னித வாழ்வில் பல்வேறு வகையான போராட்டங்கள், ஏமாற்றங்கள், இன்ப, துன்பங்கள், துரோகங்கள் இடம்பெறலாம். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாதிக்க நகைச்சுவை உணர்வு அற்புதமாக உதவும்.

நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வ மானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு பலத்தைத் தருகிறது.மிகக் கடினமான சூழ்நிலையில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள,அந்த கடினமான சூழ்நிலையை எதிர்த்துப் போராட இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது.

“நகைச்சுவை உணர்வுதான் மனித குலத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த வரப்பிரசாதம்” என்கிறார் மார்க் ட்வையின் என்ற அறிஞர்.

“நகைச்சுவை உணர்வு என்ற ஒன்று எனக்கு இல்லையென்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.” இதைச் சொன்னது வேறு யாருமல்ல நமது மகாத்மா காந்தி.

நகைச்சுவை என்பது உலகத்தின் எல்லா வரலாற்று, அறிஞர்களாலும் விவாதிக்கபட்ட ஒன்று.சிக்மண்ட் ஃபிராய்ட் ஒரு வளர்ச்சியடைந்த, முதிர்ச்சியடைந்த மற்றும் பக்குவப்பட்ட மனநிலைதான் நகைச்சுவை என்கிறார்.நிறைய உளவியல் சிக்கல்களை,மனம் இந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டுதான் சரி செய்கிறது என்கிறார்.

நாம் ஒரு சூழலை நகைச்சுவை மனப்பான்மையால் இலகுவாக மாற்றுவதன் மூலம், அதில் உள்ள பிரச்னைகளின் வேர்களை எந்தப் பதட்டமும் இன்றி தெரிந்துகொள்ளலாம்.பிறகு அந்தப் பிரச்னையை நாம் நிதானமாகக் கையாளலாம்.

எந்த ஒரு பதட்டமும் இன்றி தெளிவாகவும், நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு பிரச்னையை அணுகும்போது நாம் அந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக மீண்டு வருவது மட்டுமல்லாமல், அந்தப் பிரச்னையின் பாதிப்பில் இருந்தும் நமது மனதையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

நகைச்சுவை என்பது ஒரு ஸ்பிரிங்போல, வாழ்க்கையின் அத்தனை மேடு பள்ளங்களில் இருந்து நமது உடலையும் மனதையும் காப்பாற்றுகிறது. அந்த ஸ்பிரிங் இல்லையென்றால் நாம் ஒவ்வொரு பிரச்னையிலும் விழுந்து,எழுந்து அடிபட்டு போய்க்கொண்டிருப்போம்.

அதேபோல இந்த அத்தியாவசிய நகைச்சுவை உணர்வை சில பேர் தவறாகப் புரிந்துகொண்டு சிரிப்பு வைத்தியம் (Laugh therapy) என்று சிரித்தால் வியாதி எதுவும் வராது என்று சொல்லி மக்களை தினமும் காலை எழுந்தவுடன் அரை மணி நேரம் சிரிப்புப் பயிற்சி எடுக்கச் சொல்கின்றனர்.

சில பேர் அதை நம்பிக்கொண்டு அதிகாலையிலேயே கடற்கரை சென்று ஒரு கூட்டமாக நின்றுகொண்டு, வசூல் ராஜா படத்தில் வரும் பிரகாஷ்ராஜ்போல சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் அது எந்தப் பலனையும் தராது. உதட்டளவில் சிரிப்பது என்பது நிச்சயம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நகைச்சுவையின் நோக்கம் என்னவென்றால், நாம் நமது சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும். ஒரு கடினமான சூழலை இலகுவாக மாற்ற வேண்டும். அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்தச் சூழலை நாம் முழுமையாக அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழலில் உள்ள நகைச்சுவை அம்சத்தை நமது நுண்ணறிவால் உணர்ந்து கொள்ள வேண்டும்.அப்படிச் செய்யும்போது அந்த நகைச்சுவை உணர்வு இயல்பாகவே எந்த முனைப்பும் இன்றி நமது மன இறுக்கத்தைக் குறைக்கும்.

இறுக்கமான சூழ்நிலையும், இறுக்கமான மனமும்தான் ஒரு பிரச்னையை எதிர்கொள்வதில் நமக்குச் சிக்கல்களைத் தரும்.அந்தச் சிக்கலில் இருந்து நம்மை முழுமையாக மீட்டுக்கொண்டு வரவேண்டுமானால்,நிச்சயம் நாம் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.