னதை மயக்கும் மலர்களில் முதலிடம் வகிப்பது மல்லிகைதான். தன்னிடம் உள்ள கொள்ளை அழகை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் குணம் கொண்ட மல்லிகையை ‘கொடை வள்ளல்’ என்றே அழைக்கலாம். வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை வாரி வழங்கும் ரகசியத்தை தெரிந்துகொள்வோம்.

சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.

ஒரு கப் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், 4 லவங்கத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடுதண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள்.முகம், மூக்கு, கன்னம் ஆகியப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் ‘பேக்’ போடுங்கள்.சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.கருமையும்,கரும்புள்ளியும் காணாமல் போவதுடன் பருக்களும் நீங்கிவிடும்.

மல்லிகைப் பூவின் மணமே மருந்துதான் என்பது சித்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட நிஜம். மனக் கலக்கம் நீங்கி நிம்மதி பிறக்கச் செய்யும் சக்தி மல்லிகையின் மணத்துக்கு உண்டு.

குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லையெனில், தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிவிடும். மல்லிகைப் பூவை மார்பில் வைத்து கச்சைக் கட்டிக் கொண்டால்.. பால் கட்டியது கரையும். (இப்படிச் செய்யும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக்கூடாது.)

அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூ இலையை வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும்.

கால் ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லிகை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுத்தால் தொண்டை புண், எரிச்சல் உடனடியாக நீங்கும்.

-எம்.ஜெயஸ்ரீ.