
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD (Psychiatry)
முதியவர்கள் கண்ணியமாக வாழ உதவ வேண்டும். பெற்ற பிள்ளைகளால் அவமதிப்புக்கு உள்ளாகி சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
முதியவர்களின் மனநலம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. சமீபத்தில்..உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் தாய் அங்கு நிறைய பிரச்னைகள் செய்வதாக அவருடைய இரண்டு மகள்களும் என்னிடம் அழைத்து வந்தார்கள். திருமணம் முடிந்து தங்களது கணவனுடைய குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வரும் மகள்கள் தாயை தூரத்து உறவினர் ஒருவரிடம் மாத செலவுக்கு பணம் அனுப்பி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.சிறு வயதிலேயே கணவனை இழந்த அந்த வயதான தாய்க்கு தனது மகள்களை விட்டால் சொந்தமென்று யாருமில்லை. இறுதிகாலத்தில் மகள்களுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை.
ஆனால், கணவன்கள் வீட்டில் அதற்கு சம்மதமில்லை.”எங்க அப்பா முகம்கூட எங்களுக்கு ஞாபகமில்ல சார். எங்கம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்துச்சி.ஆனா, இன்னிக்கு அத எங்களால பார்த்துக்க முடியல.வீட்ல ஒரு வாரம் வச்சிக்கிட்டாலே ஏதாவது பெரிய பிரச்னை பண்ணி வச்சிருது.அதனால கூட வச்சுக்க கூடாதுனு சொல்றாங்க.இதுவும் எங்க போனாலும் நிம்மதியா இருக்க மாட்டேங்குது,என்ன பண்றதுன்னே தெரியல சார்” என மகள்கள் அழும் போது அந்த தாய் அவர்களை பரிதாபமாகப் பார்த்துக் கேட்டார். “நீங்கலாம் உங்க புள்ளங்க கூட சந்தோசமா தானே இருக்கீங்க,நானும் அப்படி இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?”.அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
வரும் காலங்களில் நாம் எதிர் நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்றாக முதியோர் பராமரிப்பு இருக்கும். நவீன மருத்துவ முறைகளின் காரணமாக மனிதர்களின் வாழ் நாள் கூடியிருக்கிறது. அதன் விளைவாக முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஐம்பது வருடங்களில் 60 வயதை தாண்டிய முதியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
உலகத்திலேயே மிக அதிகமான முதியோர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கப்போகிறது.
இன்றைய பொருளாதாரச் சூழலில்,குடும்ப அமைப்பு என்பதே சுருங்கியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் மீது ஏராளமான நெருக்கடிகள் இருக்கின்றன. அதுவும் நகர்ப்புற குடும்பங்களின் பொருளாதார சூழல் இன்னும் கடினமானது.
அது முதியவர்களுக்கு அத்தனை இலகுவானதாகவும் இருப்பதில்லை.ஒரு கட்டாயத்தின் பேரில் முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பிற்கு ஒரு குடும்பம் தள்ளப்படும்போது, பராமரிக்க நேரும் குடும்ப உறுப்பினர்கள் அந்த முதியவர்களை துன்புறுத்துவதன் வழியாகவே தங்களது மனவுளைச்சலை போக்கிக் கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களும், நெருக்கடிகளுமே முதியவர்களின் மீதான வன்முறைகளுக்கு முக்கியமான காரணம்.
வன்முறை என்றால் அது வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமேயல்ல.சிறு அவமதிப்பும்,கடும் சொல்லும், நிராகரிப்பும். அலட்சியமும், முதியவர்களுக்கு எதிரான சிறு உடல் அசைவுகளுமேகூட உளவியல் ரீதியாக அவர்களை பெரிதும் பாதிக்கின்றன.
பெரும்பாலான நேரங்களில் முதியவர்களை துன்புறுத்துவது மிக நுட்பமாக எல்லா வயதினராலும் நடந்து கொண்டேயிருக்கிறது.இந்த உளவியல் நெருக்கடிகள் முதியவர்களை மிக விரைவாகவே நோய்மையிலும், முதுமையிலும் தள்ளுகின்றன. அவர்கள் அங்கே மரணத்தை ஒரு விடுபடுதலாக எதிர்பார்க்க தொடங்கிவிடுகிறார்கள்.
முதியவர்களைப் பராமரிப்பதில் குடும்பம் தன்னளவில் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும்.இளைய தலைமுறையினருக்கு முதுமை தொடர்பான புரிதல்களை உருவாக்க வேண்டும். முதியவர்களுடன் குழந்தைகள் உரையாடுவதையும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதையும் குடும்பம் உறுதிபடுத்த வேண்டும்.மேலும் முதியவர்களை கூட்டாக பராமரிக்கும் சமூகத்தை உருவாக்குவதை பற்றியும் அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.அதற்காக அரசு சாரா நிறுவனங்களையும் உள்ளடக்கி திட்டங்களை உருவாக்கினால் நல்ல நிலையை எட்டலாம்.
நவீன மருத்துவ அறிவியல் மனிதனின் வாழ் நாளை நீட்டிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் நீடித்திருக்கும் வாழ்நாளில் அவர்களுக்கான மனநலத்தையும் மேம்படுத்த வேண்டியது அதன் பொறுப்பு.எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதல்ல.வாழும் நாளில் எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறோம் என்பது அவசியமானது. அதனால் ஒரு தரமான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்வை முதியவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.

