
வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகைகளில் முடக்கத்தானுக்கு முக்கிய இடம் உண்டு.இந்த மூலிகையை வீட்டில் வளர்ப்பது எளிது.விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்கள், வயல் வெளிகள் எங்கும் காணப்படும். இந்தச் செடியில் இருக்கும் காய்ந்த காய்களைப் பறித்து அதிலுள்ள விதைகளைச் சேகரிக் கலாம். அந்த விதைகளைப் போட்டு வளர்க்கலாம்.
வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை. இது கொடி வகையைச் சேர்ந்த பயிர் என்பதால் படர்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
முடக்கு + அறுத்தான் = முடக்கத்தான் என்பார்கள். மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்குக் காரணம், மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். அவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. இதன், இலைகளை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசையாகச் சுட்டு சாப்பிடலாம். ரசம் வைக்கும்போது இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதைச் சாம்பார், காரக்குழம்பு/புளிக்குழம்பில் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.
இதைப் பயன் படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம். ஆனால், அதற்காகப் பயப்படத் தேவையில்லை. இதைச் சாப்பிடுவதால் எலும்புகள் பலம் பெறுவதுடன் மூட்டுவலிகள் நீங்கும். எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும்.

