-டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல நிபுணர்

‘உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுகிறாய்…’ என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக, காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள்.

கோபம் என்பது என்ன?

சட்டென்று மாறுகிற மனநிலையின் வெளிப்பாடு. அதன் பின்னணியில் உடலையோ, மனத்தையோ வருத்தும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். கோபம் என்பது காய்ச்சல் மாதிரி ஓர் அறிகுறி. காய்ச்சல் என்பது எப்படி ஒரு நோய் இல்லையோ, உடலுக்குள் உண்டான ஏதோ ஒரு பிரச்னையின் அறிகுறியோ, அதே போலத்தான் கோபமும். மனத்தையோ, உடலையோ ஒரு விஷயம் உறுத்துகிறது, அதைக் கவனி என ஒருவரைத் திசை திருப்புகிற விஷயம்தான் கோபமும்.

எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு பழகுகிறவர்கள், ஒரு கட்டத்தில் கோபத்தை தனது ஒரு கேரக்டராகவே மாற்றிக் கொள்கிறார்கள். இந்த விஷயத்துக்கு அவர் இப்படித்தான் ரியாக்ட் செய்வார் என்பது மற்றவர்களுக்குப் புரிகிற அளவுக்கு அந்த கேரக்டர் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். கோபத்தைத் தன் அவசிய அடையாளமாக ஏற்றுக் கொண்ட ஆண்கள் தன்னை ஒரு சூப்பர் ஹீரோ மாதிரிக் கற்பனை செய்து கொள்வார்கள். ஆதிக்கக் குணம் அதிகமிருக்கும்.

பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற தேடலில் இருப்பார்கள். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியுடன் இருப்பார்கள். கோபத்தைத் தனக்கான ஆயுதமாகக் கொண்டு, மனைவியிடம் கூட நெருங்கிப் பழக மாட்டார்கள். மனைவியிடம் அன்பாக, இரக்கமாக, கருணையாகப் பேசினாலோ, சிரித்தாலோ தன்னை பலவீனமானவராக நினைத்து விடுவார்களோ என இறுக்கமாகவே இருக்க முயற்சி செய்வார்கள். தனது பயங்களையோ, பலவீனங்களையோ, தோல்விகளையோ பற்றி வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். இதனால் சில வேளைகளில் அளவுக்கதிகமான மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். ஆனாலும், துணையிடமிருந்து விலகியே நிற்பார்கள்.

கோபக்கார ஆண்கள் இப்படி என்றால், கோபக்கார பெண்களோ கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வார்கள். கணவரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள். கணவரின் கோபம் அறிந்த மனைவிகள் என்றால் எந்த விஷயம் அவரது கோபத்தைத் தூண்டும் எனத் தெரிந்து கொண்டு அதை அவரிட மிருந்து மறைப்பார்கள்.

 

கணவன் – மனைவிக்குள் கோபம் ஊற்றெடுக்க இரண்டு பிரதான காரணங்களைச் சொல்லலாம்.

* தனக்கு மரியாதை இல்லை என உணரும் போதும், தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிற போதும் கோபப்படுகிறார்கள்.

* உடல், மன அளவில் தனது எல்லைகளில் வாழ்க்கைத் துணை தலையிடுவதையோ, அந்த எல்லையை மீற முயற்சிப்பதையோ பொறுத்துக் கொள்ள முடியாத போது கோபப்படுகிறார்கள்.

இந்த இரண்டையும் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

* வார்த்தை வன்முறை… கோபமாகப் பேசுவது, நக்கலாகப் பேசுவது, விட்டுவிட்டுப் போய் விடுவேன் என மிரட்டலாகப் பேசுவது, ஆபாசமாகப் பேசுவது, துணையின் பெற்றோர், உற்றார், உறவினர்களைப் பற்றி அவதூறு பேசுவது, பொய் பேசுவது என எல்லாம் இதில் அடக்கம்.

* துணைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறுவது.

* எப்போதும், யாரேனும் ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசி மட்டம் தட்டுவது.

* தன்னுடைய அபிப்ராயங்களை, கருத்துகளை துணையின் மேல் திணிப்பது. துணையின் சார்பாக தானே முடிவெடுப்பது.

* அடிப்பது.

மேலே சொன்ன எல்லாம் மரியாதையைக் குலைத்துக் கோபத்தைத் தூண்டும் விஷயங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்தான் என்ன? ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழப்பவர்களில் சிலர் மனதுக்குள் கோபத்தையும் வருத்தத்தையும் போட்டுப் புதைத்து வைப்பவர்களே என்கிறது ஓர் ஆய்வு. கோபப்படும் போது அட்ரீனலின் என்கிற ஹார்மோன் சுரந்து, இதயத்துக்குச் செல்கிற ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து, மாரடைப்புக்குக் காரணமாகிறது.

எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

* ஒரு பிரச்னை வரும் போது, அதில் தனது உரிமை எப்படி மீறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு முன் அதே போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறதா எனப் பார்த்து, கோபத்துக்குக் காரணமான அந்த கொக்கியைக் கடிக்கலாமா, கடித்தால் என்னாகும் என்றும் யோசிக்க வேண்டும்.

* தேவைகளுக்கும் விருப்பங்களுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டும். பிரச்னைக்குக் காரணமான விஷயம் தேவை நிறைவேற்றப்படாத தன் விளைவால் வந்ததா அல்லது விருப்பம் நிறைவேற்றப்படாததால் வந்ததா என்கிற தெளிவு வேண்டும்.

* கோபத்தைத் தூண்டுகிற விஷயம் உண்மையிலேயே கோபப்படத் தகுந்ததுதானா எனப் பார்க்க வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கோபப்படுவது, அன்யோன்யமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தடையாக மாறும் என்பதை உணர்ந்தால் அதைத் தவிர்க்கலாம்.

கோபத்திலிருந்து விலகி நிற்க..

துணையிடம் மனம் திறந்து பேசுவதுதான் ஒரே சிறந்த வழி. கணவனும் மனைவியும் அமைதியாக உட்கார்ந்து, மனம் திறந்து பேசப் பழகினால், அந்தக் குடும்பமே ஆரோக்கியமான சூழல் கொள்ளும். அதைப் பார்த்து வளர்கிற குழந்தைகளும் நாகரிகமான மனிதர்களாக வளர்வார்கள். பிரச்னையை சொல்லி முடித்த திருப்தி துணைக்கு ஏற்படும். இப்படிப் பேசும் போது இடையிடையே சட்டென கோபப்படுவது, பழைய பிரச்னைகளைக் கிளறுவது போன்றவற்றைத் தவிர்த்தாக வேண்டியது மிக முக்கியம்.

கோபமாக இருக்கிறீர்களா?

* உங்கள் துணையை விமர்சிக்காதீர்கள்.

* என்னதான் கோபம் தலைக்கேறினாலும் துணையை மோசமான, தகாத வார்த்தைகளால் திட்டாதீர்கள். வன்முறையைப் பிரயோகிக் காதீர்கள்.

* பிரிவைச் சொல்லி மிரட்டாதீர்கள்.