மக்களின் உடல் நலத்திற்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மனநல ஆலோசகர்கள் பாடுபட்டால் போதாது.. அரசு, தனியார், தொழில், வியாபார நிறுவனங்கள் கூட்டாக செயல்பட வேண்டும்.

அந்த வகையில் சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் துணி வியாபார நிறுவனமான சேகர் எம்போரியம் மற்றும் விஷ்ணு யோகா மையமும் இணைந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் யோகா மற்றும் தியானம் செய்வதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் யோகா நிபுணர் டாக்டர் ஏ.எஸ்.அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நமக்கு வரும் நோய்களில் 90 சதவீதம் மனதால் ஏற்படுகிறது. மனம் நலமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியாக வாழ வழி தெரியாமல்.. மன இறுக்கத்திற்கு ஆளாகி பலரும் அவதிப்படுகிறார்கள். நமது வீடுகளில் ஒரு ஆமை புகுந்தாலே நல்லதல்ல என்பார்கள். ஆனால், கல்லாமை, அறியாமை, இயலாமை, முயலாமை, பொறாமை என நிறைய ஆமைகள் புகுந்துள்ளன. இதனால் நம் நிம்மதி பறிபோகிறது. போதாக்குறைக்கு தொலைக்காட்சி தொடர்கள் நம்மை எதிர்மறை சிந்தனை உள்ளவர்களாக மாற்றுகிறது.

நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக நாம் மாற வேண்டும். எல்லாம் நன்மைக்கே; இதுவும் கடந்து போகும் என்று எண்ணினால் மனபாரம் இருக்காது. குழப்பமான மனநிலை ஏற்படாது. நேற்று நடந்ததை எண்ணி கலங்குகிறோம்; நாளை என்ன நடக்குமோ என்று அஞ்சுகிறோம்; நிகழ்காலத்தில் வாழத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் நான் சாதிக்கப் போகிறேன்.. இந்த நாள் நல்ல நாள் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

தியானம் பழகினால் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வது உறுதி. மனதை ஒருமுகப்படுத்தி சாதனைகள் புரியலாம். செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அற்புத ஆற்றல்களையும் பெறலாம். அடக்கப்பட்ட மனது நமது நண்பன், அடங்காத மனது நமது விரோதி. இன்று நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு காரணம் நம் மனங்கள்தான். எனவே முள்ளை முள்ளால் எடுப்பது போல் மனதை மனதால்தான் அடக்க முடியும்; வெல்ல முடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம்.

புத்தகம் சி.டி. பார்த்து யோகாவையும், தியானத்தையும் முறையாக கற்றுக் கொள்ள முடியாது. நல்ல குருவை தேர்ந்தெடுத்து தியானம் பழகுங்கள். ஆரோக்கியமாக அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்.

 

இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் தொடர்புக்கு
டாக்டர் ஏ.எஸ்.அசோக்குமார், சென்னை
9444026341.