
இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம் அடைவதாக, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழான தி லான்செட் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தன்னை நாடிவரும் நோயாளிகளுக்கு விரைவில் நிவாரணம் தர வேண்டும் என்று தேவை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சிபாரிசு செய்வது பரவலாக நாடெங்கிலும் நடந்து வருகிறது.
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமாக வாங்கி சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.
இந்த போக்கு மிகவும் ஆபத்தானது.இதனால் உயிர்களை இழக்கிறோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆன்டிபயாடிக் என்பது இருமுனைக் கத்தி போன்றது.கத்தியானது காயையும் நறுக்கும்; விரலையும் வெட்டும்! அதை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் எல்லாம் இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்படும்போது நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள்,நோய் பரப்பும் பாக்டீரியாவை மட்டும் அழிப்பதில்லை; குடலில் குடியிருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழித்துவிடுகின்றன. அதற்காகத்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்யாமல் சுயமாக சளி மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறோம்.
அதேசமயம், மருத்துவரிடம் போய் அவர் கொடுக்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சந்தேகப்படாமல் எடுத்துக்கொள்ளலாம். காரணம் என்னவென்றால், உங்கள் குடலைப் பாதுகாக்கும் மருந்தையும் அவர் கலந்து கொடுத்துவிடுவார். அந்த மருந்துகளைச் சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது நோய் குணமான 4 வாரங்களுக்குள் மறுபடியும் அந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர்ந்துவிடும்.ஆனால், அவர் ஒரு வாரம் எடுக்கச் சொல்லியிருக்க,நீங்கள் அதை அடிக்கடி எடுக்கக்கூடாது. இன்னும் முக்கியமாக, அவர் எப்போதோ எழுதிக் கொடுத்த மாத்திரையைச் சில மாதங்கள்,வருடங்கள் கழித்து நீங்களாகவே வாங்கிச் சாப்பிடக் கூடாது.ஏனென்றால், அப்போது உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.அது தெரியாமல் ஆன்டிபயாடிக் சாப்பிட்டால் உங்கள் குடல் தளம் பாதிக்கப்படும்;நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழல் ‘சுனாமி’யாகிவிடும். அவை மறுபடியும் வளர்வது தடைபடும். அப்போது செரிமானம் சிரமப்படும்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்கள் குறித்து லான்செட் மருத்துவ இதழ் எச்சரிக்கை செய்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக எப்போதும் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.சத்தான உணவுகள் அவசியம்.உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்யும் பழக்கம் வழக்கமாக மாற வேண்டும்.
எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.குறிப்பாக மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நாமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மருந்து மாத்திரைகள் நல்லதும் செய்யும் சமயத்தில் நமது உயிரையும் எடுக்கும்.
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
டாக்டர் ஜி.ராஜமோகன்.

