நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து,தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால்,இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது;வேறு காரணங்கள்தான் இருக்கும்.

சமீப காலமாக சிறு வயது இளைஞர்கள் கூட மாரடைப்பால் மரணம் அடைவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறோம்.

உலக அளவில் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால் நமது இதயத்தை எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விடுகிறோம்‌.மாரடைப்பை நமது வாழ்வியல் மூலம் தவிர்க்க முடியும்.

தடுப்புமுறைகள்

*புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.

*சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.

*தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.

*உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து,அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

*கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

*மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.

*அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள்.

*இரைப்பைப் புண் உள்ளவர்கள்,சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த,காரம் நிறைந்த,எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ,அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.

*வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள்.துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு,அதிக இனிப்புப் பண்டங்கள்,புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

*நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது.இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது.

*மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள்,ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள்.மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு
அதிகமாக சாப்பிடக் கூடாது.

*மன அழுத்தம் தவிருங்கள்.மகிழ்ச்சியான வாழ்வியல் முறைகளை கொண்டாடி மகிழுங்கள்.

*தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.

** நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.