
ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200 கிலோ தேனை,தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை,10,000 கிமீட்டர் பறந்து வந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் விட்டுச் சென்ற ஆமை யின் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள், மியான்மார் அந்தமான் வழியே கடலோடு சென்று தாய்லாந்தில் தன் குடும்பத்தோடு சேரும் செய்தியை படிக்கும்போதும் இயற்கையின் அறிவும் ஆற்றலும் திகைக்க வைக்கிறது.தேனீயும், நாரையும்,ஆமையும் எந்த பல்கலைக்கழகமும் சென்று இதனை கற்று வரவில்லை.அதே போல்தாம் இயற்கை தரும் மணங்களும். மல்லிப்பூவோ, செண்பகப்பூவோ, மஞ்சளோ,கிராம்போ எப்படி இந்த நறு மணத்தை சேற்றிலிருந்தும் செம்மண்ணிலிருந்தும் தயாரித்துத் தருகிறது என்பதை எண்ணும் போதும் வியக்க வைக்கிறது.
அப்படி ஒரு ஆச்சரிய மூட்டும் மணத்தைத் தன்னுள் கொண்டு, உலகையே நேசிக்க வைத்த ஒரு தாவரப் பொருள் தாம் சாதிக்காய்.
சாதிக்காய் நமது நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது ஒரு பெரிய வரலாறு.நமது இதழுக்கு வரலாறு முக்கியம் இல்லை… மருத்துவ ரகசியங்களை தேடிக் கண்டுபிடித்து சொல்வது தான் முக்கியம்.
சாதிக்காயின் கனி ஊறுகாயாக பயன்படும். அதன் உள்ளிருக்கும் விதைதான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி என்பது. இதில் சாதிக்காய் எனும் விதைக்கும்,சாதிபத்திரி இதழுக்கும் தான் மணமும்,மருத்துவ குணமும்,மார்க்கெட் மவுசும் கூட கூடுதலாய் உண்டு.
சாதாரணமாய் சாதிக்காய் அதிகம் பயன்படுவது,ஆண் களுக்கு காமம்பெருக்கிச் செய்கைக்காகவும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான்.சித்த, ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறில்லாமல் வரும் தம்பதிக்குக் கொடுக்கும் மருந்துகளில் 100க்கு 90 சதவீதம் சாதிக்காயும் சாதி பத்திரியும் அங்கம் வகிக்கும்.காமம் தூண்டும் மணத்தைக் கொன்டது இது என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு,இது உள்ளே வெளியே இரண்டு பக்கமும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.
தாம்பத்திய உறவில் வேட்கையை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டென உறுதிப் படுத்தினர்.
வெறும் உடலுறவில் நாட்டம் மட்டுமல்ல, விந்தணுக்களின் எண்ணிக்கை பெருக இந்த சாதிக்காய் உதவிடும்.சாதிக்காய் சேர்ந்த மூலிகை மருந்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவினால் வரும் குழந்தைப் பேறின்மைக்கு சரியான மருந்து.ஒருவித இனிப்பு சுவையுடன் கூடிய தனித்துவ மணம் சாதிக்காயில் இருப்பதற்கு அதன் Myristicin சத்தே காரணம். இந்த சத்து சாதிக்காய் தவிர கேரட்டிலும் உண்டு.இருந்தாலும் சாதிக்காயில்தான் அதிகம்.சாதிக்காய் இரத்தக் கொழுப்பை குறைப்பதிலும் வெள்ளணுக்களில் ஏற்படும் இரத்தப் புற்று நோயைத் தடுப்பதிலும் கூட பணிபுரிகிறது என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.
முதுமையின் அடையாளம் தோல் சுருக்கம்.தோலின் இளமை தோற்றத்திற்குரிய சத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்குவதால் இந்த தோல் சுருக்கம் நிகழ்கிறது.சாதிக் காயின் Myristicin சத்து அந்த சுருக்கத்தை ஏற்படுத்த விடாமல் தடுப்பதை அறிந்த அழகுக் கம்பெனியார்கள் சாதிக்கயை Anti- ageing களிம்புகளில் அதிகம் சேர்க்கின்றனராம்.
சாதிக்காய் ஒரு அடிமைப்படுத்தும் போதைப்பொருளோ என்ற சந்தேகம் கூட இடையில் அறிவியலாளருக்கு வந்த துண்டு.ஆனால் பல ஆய்வுகள் செய்து அது நரம்புமண்டலத் தில் வேலை செய்தாலும் அது போதையூட்டும் வஸ்து அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.நரம்பு மண்டலத்தில் அது நற்பணி ஆற்றுவதால், மன அழுத்த நோய்க்கு, மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும்,மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும்
சாதிக்கயை பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.
துரித வாழ்வியலில் நாம் தொலைந்து போன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் விளைவாய், குடும்பங்கள் பிரிதல், விவாகரத்து பெருகி வருகிறது.சாதிக்காய்த் தூள் ஒரு சிட்டிகை பசும்பாலில் இரவில் படுக்கும் போது சாப்பிடுவது இந்த மனஅழுத்தம் போக்கி, நிறைந்த நரம்புவன்மையும், சீரான தூக்கமும் தந்துவிடும்.
அடிக்கடி நிகழும் வயிற்றுப்போக்கிற்கு, சில நேரங்களில் சில வைரஸ் காரணமாக இருக்கும். பாக்டிரீயாக்களால் வரும் வயிற்றுப்போக்கிற்கு எதிர்நுண்ணுயிரி மருந்து கொடுத்து உடனே வயிற்றுப்போக்கை நிறுத்திட இயலும். வைரஸுக்கு அந்த பாச்சா பலிக்காது. ஆனால் சாதிக்காய்த்தூள் வைரஸினால் வரும் வயிற்றுப்போக்கையும் நிறுத்தி நம்மைக் காக்கும்.ஒரு மணமூட்டிக்கு இப்படி ஒராயிரம் மருத்துவ குணம் உண்டு.இதனை முழுமையாய்ப் புரிவது கடினம்.புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல்,அதனை எவ்விதத்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமை.

