாலமான விளையாட்டுத் திடல், கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக தங்கும் விடுதி,வீட்டுக்கு அருகாமை என மாபெரும் கல்வி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது தஞ்சாவூர் ஆல்வின் மேல்நிலைப்பள்ளி.

வெள்ளி விழா

சமூக அக்கறை கொண்ட சிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது… இத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய “தஞ்சாவூர் – ஆல்வின் மேல்நிலைப் பள்ளி”யின் வெள்ளிவிழா 14.02.2026 (சனிக்கிழமை) மாலை,பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…

கவிஞர் யுகபாரதி

முதன்மை விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாவட்டக் கல்வி அலுவலர்,திரு.பி.செந்தில்,ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் திரு.டி.என்.ஜெயக்குமார் போன்ற பெரியோர்களும் கலந்து கொண்டனர்.

தாளாளர் திரு.N.கலைச்செல்வன் அவர்கள்,தன் தலைமை உரையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார்.திரு.M.S.R.சிவலிங்கம் மற்றும் பொருளாளர் D.நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பரிசு பெற்ற மாணவர்கள்

நிகழ்ச்சியில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மனதை கவரும் விதத்தில் சிறப்பாக நடைபெற்றன.குழந்தைகளின் திறமைகளை கண்ட பெற்றோர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

அடையாளம்

தஞ்சாவூர் என்றதும் பெரிய கோவில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை நம் நினைவிற்கு வருவதைப் போல, தஞ்சாவூர் என்றால் “ஆல்வின் மேல்நிலைப் பள்ளி”யும், நினைவில் நிற்கிறது.தமிழ்த் திரைப்பட உலகில் 2,500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள யுகபாரதியும் நினைவில் நிற்கிறார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள், கவிஞர் யுகபாரதியின் வகுப்பாசிரியராகவும் கணிதப் பாட ஆசிரியராகவும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.

ஆசிரியர்களுக்கு முதல் மரியாதை!

கவிஞர் யுகபாரதிக்கு பாடம் கற்பித்த திருமதி. ராஜேஸ்வரி, திருமதி.நிர்மலா, திரு.நாகேந்திரன், திரு.மணிசேகரன் போன்ற ஆசிரியர்களையும் யுகபாரதி மறக்கவில்லை. தனது உரையைத் தொடங்கும்போது, தன்னை உருவாக்கிய ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி,பரிசு கொடுத்து,காலைத் தொட்டு வணங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது. இன்றுவரை தொடரும் ஆசிரியர் – மாணவர் – நண்பர்கள் உறவை நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு உணர்த்தியது.

மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டால் அவர்கள் கல்லூரி பேராசிரியராக, மாவட்ட ஆட்சியராக, திரைப்பட இயக்குநராக, கவிஞராக,உலகம் போற்றும் விஞ்ஞானியாக வரலாம் என்பதற்கு ஆல்வின் பள்ளி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழக மேடைகள் பல ஏறி இருந்தாலும் தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் தலைமையில் இயங்கும்,இன்று வரை தன்னுடன் நட்பு பாராட்டி வரும் ஆசிரியர்கள் – நண்பர்கள் முன்னிலையில் பேசுவது மனதில் ஒரு நெகழ்ச்சியை, மகிழ்ச்சியை ஏற்படுவதாகக் கூறி தன் உரையைத் தொடங்கினார் யுகபாரதி.

தனக்குக் கடினமான பாடமாக இருந்த கணிதம் கூட,தன் கணிதப் பாட ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள் என் மீது வைத்த அன்பினால்,ஒரு ஆசிரியருக்குரிய வழிகாட்டுதலால் மட்டுமே கணிதத்தில் சிறந்த மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது என்று சொல்லி தலைமை ஆசிரியர் கணேசனை நன்றி உணர்வோடு பாராட்டி,வாழ்த்தி மகிழ்ந்தார் யுகபாரதி.

பாரதிதாசன் பற்றி பாரதி எழுதிய கவிதையினை வாசிக்க செய்த – பாரதியார் வரலாற்றினை விவரிக்கும் கதாகாலட்சேப நிகழ்ச்சியில் தன்னையும் பங்கேற்கச் செய்த – இலக்கிய ஐயங்களை கண்ணியத்துடன் போக்கிய – பேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கு, தயாரிக்க வேண்டிய குறிப்புதவி நூல்களை வழங்கி என் சிந்தனைகளை நானே பெருக்கிக் கொள்ள உதவியவர்கள் என் ஆசிரியர்கள்தான்.

கவிதைகள் என நான் எழுத முயன்றவைகளை, பிள்ளைகளின் கிறுக்கல்களைக் கூட சிறப்பான ஓவியம் என்று உரைக்கும் தாயின் உள்ளத்தோடு எனது எழுத்துகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தியது – “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு” என்று என் தமிழாசிரியர்கள் கற்பித்ததை உள்வாங்கி தொடர்ந்து,நான் படித்துக் கொண்டே இருப்பதால்தான் 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களையும்,50 க்கும் மேற்பட்ட நூல்களையும் படைக்க முடிந்தது. சான்றோர்கள் நிறைந்த மேடைகளில் நானும் ஒரு பேச்சாளராக வலம் வருவதற்கும் என் தமிழாசிரியர்கள்தான் காரணம் என்றார் யுகபாரதி.

கல்வியில் மட்டுமின்றி, சமூக அக்கறையுள்ள பல நாடகங்களில் என்னைப் பங்கேற்கச் செய்த திரு.மணிசேகரன் அவர்கள் மூலம்தான் மண்ணின் வீரத்தையும் எளிய மனிதர்களின் மனக்கசிவுகளையும் உள்வாங்கி என் எழுத்துகளில் பதிவிட்டு படைப்புலகில் பயணித்து வருகிறேன்.

 

தமிழில் சற்றுக் கூடுதலான ஆர்வம் உள்ளவனாக நான் விளங்கினாலும் ஆங்கிலவழிப் பள்ளியில் பயின்ற நான், ஆங்கிலத்திலும் பிற பாடங்களிலும் மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களைப் போல் அல்லாமல், பாடக்கருத்துகளை உள்வாங்கி தேர்வெழுதும் மாணவனாக உருவாக்கியவர் ஆங்கில ஆசிரியர் திருமதி.நிர்மலா அவர்கள்.

என் மகளிடமிருந்த ஓவிய ஆற்றலை ஓரளவு அறிந்திருந்த நான், அவரிடம் இருந்த கவிதை எழுதும் ஆற்றலை அவர் ஒன்பதாம் வகுப்பு பயிலும் வரைகூட அறியாதவனாகவே இருந்தேன்.அவரது ஆசிரியர்,நான்தான் யுகபாரதி என்பதையும் என் மகள்தான் காவியா என்பதையும் அறிந்த பின்தான் என் மகளின் கவிதைகள் எழுதும் ஆற்றலை அவர்வழி நான் அறிந்தேன்.பின், என் மகளிடம் இதுகுறித்து கேட்டபோது, யுகபாரதியின் மகள் என்று என்னைக் கூறுவதை விட,
என் தந்தைதான் யுகபாரதி என்று கூறுவதைத்தான் நான் விரும்புகிறேன் என்றார்.இதை இங்குக் கூற காரணம்,ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான ஆற்றல்கள் இருப்பதை பெற்றோர்கள் – ஆசிரியர்கள் நுட்பமாக அறிந்து அவர்களை ஊக்குப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைக் கூறுகிறேன்.

மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக பாடநூல்களை படிப்பதை வலியுறுத்துவதைக் காட்டிலும், வாழ்வினில் ஆகச் சிறந்தவர்களாக உருவாக பிள்ளைகள் பல்துறையறிவு பெற வழிவகை செய்து தர வேண்டியது பெற்றோர்கள் கடமை. திருக்குறளிலும் புறநானூற்றிலும் இடம்பெறும் “கண்” என்ற சொல்லின் பொருள் ஆழத்தை உணர்ந்து ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது.

நல்ல மாணவர்களை, பிள்ளைகளை உருவாக்குவது மட்டுமல்ல,நல்ல குடிமக்களை,நல்ல அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கும்.

கவிஞர் யுகபாரதி ஆற்றிய உரை, இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் அலுவலர்களும் முன்னாள்,இன்னாள் மாணவர்களும் பொதுமக்களும்… அவரை ஒரு பிரபலத் திரைப்பாடலாசிரியர் என்று மட்டுமே வைத்திருந்த பிம்பத்தை உடைத்து, புகழின் உச்சிக்குத் தான் சென்று கொண்டிருந்தாலும் அவரிடமிருந்த, தனது ஆசிரியர்களை – நண்பர்களை தொடர்ந்து மதிக்கும் பண்பினையும், ஆசிரியர்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவரின் வாழ்க்கை அனுபவச் செய்தியையும் பெற்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கித் தந்து அவர்களை மகிழ்விப்பதற்கும் மேலாக,பல நூல்களை வாங்கித் தந்தும் – நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகக் கையாள கற்றுத் தந்தும், கண்காணித்தும், ‘கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று அவர்கள் உணரும் வகையில் அவர்கள் தம் பொழுதுகளைப் போக்காமல் பயனுள்ளதாக ஆக்கும் வகையில் தாங்களும் ஒவ்வொரு செயலிலும் முன்னுதாரணமாக விளங்கி தகுந்த சூழலை உருவாக்கித் தருவது பெற்றோர்கள் தம்கடமை என்பதையும் நிகழ்விற்கு வந்திருந்தோரை உணர வைத்தது.

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஒரு அறிவார்ந்த வழிகாட்டியாக தன்னை நினைக்கும் வகையில் கவிஞர் யுகபாரதியின் உரை அமைந்தது.

அனைவரும் வாசிப்பை நேசிப்போம் வாழ்க்கையை உயர்த்துவோம் சமூகத்தை உயர்த்துவோம், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தொடரை நிலைபெறச் செய்வோம்.

ஆங்கிலத்தில் பேசலாம்

“ஆங்கிலம் தெரிந்தால் அகில உலகத்தையும் ஆளலாம்”என்று சொல்வார்கள். மாணவர்கள் ஆங்கில மொழியில் பயிற்சி பெற்று தங்கு தடை இன்றி பேசுவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆல்வின் பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது.இதன் விளைவாக மாணவர்கள் படித்து முடித்த பிறகு உயர்ந்த பதவிகளுக்கு செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

நல்ல நிர்வாகம்

காலையிலும் மாலையிலும் ஒலிப்பது ஒரே மணிதான். காலையில் கசக்கும். அது பள்ளி முடியும் போது மட்டும் ஏன் இனிக்கிறது?

மாணவர்களை நேசிக்கும் பள்ளியில், காலையில் அடிக்கும் மணியும் இனிப்பாக இருக்கும்.

உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து மட்டும் பாடம் நடத்துவதில்லை; தங்கள் இதயத்தில் இருந்து பாடம் நடத்துகிறார்கள்.

ஓய்வின்றி உழைக்கும் தலைமை ஆசிரியர்

ஆல்வின் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் அவர்கள், காலையில் 5 மணிக்கு பள்ளிக்கு வந்தாலும்,இரவு 8 மணி வரை கூட மாணவர்களுக்காக
பணியாற்றக் கூடியவராக இருக்கிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அருகில் உட்கார்ந்து அன்போடு, அக்கறையோடு பாடத்தை நடத்துவதாக பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

ஆல்வின் மேல்நிலைப்பள்ளி 50 ஆண்டுகள்,100 ஆண்டுகள் கடந்து
கல்விப் பணியாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்..!

-பழ.குணசேகரன்,
சென்னை.

(Allwin Higher secondary school,Sundaram Nagar,
Thanjavur -613 007)