
சமீபகாலமாக நகரங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன ஊர்களில் கூட ஜிம் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. பலரும் கட்டணத்தில் சலுகை,குறைவாக கட்டினால் போதும் என்று ஆசைப்பட்டு ஆண்டு கட்டணத்தை செலுத்தி ஆசையோடு சேர்வார்கள்.ஆனால்,முழுசா ஒரு வாரம் கூட சரியாக போகமாட்டார்கள்.
பொதுவாக ஜிம் நல்லதா…வாக்கிங் போவது நல்லதா? என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
எடை தூக்குவது,ஜிம் பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றால் உடலில் தசைகள் வலுப்பெறும்.உடல் கட்டமைப்பு அழகு பெறும்.எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.எலும்பு மூட்டுகள் வலுப்பெறும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, தசைகளில் குளுக்கோஸ் அதிகமாகச் சேமிக்கப்படும்.
உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். சோர்வு இருக்காது. மாறாக நடைப்பயிற்சி,நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற காற்றலைப் பயிற்சிகளைச் (Aerobic Exercises) செய்யும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் பாகங்களுக்கு அதிக ரத்தம் செல்லும்.
அப்போது ஆக்ஸிஜன் எல்லா உறுப்புகளுக்கும் அதிகமாகக் கிடைக்கும்.இதன் பலனால், உறுப்புகள் எல்லாமே சுறுசுறுப்படைந்து அதிகத் திறனுடன் இயங்கும்.குறிப்பாக, இதயம் சீராக இயங்கும்.
ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.சுவாசம் அதிகரிக்கும். நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு அதிகரிக்கும்.சுவாசத் திறன் மேம்படும். சிறுநீரகம், நுரையீரல்,தோல் போன்றவற்றின் வழியாக உடற்கழிவுகள் விரைவில் வெளியேறும்.ஆக மொத்தத்தில் இதயத்துக்கு மட்டுமல்லாமல் காற்றலைப் பயிற்சிகளால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.ஆகவே, தினமும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் நடைப்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களுக்கு இதயப் பாதுகாப்பு கிடைக்கும். அதேவேளை,ஜிம் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதயத்தில் பிறவியிலேயே ஏதாவது பிரச்னை இருந்து அவை வெளியே தெரியாமல் இருக்குமானால், ஜிம் பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தாகிவிடும். ஆகவேதான்,இந்த எச்சரிக்கை.
-ஆனந்த சிவா,
ஹெல்த் அண்ட் பியூட்டி(Health and beauty)

