
– அருண் ஷ்யாம், உணவு ஆலோசகர்.
எனது வீட்டு விசேஷத்துக்காக உறவினர்களை அழைத் திருந்தோம்.விசேஷம் முடிந்து அனைவரும் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முறுக்கு,சீடைகளை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் அக்கா பையன் திடீரென்று பாத்ரூமை நோக்கி ஓடினான். எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த களைப்போடு திரும்பி வந்தவன், ‘பலகாரத்தில எள் போட்டிருக்கீங்களா?’ எனப் பரிதாபமாகக் கேட்டான். ‘ஆமாம்’ என்றவுடன், ‘அடடா, அவனுக்கு எள் ஒத்துக்காது.நான் சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் அக்கா.
உணவுப்பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி)க்கான ஒரு சிறிய உதாரணம்தான் மேலே சொன்னது.என் அக்கா மகனுக்கு எள் ஆகாது என்றால் சிலருக்கு கத்தரிக்காய் ஆகாது;சிலருக்கு முட்டையின் பேரைக்கேட்டாலே அலர்ஜியாக இருக்கும்.
சில உணவுப் பொருள்களை ஏன் சிலரின் உடல் ஏற்றுக் கொள்வதில்லை? எதனால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது?
நமது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது உண்டு.சில உணவுப்பொருள்கள் உடலுக்குள் நுழைந்ததும் அவற்றை அந்நியப் பொருட்களாகக் கருதி, நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்விளைவுகளை உண்டாக்கும்.இதையே ஒவ்வாமை என்கிறோம். ஒவ்வாமையை உணவில் இருக்கும் புரதத்தை எதிர்த்து வரும் மாற்றம் என்று கூடச் சொல்லலாம்.
ஒவ்வாமைப் பிரச்னை எந்த வயதிலும் ஏற்படலாம்.சிலருக்கு சிறுவயதிலேயே வரலாம்.சிலருக்கு வளர வளர உருவாகலாம். உணவினால் ஏற்படும் இந்த ஒவ்வாமைக்கு சிகிச்சை ஏதும் இல்லை. இந்த பிரச்னையைப் போக்க ஒரே வழி, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை நமது மெனுவில் இருந்து நீக்குவதுதான்.
ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய எட்டு உணவுகளை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.
அவை:
முட்டை, பால், வேர்க்கடலை,வால்நட், முந்திரி,பாதாம் போன்ற கொட்டை வகைகள்,மீன் (shell fish), எள்விதை (seasame seeds),சோயா,கோதுமை.
இவற்றுள் முட்டை, பால் மற்றும் வேர்க்கடலை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. ஒவ்வாமைப் பிரச்னைக்கு பெரும்பாலும் மேலே சொன்ன உணவுகள்தான் காரணமாக அமைந்திருக்கின்றன.
ஒவ்வாமையின் அறிகுறிகள்
ஒவ்வாமைப் பிரச்னையால் தோல், சுவாச மண்டலம், செரிமான மண்டலம், ரத்த மண்டலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று பாதிக்கப்படலாம்.
ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகள்
* அநாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) பாதிப்பு உடம்பு முழுவதையும் பாதிக்கும்.இதனால் நரம்பு மண்டலங்கள் இயங்காமல் இறப்பும் ஏற்படலாம்.
* கை, கால்,நாக்கு ஆகியவற்றில் வீக்கம் ஏற்படும்.
* தோல் பாகத்தில் அரிப்பு ஏற்படும்.தோல் உரிய ஆரம்பிக்கும்.
•வாய்,முகம்,கண்,மற்றும் கை ஆகிய பகுதிகளிலும் அரிப்பு ஏற்படும்.
* வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
* மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்ற அறிகுறிகளும் இருக்கக்கூடும்.
* சில நேரங்களில் ரத்த அழுத்தம் மிகக் குறைந்து சிக்கலான நிலையை உருவாக்கிவிடலாம்.
குழந்தைகளுக்கு தீராத வயிற்றுவலி,மலத்தில் ரத்தம் வெளிவருவது, சில நேரங்களில் சளியுடன் கூடிய மலம் வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும். தோலின் மேல் பொரிப்பொரியாக காணப்படும்.சில குழந்தைகளுக்கு ஆஸ்துமாவும் ஏற்படலாம்.
ஒவ்வாமைக்கான மருத்துவப் பரிசோதனை
உணவால் ஏற்படும் ஒவ்வாமையைக் கண்டறிய இரண்டு பரிசோதனை முறைகள் உபயோகிக்கப்படுகின்றன.ஒன்று தோலில் ஊசி ஏற்றிப் பரிசோதிப்பது. மற்றொன்று ரத்தப் பரிசோதனை.
ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கும் முறைகள்
ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை உணவிலிருந்து அறவே தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு புது உணவுகளை அளிக்கும் பொழுது ஒவ்வொரு உணவையும் ஒரு வார இடைவெளியில் தர
வேண்டும். உதாரணமாக, திரவ உணவுகளிலிருந்து திட உணவுகளுக்கு குழந்தைகளை மாற்றும் பொழுது காய்கறிகளை வாரத்துக்கு ஒரு காயாக அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முட்டையை முதல்முதலாக அளிக்கும் பொழுது வெள்ளைக்கரு தனியாகவும் சில நாட்களுக்குப் பிறகு மஞ்சள் கருவைச் சேர்த்தும் கொடுக்கலாம்.
ஒவ்வாமையினால் ஏற்படும் பாதிப்பு உணவு உட்கொண்ட சில நிமிடங்களிலேயே ஏற்படலாம்.சில நேரங்களில் சில மணி நேரமும் ஆகலாம்.
சில உணவுகளால் காலம் தாழ்த்தி,அதாவது, சாப்பிட்டு சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பாதிப்பு தென்படும்.
எனவே பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை நீக்கி உங்களது உணவுப்பழக்கத்தை ஆரோக்கியமானதாக அமைத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து எளிதாக மீளலாம்.

