-ஷைலஜா.

மீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர், விரதம் இருந்தால் புற்றுநோய் வளராமல் மறைந்து விடும்… ஒழிந்து விடும் என்று சொல்லியிருந்தார். இந்த கருத்து உண்மைதானா என்று அலசி ஆராய்ந்தோம்.

விரதம் இருப்பது புற்றுநோயை முழுமையாக ஒழிக்காது என்றாலும்,அதைத் தடுக்கவும், சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது உடலில் உள்ள செல்களின் புதுப்பித்தலை ஊக்குவிப்பதன் மூலமும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும்,புற்றுநோய் சிகிச்சைகளுக்கு (கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை) புற்றுநோய் செல்களை மிகவும் உணர்திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலமும் செயல்படுகிறது. இருப்பினும், விரதத்தை புற்றுநோய் சிகிச்சைக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது. மேலும் பெரிய அளவிலான ஆய்வுகள் தேவை.

விரதம் இருக்கும் போதும் மிகக் குறைவான கலோரிகள் உண்ணும் போதும் உடலின் கேன்சர் செல்கள் நோய் எதிர்ப்பு செல்களால் Autophagy என்னும் முறையில் கொல்லப் படுகின்றன.இந்த ஆராய்ச்சிக்கு ஜப்பானைச் சேர்ந்த யோஷினாரி ஓஷுமி என்னும் அறிஞருக்கு 2016 இல் நோபல் பரிசு தரப்பட்டிருக்கிறது.

ஆகவே விரதம் இருப்பது நிச்சயம் நன்மைகள் தரவல்லதே.ஆகவே சொன்னது யாராக இருந்தாலும் அதில் சிறிது அறிவியல் உண்மை உள்ளதை மறுக்க முடியாது என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர். ராமானுஜம்.

விரதம் என்பது அவ்வப்போது இருக்கலாம். கலோரிகளை குறைக்க வேண்டும். நீண்ட நாட்கள் பட்டினி இருந்தால் வைட்டமின்கள், முக்கியமான தாதுக்கள் ( minerals), போன்றவை கிடைக்காமல் எதிர்ப்பு சக்தி குறையக் கூடும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவைத் தவிர்ப்பது உண்மையிலேயே நல்லதா?

நம் வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றை கவனித்துப் பாருங்கள். உடல்நலம் சரியில்லாவிட்டால் எதையும் சாப்பிடாது. அதற்கு மிகப் பிடித்த உணவைக் கொடுத்தாலும் சாப்பிடாது. செரிமானம் சரியில்லை என உணர்ந்தால் வெளியே போய்,புல், இலை போன்ற எதையாவது சாப்பிட்டு,சற்று நேரத்தில் வாந்தி எடுத்து விடும்.அப்படி தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும்.ஆனால், உடம்பு சரியில்லாவிட்டாலும் சாப்பிடக்கூடிய ஒரே ஜீவன் மனிதன்தான்.

பட்டினி கிடப்பது என்பதை நல்ல உடல்நிலையில் இருக்கும்போது, பசியோடு இருக்கும்போது உணவைத் தவிர்ப்பது எனப் புரிந்துகொள்ள வேண்டாம்.இதை, விரதம் அல்லது உபவாசம் என்று புரிந்துகொள்ளலாம். உடல்நலமில்லாதபோது பட்டினி இருப்பது என்பது மிகச் சிறந்த மருத்துவம் என்பதில் சந்தேகமில்லை. உடல் எடையைக் குறைக்க,ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க,பல வகையான நோய்களின் வீரியத்தைக் குறைக்க… என பட்டினி என்பது மிகவும் உபயோகமாக இருக்கும்.பட்டினி என்பது இன்று, நேற்று வந்ததல்ல. காலங்காலமாக வழக்கத்தில் உள்ளதுதான்.அதன் பலன்களை நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால்தான்,மத நம்பிக்கைகளோடு இணைத்துச் சொன்னார்கள்.

குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, இயற்கையான உணவுகளை உட்கொண்டு,பட்டினி இருப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருநாளைக்கு இருவேளை உண்ண வேண்டும் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது.வாரம் ஒருநாள் பட்டினி இருக்க வேண்டும் என்று நம் மூதாதையர் சொல்லியிருக்கிறார்கள்.

எடைக்குறைப்புக்கு பெஸ்ட்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைகளில் எடைக்குறைப்புக்கான சிகிச்சையில் இயற்கை உணவுதான் பரிந்துரைக்கப்படுகிறது.பட்டினியாக இருப்பதும் அதில் ஒரு பிரிவாக இருக்கும்.அவர்களது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து,எளிதில் எடையைக் குறைக்க அந்த உணவுப்பழக்கம் உதவுகிறது. உணவின் கலோரி கணக்கிடப்பட்டு, சமைக்காத உணவுகளைக் கொடுத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையைக் குறைக்கச் செய்கிறார்கள்.

பட்டினியாக இருப்பதன் மூலம் நம் வளர்ச்சி ஹார்மோன்கள் சரியாகச் சுரக்கின்றன. தசைகளின் வலிமை அதிகரிக்கிறது. பட்டினியாக இருப்பதன் மூலம் பத்து மடங்கு வளர்சிதை மாற்றம் அதிகரித்து,எளிதில் எடை குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது.வாரத்தில் ஒருநாள் பட்டினியாக இருந்தாலே நம் ஆயுள் நீட்டிக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் வாரத்தில் ஒருநாள் பட்டினியாக இருந்தாலே குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரித்து, செரிமானம் சீராகும். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஜர்னல் இதழில் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த ஆய்வில் புற்றுநோயாளிகளுக்கு பட்டினியாக இருப்பதை ஒரு சிகிச்சையாகக் கொடுத்துப் பார்த்ததில் புற்றுநோய்க் கட்டியின் அளவு சிறியதாக மாறியதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கீமோதெரபியின் பாதிப்பிலிருந்து மீட்கவும் பட்டினியாக இருந்தது உதவியதை அதில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

புற்றுநோய் பாதிப்பு என்பது சாதாரணமானதல்ல.சமீபகாலமாக ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகிறார்கள்.

பட்டினியாக இருந்தால் புற்றுநோய் குணமாகும் என்று உறுதியாக சொல்ல முடியாது.இது பற்றிய மருத்துவ ஆய்வுகள் அவசர தேவை.மத்திய மாநில அரசுகள் இதற்கான முயற்சியில் இறங்கி மக்களுக்கு சரியாக வழிகாட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.