குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகிற வரைக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் தரமுடியாத சூழல்கள் சில உருவாவதும் இயற்கை.சில அம்மாக்களுக்குத் தாய்ப்பால் குறைவாகச் சுரக்கலாம்;தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்குத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; மார்பில் ஏதாவது நோய் ஏற்பட்டிருக்கலாம்; புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கலாம்;மார்பகம் அகற்றப்பட்டிருக்கலாம்; அல்லது குழந்தை பிறந்ததும் அம்மா இறந்திருக்கலாம். வேலைக்குப் போகும் அம்மாக்களால் இடைப்பட்ட நேரங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். இப்படிப்பட்ட நேரங்களில் தாய்ப்பாலுக்கு மாற்றாகப் பசும்பால் தருவதுதான் சிறந்த வழி.காரணம், தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே உள்ளன.

பால் பவுடர்கள் தரலாமா?

தாய்ப்பால் சரியாகக் கொடுக்க முடியாத குழந்தைகளுக்கு உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் பசும்பாலுக்கு அடுத்தபடியாக செயற்கைப் பால் பவுடர்கள் இன்றைக்கு அதிக இடம் பிடித்துள்ளன.அதே நேரம், எந்தச் செயற்கைப் பாலை, எந்த வயதில், எவ்வளவு கொடுப்பது என்பதில் பல அம்மாக்களுக்குக் குழப்பமும் உள்ளது.குழந்தையின் வயதைப் பொறுத்து அளவு மாறுபடும்.பல்வேறு பெயர்களில் பால் பவுடர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.சந்தேகம் இருந்தால் குழந்தை மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை பெறுவது நல்லது.

பவுடர் பாலின் குறைகள்

எந்த ஒரு பவுடர் பாலும் தாய்ப்பாலுக்கு இணையாகாது.நோய் எதிரணுக்கள் (Antibodies) பவுடர் பாலில் இல்லவே இல்லை.எனவே, தாய்ப்பால் இல்லாமல் பவுடர் பாலை மட்டுமே நம்பி இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம்.

குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் அமினோ அமிலங்கள் பல இவற்றில் இல்லை. முக்கியமாக,சிஸ்டின், மீத்தியோனின் எனும் அமினோ அமிலங்கள் இல்லை. இதன் விளைவால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இல்லை.இதனால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

இவை தவிர பவுடர் பாலைக் கலக்கி கொடுக்கும்போது சுத்தம் கடைபிடிக்கப்பட வில்லை என்றால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

பவுடர் பாலைச் சாப்பிடும் குழந்தைக்கு வயிற்று உப்பிசம்,வாயு சேருதல்,மலச்சிக்கல் போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.பவுடர் பாலைக் கலக்குவதற்கு நேரம் செலவாகும். அம்மா கலக்கியப் பாலைக் குழந்தை சரியாகக் குடிக்கவில்லை என்றால்,பால் வீணாகும்.

பணச் செலவு அதிகமாகும்.எந்தப் பிராண்ட் பவுடர் பால் நல்லது என்பதில் குழப்பம் உண்டாகும். பவுடர் பால் சாப்பிட்டு வளரும் குழந்தைக்குப் பால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.இரவு நேரத்தில் உறக்கக் கலக்கத்தில் குழந்தைக்குப் பவுடர் பாலைக் கலக்கிக் கொடுப்பது பல அம்மாக்களுக்குத் தொந்தரவாக இருக்கும். பவுடர் பாலைக் கலக்கியதும் உடனுக்குடன் குழந்தைக்குக் கொடுத்துவிடுவதே நல்லது. இல்லையென்றால், நோய்க்கிருமிகள் தொற்றி குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.