
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry)
முதுமைப் பருவம் என்பது இந்தியாவில் 65 வயதில் இருந்து தொடங்குகிறது. முதுமையடைந்துவிடுவது இங்கு ஒரு பெரிய ஸ்டிக்மாவாக இருக்கிறது.ஆனால் முதுமை என்பது பேறு.முதுமை பெரும் பாக்கியம்.இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.
எரிக் எரிக்சன் என்ற உளவியல் நிபுணர், “முதுமைக் காலம் என்பது,ஒருவர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எப்படி மதிப்பிடுகிறார் என்பதைப் பொறுத்தது. முழுமையாக, திருப்திகரமாக ஒருவர் தனது வாழ்க்கையைப் பற்றி மதிப்பிடும்போது, அவர் தனது முதுமைக் காலத்தை எந்தவிதச் சிக்கல்களும் இல்லாமல் கடக்க முடிகிறது.அப்படிச் சிக்கல்கள் இல்லாமல் கடக்கும்போது அவருக்கு மரணத்தைப் பற்றி எந்தப் பயமும் இருக்காது” என்கிறார்.
மாறாக ஒருவர் தான் வாழ்ந்த வாழ்க்கையைக் குறைவானதாக, முழுமை அடையாததாக, திருப்தி இல்லாததாக மதிப்பிடும்போது அவரின் முதுமைப் பருவம் சிக்கல் நிறைந்ததாக மாறிவிடுகிறது. அவர் தன் வாழ்க்கையின்மீது நம்பிக்கை இழந்தவராக மாறிவிடுகிறார்.
அதனால் முதுமைப் பருவத்தில் ஒரு நிம்மதியற்ற தன்மை மற்றும் ஒருவித வெறுமை அவர் மனம் முழுக்க நிரம்பியிருக்கிறது. அது அவருக்கு மிகுந்த மனச்சோர்வையும், பதட்டத்தையும் கொடுக்கிறது.அந்த மனநிலையில் அவர் தனது மரணத்தைப் பார்த்துப் பயப்படத் தொடங்குகிறார்.
அதனால் அவரது முதுமைப் பருவம் என்பது பதட்டமானதாகவும், ஒருவித அச்சம் நிறைந்ததாகவும் இருக்கிறது.அது அந்தப் பருவத்தை மென்மேலும் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறது.
ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருந்தாலும் அவரது வாழ்க்கை யைப் பற்றிய மனநிறைவை, அதுவும் குறிப்பாக முதுமையில் தர வேண்டியது உறவுகள் தான். ஏனென்றால், அர்த்தமுள்ள வாழ்வு என்பது நாம் ஈட்டும் பொருளில் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள்தான் நமது வாழ்வை அர்த்தமானதாக மாற்றுகிறார்கள்.
முதுமைப் பருவத்தில் வேண்டுமான அளவு அன்பும்,ஆதரவும், அணைப்பும் சக மனிதர்களிடம் இருந்து கிடைக்கும்போது, அதுதான் ஒருவரது வாழ்க்கையைப் பற்றிய மனநிறைவைத் தருகிறது.அதில் வறட்சி ஏற்படும்போது தான் வாழ்க்கை முழுமை பெறாததாக,திருப்தி இல்லாததாக கருதும் எண்ணத்தை ஒருவரது மனதில் நிறுவி விடுகிறது.
75 வயது முதியவர் ஒருவரை எனது மருத்துவமனைக்கு அவரது மகள் கூட்டி வந்திருந்தார்.அந்த முதியவர் ரயில்வேயில் பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் மனைவி இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
ஐந்து பிள்ளைகள். முதல் நான்கு மகன்கள். கடைசியாக ஒரு மகள்.எல்லோரையும் நல்ல படியாக படிக்கவைத்து,வெகு விமர்சையாகத் திருமணம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார்.
நான்கு மகன்களும் வெளிநாட்டில் வேலை கிடைத்து, மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டார்கள். எப்போதாவதுதான் வருவார்கள்.அதுவும் தனித்தனியாக. இப்போது இவர் தனது மகள் வீட்டில்தான் இருக்கிறார்.மகள் ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். மருமகனும் பேராசிரியர்தான். நல்ல வசதியான குடும்பம்தான். இவருக்கு ஒன்றும் பெரிதாக வேலையில்லை.
ஓய்வூதியம் வருகிறது. காலையில் எழுந்து நடைப்பயிற்சி போகும் நேரம் தவிர, வீட்டில் சும்மாதான் இருக்கிறார். பெரிதாக நண்பர்கள் வட்டமும் கிடையாது. இப்போது பிரச்னை என்னவென்றால், அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தானம் செய்துவிட்டு வந்துவிட்டார்.
அது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து ஒரே பிரச்
னை.அதுவும் குறிப்பாக மகன்கள். அவரைப் பிடித்து பயங்கரமாகத் திட்டிய பிறகும்,இவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் என்னிடம் கூட்டி வந்திருந்தார்கள்.
நல்லவேளை மனைவி,வசதியான வாழ்க்கை, குழந்தைகள் என்று எல்லோரும் வசதியாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள்.இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது.
ஆனால்,அவரிடம் பேசப் பேச நான் எனது கருத்தை மாற்றிக் கொண்டேன்.
“எல்லாம் இருந்தும் என்ன?அது போதுமா? எனது முதுமையை வருடிக்கொடுக்க, என்னை அரவணைத்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்?” என்ற அவரது கேள்வி என்னைத் தூங்க விடாமல் செய்தது.
நல்ல வசதியாக, வேண்டும் அளவுக்கு பணம் மட்டும் அனுப்பி வைத்தால் தந்தை சந்தோசமாக, தனது மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழித்துக் கொள்வார் என்பது எப்பேர்பட்ட மூட நம்பிக்கை.
அந்த முதியவர் தன்னை அரவணைக்க யாரும் இல்லாததால்தான் தனது மகன்கள் தனக்குச் செய்ய வேண்டிய கடைசி உரிமைகளையும் நிராகரித்து இருக்கிறார்.ஆம், தனது உடல் இருந்தால்தானே மகன்கள் தனக்கு ஈமச்சடங்குகளைச் செய்ய முடியும். அவர்களுக்கு அந்த உரிமை தரக்கூடாது என்பதற்காகத்தான் உடல்தானம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
எப்பேர்பட்ட வஞ்சகம் அவருடையது? நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இப்படி எல்லாம் அவருக்குத் தோன்ற என்ன காரணம்? முதுமையைப் பற்றி நமது அறியாமையும், முதியவர்களைப் புறக்கணிக்கும் தன்மையும்தான் காரணம்.
முதுமை,உடல் ரீதியாகப் பல சிக்கல்களைக் கொடுக்கக் கூடியது. அதை எல்லாம் தாங்க வேண்டும் என்றால் மனதளவில் நாம் அவர்களை வலிமையாக வைத்திருக்க வேண்டும்.அந்த மனவலிமையை நம்மால் நேரடியாகக் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் எந்த பதட்டத்தையும், நிம்மதியின்மையையும் நாம் அவர்கள் மனதில் ஏற்படுத்திவிடக் கூடாது.
ஒரு சமூகத்தில் எவ்வளவு பேர் முதுமையை அடைகிறார்கள் என்பதுதான் அந்தச் சமூகம் ஆரோக்கியாமாய் இருப்பதற்கான அடையாளம். ஆனால், முதியவர்கள் அத்தனை பேரும் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் அந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கருணையுடன் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம்.

