முதுமை வந்துவிட்டால் உடல்நலக் கோளாறுகள், தளர்ச்சி, நம்பிக்கைக் குறைவு போன்ற காரணங்களால் வீட்டுக்குள்ளேயே பலரும் முடங்கி விடுவார்கள்.ஆனால், அப்படி இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று வருவதும், பலருடன் கலந்துரையாடுவதும் ஆயுளை நீட்டிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

தினசரி வீட்டைவிட்டு வெளியே சென்று, சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் முதியவர்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்று American Geriatrics Society பத்திரிகையில் வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 70 முதல் 90 வயதுக்கு உட்பட்ட 3,375 பேரிடம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே இருக் கும் முதியவர்களையும், வீட்டைவிட்டு வெளியே செல்லும் முதியவர்களையும் அவர்களுடைய மருத்துவ நிலைமைகள் மற்றும் உடல் செயல்பாட்டுத் திறன்களின் அடிப்படையில் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வோரு வாரமும் வீட்டைவிட்டு எத்தனை முறை வெளியே சென்று வந்தார்கள் என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். வாரத்தில் 6 அல்லது 7 முறை, வாரத்தில் 2 முதல் 5 முறை, வாரத்தில் ஒரு முறைக்கும் குறைவாக வெளியே செல்பவர்கள் என்று மூன்று பிரிவுகளாக இவர்களின் பிரிவு அமைந்திருந்தது. வீட்டை விட்டு வெளியே

செல்வதற்கும், நீண்ட காலம் வாழ்வதற்கும் இடையிலுள்ள தொடர்பானது, ஆய்வில் பங்கேற்றவர்களின் சமூக, செயல்பாட்டு நிலைகள் மற்றும் நாள்பட்ட வலி, பார்வை, செவித்திறன் பாதிப்புகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற மருத்துவ நிலைமைகளைக் கொண்டும் கணக்கிடப் பட்டுள்ளது.

அரிதாக வீட்டைவிட்டு வெளியே செல்பவர்களோடு ஒப்பிடுகையில், தினசரி மற்றும் அடிக்கடி வெளியே சென்று வருபவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதோடு அவர்கள் நீண்டகாலம் வாழ்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

‘முதியோர்கள் தங்களைத் தாங்களே முடக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்திருக் கிறது இந்த ஆய்வு. முதியோரின் குடும்பத்தினரும் அவர்களை வெளியிடங்களுக்கும், பொது நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்வதைத் தவிர்க்கக் கூடாது’ என்றும் இதன்மூலம் அறிவுறுத்தியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முதுமையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் சுறுசுறுப்பாக இருந்தால் 100 ஆண்டுகள் வாழலாம்.இது லட்சியம்.90 ஆண்டுகள் உறுதி!

-டாக்டர்.ஜி.ராஜமோகன்.