-டாக்டர்.கண்மணி கணேஷ், மகப்பேறு மருத்துவ நிபுணர்.

ரு காலத்தில் பீரியட்ஸ் நாள்களில் பழந்துணிகளை உபயோகிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.இன்று அதற்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கின்றன.அவை பெண்களின் பீரியட்ஸ் கால சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. அந்நாள்களில் அவர்கள் சிறகு விரித்துப் பறக்கவும் வழி செய்கின்றன.

நாப்கின்

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது நாப்கின். அதை உபயோகிப்பதென முடிவு செய்துவிட்டால், ஒவ்வொரு 6-8 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் நாப்கினை மாற்ற மறக்காதீர்கள்.8 மணி நேரத்துக்கு மேல் நாப்கினை மாற்றாமலிருந்தால் முதலில் துர்வாடை வரும்.அடுத்து பாக்டீரியா தொற்று உண்டாகி வெஜைனா பகுதியில் புண்கள் வரும்.அந்த தொற்றானது கர்ப்பப்பை மற்றும் கருக்குழாய்களையும் பாதிக்கலாம்.

டாம்பூன்ஸ்

குழல் வடிவில் இருக்கும்.டாம்பூனை வெஜைனா பகுதிக்குள் பொருத்திவிட வேண்டும்.மேலை நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம்.நம் நாட்டில் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை. இதை பயன்படுத்தும் போது ரத்தம் வெளியே கசியாது. நாப்கின் மாதிரியே குறிப்பிட்ட இடைவெளியில் இதை மாற்ற வேண்டும்.

மென்ஸ்டுரல் கப்

கடந்த சில வருடங்களில் பேசுபொருளாகி இருக்கும் மென்ஸ்டுரல் கப், ரப்பர் அல்லது சிலிக்கான் மெட்டீரியலால் தயாரிக்கப்படுவது. இதை மடித்து வெஜைனா பகுதிக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும். மென்ஸ்டுரல் கப்பை 12 மணி நேரம் வரைகூட உபயோகிக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில் அதை வெளியே எடுத்து அதில் நிரம்பி யிருக்கும் ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, சுத்தப்படுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். இதைப் பயன்படுத்துவதால் தொற்று பாதிக்காது. புண்கள் வராது. நாப்கின் பயன்படுத்திய நிலையில் உங்களால் செய்ய முடியாத வேலைகளை மென்ஸ்டுரல் கப் வைத்துக்கொண்டு செய்ய முடியும். பீரியட்ஸை எளிதாகக் கடக்க உதவும்.

மிக இள வயதில், அதாவது பீரியட்ஸ் தொடங்கிய நிலையில் மென்ஸ்டுரல் கப் உபயோகத்தைத் தவிர்க்கலாம்.16-17 வயதுக்குப் பிறகு உபயோகிக்கலாம். இதைத் தேர்ந்தெடுப்பதிலோ. உபயோகிப்பதிலோ சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகலாம். ஏனெனில் அதை சுகாதாரமாகக் கையாள வேண்டியது மிக முக்கியம். மென்ஸ்டுரல் கப்பை 10 வருடங்கள்
வரைகூட உபயோகிக்கலாம். முறையாக ஸ்டெரிலைஸ் செய்து உபயோகிக்க வேண்டியது அவசியம்.அரிதாக சில பெண்களுக்கு இதை உபயோகிப்பதால் யூரினரி இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பு உள்ளது. சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டாலே இதைத் தவிர்க்கலாம்.