
மூட்டு நழுவினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்; தாமதித்தால் மூட்டு நிரந்தரமாக சேதமடைய வாய்ப்பு உள்ளது.சிகிச்சை எடுக்க தாமதம் செய்யும்போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு ஏற்படும். மூட்டு விலகிய நிலையிலேயே நீண்ட நாட்கள் இருந்தால்,அருகில் உள்ள நரம்புகள் நசுக்கப்படும். இதனால் கைகளில் மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது பலவீனம் ஏற்படலாம்.ரத்த நாளங்கள் அழுத்தப்பட்டால், கைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது நபர்,ஆறு மாதங்களாகத் தனது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகலுக்கு முறையான சிகிச்சை பெறாமல் கவனக்குறைவாக இருந்துள்ளார். இதனால்,அந்தப் பாதிப்பு நாள்பட்ட மூட்டு விலகலாக மாறி,அடர்த்தியான தழும்பு திசுக்களை உருவாக்கியதுடன், மாற்று இடத்தில் ஒரு போலி மூட்டையும் உருவாக்கியது
.
அதிநவீன அறுவைசிகிச்சை மற்றும் நிபுணர்களின் கூட்டு முயற்சியால், முக்கிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு, தோள்பட்டை அதன் இயல்பான உடற்கூறியல் அமைப்புக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டது.இந்தச் சிகிச்சையின் மூலம் தோள்பட்டையின் இயற்கையான தோற்றமும் சீரமைக்கப்பட்டது. மருத்துவமனையில் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, வலியிலிருந்து விடுபட்டு,இடது கை இயக்கத்தில் நல்ல முன்னேற்றத்துடன் வீடு திரும்பினார். தற்போது அவர் பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுக் குழுவின் முறையான வழிகாட்டுதலின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆறு மாதங்களாகத் தோள்பட்டை விலகியிருந்ததால், மேற்கை எலும்பின் முனை இயல்பான இடத்திலிருந்து விலகி தழும்பு திசுக்களுக்குள் சிக்கியிருந்தது. அறுவைசிகிச்சையில் விலகிய எலும்பை சரியான இடத்திற்கு மாற்றி, இறுகிய மூட்டு உறையைத் தளர்த்தி,தழும்புத் திசுக்களை அகற்றி தோள்பட்டையின் இயல்பான இயக்கத்திறனை மருத்துவர்கள் மீட்டெடுத்தனர்.
தோள்பட்டை மீண்டும் விலகிவிடாமல் நீண்ட கால நிலைத்தன்மையைப் பராமரிக்க, மருத்துவர்கள் ‘லேட்டார்ஜெட்’ (Latarjet)என்ற சிறப்பு அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டனர். இதில் ‘கோராகாய்டு’ எனப்படும் ஒரு சிறிய எலும்புத் துண்டு தோள்பட்டை குழியின் முன்பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த எலும்பு மாற்று கூடுதல் ஆதரவாகச் செயல்பட்டு, தோள்பட்டை மீண்டும் விலகும் அபாயத்தைப் பெருமளவு குறைக்கிறது.
இந்த அறுவைசிகிச்சையை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் நிகில் ஜவஹர்லால் நகார்,பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் டாக்டர் லோகேஷ் சூர்யநாராயணன் மற்றும் டாக்டர் சுபாஷினி, மயக்கவியல் மூத்த நிபுணர் டாக்டர் கே. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. எலும்பியல் சிகிச்சைக் குழுவினர் லேட்டார்ஜெட் உள்ளிட்ட தோள்பட்டை மறுசீரமைப்பையும், பிளாஸ்டிக் சர்ஜரி குழுவினர் தழும்பு திசுக்களிலிருந்து நரம்புகளை விடுவித்து அவற்றின் செயல்பாட்டையும் மீட்டெடுத்தனர்.
இந்த மருத்துவ குழுவுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்!
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

