
-மெட்டிவளவன்.
தன்முக அன்பு என்பது புதுமையான கருத்து போலத் தோன்றினாலும் எளிமையானது.நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் செயல்களைச் செய்வது உள்ளத்துக்கும் உற்சாகம் தரும்.உள நலம்,வெளியுலகில் நாம் செய்யும் எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டுடனும் நேர்த்தியாகவும் செய்ய உதவும்.
ஆண்,பெண் இருபாலருமே தன்முக அன்பைக் காட்டுவதில்லை என்றாலும் பெண்கள் கூடுதல் கமையைச் சுமக்கிறார்கள் எனலாம். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் குடும்பத் தலைவி தேவையான உணவு, மருந்து போன்றவற்றை வேளாவேளைக்குக் கொடுப்பார்.ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெளியே சொல்லக்கூடமாட்டார்.சொன்னாலும் பரிவுடன் பேசவோ இரண்டு நாட்கள் அடுப்படி,வீட்டு வேலை எதுவும் செய்யாமல் ஓய்வாக இரு என்று புரிதலையும் பரிவையும் காட்ட ஆள் இல்லை என்ற எண்ணம் மேலோங்க தன்னுடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளமாட்டார்.
எத்தனை வீடுகளில் பார்த்திருப்போம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் என்ன உணவு பிடிக்கும் எந்தப் பக்குவத்தில் சமைத்தால் பிடிக்கும் என்பது குடும்பத் தலைவிக்கு அத்துப்படியாக இருக்கும்,பார்த்துப் பார்த்துச் சமைப்பார். ஆனால் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு கடைசியாகச் சாப்பிடும் போது அவருக்கு அந்த உணவு இல்லாமலும் போகலாம்.இன்னும் சில வீடுகளில் எல்லோருக்கும் புதிதாகச் சமைத்த உணவைப் பரிமாறிவிட்டு வீட்டுப் பெண்கள் மீந்துபோன முந்தைய நாள் உணவைச் சாப்பிடுவார்கள்.
இவை எல்லாமே தன்முக அன்பு செய்ய தடையாக இருக்கின்றன.
தனக்கு மிகவும் பிடித்த உணவு குடும்பத்தில் இன்னொருவருக்குப் பிரியமானதாக இருந்தால் விட்டுக்கொடுப்பவர்களைப் பார்த்திருப்போம். அல்லது விலை அதிகமாக இருந்தால் பணத்தை மிச்சப்படுத்தும் விதமாக,எனக்கு வேண்டாம்,என்பார்கள்.இவையெல்லாமே தன்முக அன்பு செய்வதை முறியடிக்கும் செயல்கள். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் விலை அதிகமான உணவைச் சாப்பிடலாம் .ஆனால், நான் அதற்குத் தகுதியானாவள்(ன்) அல்ல,என்பது எத்தனை வன்முறை மிகுந்த வலியுறுத்தல். நம்மை நாமே ஏன் இப்படி நோகடித்துக்கொள்ள வேண்டும்.ஒருவர் தியாகிப் பட்டம் கட்டிக்கொண்டு உணவு மேசையில் திரும்பி அமர்ந்திருப்பதை விடவும் எல்லோரும் அந்த உணவைப் பங்குபோட்டுச் சாப்பிடலாமே.அது இன்னமும் சிறப்பான செயல் அல்லவா.
இதில் இன்னொன்றையும் புரிந்துகொள்ளவேண்டும்.எனக்கு வேண்டாம்.நீங்கள் சாப்பிடுங்கள்,என்று நாம் ஒதுங்க ஒதுங்க காலப்போக்கில் மற்றவர்களும் நம்மை மறந்துவிடுவார்கள். அவருக்கு அதெல்லாம் பிடிக்காது,என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
நான் முக்கியம், என்னுடைய உடல், உள்ளம் இரண்டையும் பேணுவது என் உரிமை,என் தேவைகளை நானே நிறைவேற்றிக் கொள்வதில் தவறேதுமில்லை.
இந்த வாக்கியங்களை உரக்கப்படியுங்கள். ஒரு முறை அல்ல, பல முறை,நீங்கள் சொல்வதை உங்கள் உள்ளம் முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரையில் வாய்விட்டுச் சொல்லுங்கள்.நான் முக்கியம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முதல்படி.அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அடுத்த படி.
பணியிடத்திலும் தன்முக அன்பைச் செலுத்தும் வழிகளைப் பின்பற்றலாம். எடுத்துக்காட்டாக, கணினித் திரையை அதிகநேரம் பார்ப்பது கண்களை களைப்புறச் செய்கிறது. தொடர்ந்து வேலை செய்யும் போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் காலார நடப்பது நல்ல பழக்கம். பெரும்பாலும் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பவர்கள் இதைக் கட்டாயம் செய்யவேண்டும். இதுபோன்ற இடைவேளைகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வது பணியைச் சிறப்பாகச் செய்ய உதவும்.அது போலவே, அலைபேசியில் செலவிடும் நேரத்தையும் குறைத்து வேறு விஷயங்களில் மனதைச் செலுத்துவது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கையில் இதை எப்படிச் செயல்படுத்தலாம் என்று கேட்கிறீர்களா? அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, முறையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது, செல்லப்பிராணி அல்லது செடி வளர்ப்பது,இசை, ஓவியம்,நடனம், கைவேலை, தோட்டவேலை போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது,இவை எல்லாமே தன்முக அன்பை வெளிப்படுத்த உதவும் செயல்கள்.
இருபத்து நான்கு மணி நேரத்தில் நமக்கென குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்குவது அவசியம்.அந்த ஒரு மணி நேரத்தில் நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதைச் செய்யலாம்.இதற்கு மற்றவர்களின் அனுமதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை.

