முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல்கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் காது இரைச்சலுக்கு வழிவிடுகிறது. தவிர, காதுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைவதால், செவி நரம்பு பாதிப்பதால், செவிப்பறை மீது அழுக்குப்படிந்து அழுத்துவதால், காதில் அடிக்கடி சீழ்வடிவதால், தடுமம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை.. இப்படி பல காரணங்களால் காதில் இரைச்சல் உண்டாகலாம்.

காரணம் தெரிந்து அதற்கான சிகிச்சை தரப்படும்போது இது குணமாகும். இதனால் சரியாகாதபோது ‘ஒலி மருத்துவம்’ மூலம் சிகிச்சை தரப்படும், வாக்மேனின் இயர்போன் மாதிரி ‘மாஸ்கர்’ எனும் கருவியைக் காதில் பொருத்திவிடுவார்கள். காதுஇரைச்சலுக்குச் சவால் விடுகிற மாதிரி அதைவிட அதிக டெசிபல் உள்ள ஒலியை இது உருவாக்கும். இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் இந்த ஒலி தடுத்துவிடும்.

காதின் நலன் காக்க

  1. அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும.
  2. பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று கண்டகண்ட பொருட்களை வைத்துக் காதைக் குடையக்கூடாது.
  3. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
  4. காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கை பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது.
  5. காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக்கூடாது.
  6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.
  8. 8 சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
  1. தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
  2. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  3. தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
  4. மதுவும் புகைப்பிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.

DR. M.N.SHANKAR, ENT SPECIALIST