
எதிர்பாராத விதமாக திடீரென்று ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ,மயக்கம், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிணிகளால் பாதிக்கப்பட்டாலோ, மருத்துவ உதவி கிடைக்குமுன் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு முதலில் செய்ய வேண்டிய சிகிச்சைக்கே முதலுதவி என்று பெயராகும்.
மருத்துவர்களுக்கே கூட, மருத்துவமனையிலுள்ள உபகரணங்களின் உதவி யின்றி,ஓர் அவசர காலத்தில் ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாகும். அதுபோல் ஒருவர் மூர்ச்சையுற்று, உணர்வின்றி விழுந்துகிடந்தார் என்றால் அவருக்கு என்ன நேர்ந்தது, எதனால் அவர் பாதிக்கப் பட்டார் என்பதைக் கண்டுபிடிப்பது, முதலுதவி செய்பவர்களுக்கும் மிகவும் சிரமமான காரியமாகும்.
எனவே,ஒருவர் உயிருக்கு ஊறு விளைவிக்கும் நிலைமைகள் என்ன என்பதைக் கண்டுபிடித்து அவரது உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் முதலுதவி செய்பவர் முதலில் செய்ய வேண்டும். அவரது நோய் நாடி, நோயின் முதல் நாடுவதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
ஒரு விபத்தில் அல்லது ஓர் ஆபத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டார் என்றால்,அப்போது அவர் அருகில் இருந்தவர்களிடம், என்ன நேர்ந்தது என்பதை முதலுதவி செய்பவர் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.அதுபோல் அவரது பெயர், வயது, முகவரி முதலியவற்றையும் கூடுமானவரை அறிந்துகொள்ள முயல வேண்டும்.
எவர் ஒருவருக்கு முதலுதவி செய்வதாக இருந்தாலும்,முதலுதவி செய்பவர் ஏற்கெனவே இருக்கின்ற நிலைமையை மேலும் விபரீதமாக்காமலும், தான் எந்தவொரு ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமலும் முதலில் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.அருகில் நிற்பவர்களிடம், எதனால் பாதிக்கப்பட்டார், எப்படிப்பட்ட மருத்துவ உதவி தேவை என்பதை விபரமாகக் கூறி உடனே மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ளச் சொல்ல வேண்டும். போக்குவரத்து நெருக்கடி மிக்க இடத்தில் உண்டாகும் விபத்து,தீ விபத்து போன்ற சூழ்நிலைகளில் முதலுதவி செய்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்.முதல் உதவி செய்பவர்கள் எந்த ஆபத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது.
பாதிக்கப்பட்ட மனிதருக்கு முதலுதவியில் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
அடிபட்டு,காயம்பட்டு, மயங்கிக்கிடக்கும் ஒரு மனிதருக்கு சிகிச்சையளிக்கும்பொழுது,முதலுதவி செய்பவர் ABC என்னும் ஆங்கில
எழுத்துக்களை எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும்.
1.A – Airway – சுவாசப்பாதை:
அந்த மனிதனின் சுவாசப்பாதை,அவரது நாக்கு அல்லது வேறு பொருள்களால் அடைக்கப்பட்டிருக்கிறதா ? என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அவரது சுவாசப்பாதை இவ்வாறு
அடைக்கப்பட்டிருந்தால் முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும்.
B – Breathing – சுவாசம்: அவரது சுவாசம் சீராக இருக்கின்றதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.அவரது சுவாசம் சீராக இல்லையென்றால், அதை சீர்படுத்தும் நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும்.
C-Circulation – இரத்த ஓட்டம்: இதயம் சுருங்கி விரிவதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு மூளை முதல் உடலின் பல்வேறு பாகங்களுக்கு செலுத்தப்படுகிறது. எனவே அவரது இதயம் நன்றாக இயங்குகிறதா, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா,என்பதை அவரது குரல்வளையின் இருபுறமுள்ள கரோடிட் தமனிகள் (Carotid Arteries) துடிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அப்படி இதயம் இயங்கவில்லை என்றால்,அதை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
2. ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும்.
3. அடிபட்ட மனிதரை தூக்கவேண்டியது முக்கியமானதுதான் என்றாலும்,கழுத்து, முதுகு போன்ற இடங்களில் அடிபட்ட மனிதரை தூக்கக் கூடாது.
4. அடிபட்டவரை தரையில் நேராகப் படுக்க வையுங்கள். அவர் வாந்தி எடுத்தாரென்றால், அவரது கழுத்து எலும்பு முறியாதிருந்தால் அவரை ஒரு
பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வையுங்கள். போர்வையைப் போர்த்தி
அவரை கதகதப்பாக வையுங்கள்.
5. நீங்கள் முதலுதவி செய்யும்பொழுது, மற்றொருவரை மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். அப்படியே வேறு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்றும் கேட்கச் சொல்லுங்கள்.
6. தேவையெனில் அவரது ஆடையை நீக்கிவிடுங்கள். தீக்காயம் பட்ட மனிதரின் ஆடையை நீக்காதீர்கள்.அது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தால் மட்டுமே நீக்க வேண்டும்.
7.முதலில் நீங்கள் பதற்றப்படாதீர்கள்.உங்கள் பதற்றம் அவரது பயத்தை அதிகரிக்கும். அமைதியுடனிருங்கள். அவரையும் அமைதிப்படுத்துங்கள்.
8. திரவப்பொருள் எதையும் அவர் வாயில் ஊற்றாதீர்கள்.அது அவர் சுவாசக் குழாய்க்குள் சென்று அவரது மூச்சை நிறுத்திவிடும்.
9. மூர்ச்சையுற்ற மனிதரை கன்னத்தில் அடித்தோ, உலுக்கியோ எழுப்பாதீர்கள்.
10. அவரது சட்டைப் பையில் ஏதேனும் மருத்துவ அட்டை வைத்திருக்கிறாரா என்று தேடுங்கள். அப்படி இருந்தால் அதில் அவரைப் பற்றிய விபரங்கள் இருக்கின்றனவா என்பதையும் தெரிந்து கொள்ளவும்.

