டாக்டர் பி.எம்.நற்குணம், MD,DGO.

மார்பகங்கள் என்பவை பால் சுரப்பு நாளங்களைக் கொண்டவை.இந்த நாளங்களைக் சுற்றி கொழுப்பு திசுக்கள் சூழ்ந்துள்ளன.

சிலருக்கு மார்பகங்கள் சிறியதாக இருக்கலாம்;சிலருக்குப் பெரியதாக இருக்கலாம்.மார்பகங்களின் அளவு பெரும்பாலும் மரபு சார்ந்தே அமைகிறது.

மார்பகங்கள் என்பதைப் பெரும்பாலும் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கிறார்களே தவிர, அதன் உண்மையான வேலை, குழந்தை களுக்குத் தாய்ப்பால் தர உதவுவதுதான். மார்பகங்கள் சிறியதாக இருந்தால் பால் குறைவாகத்தான் சுரக்குமோ என்று சிலருக்கு சந்தேகம் வரக்கூடும். மார்பகங்களின் அளவுக்கும் பால் சுரத்தலின் அளவுக்கும் சம்பந்தம் இல்லை.

கவலை வேண்டாம்

அதேபோல், இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்காது; சிறிய அளவில் வித்தியாசம் இருக்கலாம். இது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

தட்டையான மார்பகம் இருந்தால், தான் கவர்ச்சியில்லாதவர் என்று பலர் நினைக்கிறார்கள்.இந்த மனோபாவத்திலிருந்து வெளியேவர வேண்டும். ஹார்மோன் ஊசிகளைப் போடுவதோ, ஆபரேஷன் செய்துகொள்வதோ சரியான தீர்வல்ல.அது பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம்.நம் உடலை நாம் நேசிக்கப் பழக வேண்டும்.

என்னதான் சொன்னாலும், நான் தொடர்ந்து அது பற்றிக் கவலைப்படுகிறேன் என்பவர்கள், ‘Padded Bra’ என்று சொல்லக்கூடிய உள்ளாடைகளை வாங்கி அணியலாம். சிலவகையான உடற்பயிற்சிகள் மிகச் சிறிய அளவில் மார்பகத் தோற்றப் பொலிவுக்கு உதவலாம்.ஆனால், இவற்றையெல்லாம் விடச் சிறந்த தீர்வு, நம் உடலை அது எப்படி இருந்தாலும் நாம் நேசிப்பதுதான்.

தட்டையான மார்பகங்களைப் பிரச்சினைக்குரிய விஷயமாகப் பார்ப்பது போல், சிலருக்குப் பெரிய மார்பகங்கள் பிரச்சினையாக இருக்கிறது.மார்பகம் தொய்ந்துவிட்டால் சிலருக்கு முதுகுவலி வரலாம்.நிமிர்ந்து நின்றால் மார்பகங்கள் பெரிதாகத் தெரியும் என்று சிலர் கூன் போடுவார்கள்.இதுவும், கனத்த மார்பகங்களும் சேர்ந்து நிரந்தர கூன் ஆகலாம்.இப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.இளம் பெண்களுக்கு தாய்மார்கள் தான் சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.அவர்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான முறையில் விளக்கம் தர வேண்டும்.தேவை இல்லாத குழப்பங்களுக்கு இடம் தரக்கூடாது.