
புத்தாண்டில் புதுமை பல படைக்க வேண்டும் .ஏழை எளியோர் இன்னல்கள் மறைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பும் கருணையும் காட்டும் எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்களை கருதுகிறோம்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பிசிக்ஸ் கேலரியில் தங்களுக்கு சமூக உளவியல் பாடம் நடத்தினேன் .உங்கள் ஆசிரியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். கலைஞரின் அன்பு மகனான நீங்கள் அவரின் பல ஆற்றல்களை பெற்று இருக்கிறீர்கள். நல்ல சிந்தனை ,உயர்ந்த லட்சிங்களோடு மிகச் சிறப்பான முதல்வராக செயல்படுகிறீர்கள்.
பம்பரமாக சுற்றிச்சுற்றி வருகிறீர்கள்.
கொரோனா மரணங்களைவிட மாரடைப்பால் இறந்தவர்கள் அதிகம் என்பதால் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள். பிளாஸ்டிக் பைகளால் இயற்கை சூழல் கெடுகிறது என்பதை உணர்ந்து மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்கப்படுத்துகிறீர்கள். என்ன சிரமங்ஙள் சிக்கல்கள் வந்தாலும் கவலைப்படாதீர்கள்.
நானிருக்கிறேன் என்று உற்சாகமூட்டுகிறீர்கள்.எதிரான விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக உறுதியாக ஆக்கப்பூர்வமாக பணியாற்றுகிறீர்கள்.உங்கள் உழைப்பை லட்சியத்தை பாராட்டுகின்ற நேரத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது புத்தாண்டு கோரிக்கை.
மதுக்கடைகளால் சமுதாயம் சீரழிகிறது.குடும்பங்கள் சிதைகிறது.இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.மன நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.
நல்ல அமைச்சர்கள்..தகுதிவாய்ந்த திறமையான அதிகாரிகள்..இதுவே தக்க தருணம்.மதுக்கடைகளை மூடுங்கள்.மக்களை காப்பாற்றுங்கள்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் உங்களை வாழ்த்தும்.
உளவியல் ஆலோசகர்கள்,சைக்கோ தெரபிஸ்ட்டுகள்,மருத்துவர்கள் அடங்கிய மறு வாழ்வு மையங்களை உருவாக்கி மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டுக்கொண்டுவர உத்தரவிடுங்கள்.
மதுக் கடைகளை மூடினால் பலகோடி குடும்பங்களை வாழவைப்பதோடு வளர்ச்சிக்கும் வித்திடும்.
இதுவே எனது புத்தாண்டு கோரிக்கை.அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துகள்!
நன்றியுடன்
டாக்டர்.ஜி.ராஜமோகன்

