
-டாக்டர் பா.பாசுமணி,
குடல் சிறப்பு நிபுணர்.
வயிறு நிறையச் சாப்பிடுவது நல்லதல்ல.உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை,உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,சாப்பிட்ட பிறகு அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் மீண்டும் ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரைப்பையில் நன்றாகவோ பாதியோ அரைக்கப்பட்ட நிலையில் உணவு இருக்கும்போது, மேலும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படும். அசைவ உணவுகளைச் சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பது,கோலா பானங்களைக் குடிப்பது,ஜங்க் ஃபுட் எனும் நவீன உணவுப் பழக்கம் போன்றவை முற்றிலும் தவறானவை.
சாப்பிடும்போதும், சாப்பிட்ட பின்னரும் அவசியம் இல்லாமல் தண்ணீர் அருந்துவதே தவறுதான்.பலர், காலை உணவுகளைத் தவிர்த்துவிடுகிறார்கள்.காலை எப்போதுமே ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
இரவு எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளலாம். அதேபோல, சாப்பிடும்போது சமைத்த உணவுகளையும் சமைக்காத உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பின்னர், உடனே பழங்கள் சாப்பிடுவதும் தவறு. உணவைச் சீரான இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும்.
ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

