
“நம் வாழ்க்கை நம் கையில்”…இந்த வாசகம் நம் வாழ்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாசகம் ஆகும்.எங்கும் எதிலும் அவசரம் காட்டும் இந்தக் காலகட்டத்தில் உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க இந்த வரிகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில்,வரும் காலங்களில் நாம் நம் கைகளால் சமைத்த உணவை உண்டால்தான் நாம் ஆரோக்கியத்தோடும் நலமோடும் இருக்க முடியும்.
நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழும்போது அனைவரும் சேர்ந்து காய்கறி நறுக்குவதும், தூய்மைப் பணிகளை செய்வதும், சமைப்பதும்… என்று வேலைகளைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு தயங்காமல் சமையல் வேலைகளை செய்வார்கள். ஏனெனில் பாட்டி, மாமியார்,மருமகள், மகள் என்று பல பெண்கள் வீட்டில் இருப்பார்கள்.
நிறைய பேர் இருந்தாலும் அவர்கள் எளிதில் மூன்று,நான்கு பேர் சேர்ந்து சமையலை முடித்து விடுவார்கள். அதுவும் நல்ல சத்தான உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பார்கள்.மதிய உணவில் ஒரு துவையல்,பொரியல், கூட்டு,வறுவல் தயாராக இருக்கும்.
சாம்பார்,ரசம்,தயிர் என்று பலவகை இருக்கும்.அதிகம் எண்ணெய் சேர்க்காமல் எளிமையாகவும் ருசியாகவும் சமைப்பார்கள்.
நம் பாரம்பரிய உணவு முறையே மிகவும் சிறந்தது என்று உணவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
தமிழரின் உணவு முறையில் உணவே மருந்தாகும். ஏனெனில்,உணவு சமைக்கும்போது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.
நம் அஞ்சறைப் பெட்டியை எடுத்துக் கொண்டால் அதில் மிளகு,சீரகம், பெருங்காயம், சோம்பு…ஒருவொரு பொருளிலும் மருத்துவ குணம் இருக்கிறது. மிளகுக்கு விஷத்தைக் கூட முறிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. சளி இருமலுக்கு மிகவும் நல்லது. மிளகு,சீரகம் சேர்த்து செய்யக்கூடிய ரசம் செரிமானத்திற்கு பயன்படக்கூடிய மிகச்சிறந்த உணவாகும். அதனால் அக்காலத்தில் மிளகு நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நான்கு மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட சாப்பிடலாம் என்று சொல்வார்களாம்.

அந்த அளவுக்கு மிளகுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உள்ளது. பட்டை,கிராம்புக்கு நம்முடைய ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது. இப்படி ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக் கொண்டால் அனைத்து பொருட்களிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழர் உணவு முறையில் நிறைய கீரை வகைகள் சேர்ப்பார்கள். முருங்கைக்கீரை, முடக்கத்தான் கீரை, தூதுவளை, பொன்னாங்கண்ணி கீரை என்று பல கீரை வகைகள் உள்ளன.
முடக்கத்தான் கீரை எலும்பு,மூட்டு வலிகளை போக்குவதற்கு உதவக்கூடியது. தூதுவளை சளியை போக்கக்கூடியது. அதனால் அக்காலத்தில் சளி பிடித்தால் உடனே மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். கொஞ்சம் மிளகு,சீரகத்தை எடுத்து நன்கு இடித்து, பூண்டு சேர்த்து இடித்து, தூதுவளையை நன்கு வதக்கி புளி மற்றும் தக்காளி சேர்த்து ஒரு தூதுவளை ரசம் வைத்து கொடுப்பார்கள். அதைச் சுடச்சுட சாப்பிட்டால் உடனே சளி குணமாகும். இதுபோல பல உணவு முறைகள் நம்முடைய பாரம்பரிய உணவில் இருக்கின்றன.
பல நோய்களுக்கு தீர்வாகவும் இருக்கிறது.
அரிசிக்கு பதில் வரகு,திணை,சாமை, குதிரைவாலி, சிவப்பரிசி என்று பல அரிசி வகைகளை பயன்படுத்தினார்கள்.இதனால் சர்க்கரை நோய் இல்லாமல் மக்களால் வாழ முடிந்தது.
அக்காலத்தில் குழந்தைகள் பிறந்ததும் அவர்களுக்கு கோரோஜனம் , கஸ்தூரி,வசம்பு…
இது போன்ற பொருட்களை இழைத்து கொடுப்பது வழக்கம். இதனால் குழந்தைகளுக்கு நன்றாக செரிமானம் ஆவதுடன் சளி இருந்தாலும் சளியை கரைத்துவிடும். ஆனால்,இப்போது மருத்துவர்கள் பிறந்த உடனேயே குழந்தைகளுக்கு இது போன்ற இழைத்துக் கொடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்கள்.அதனால் ஆரம்பத்திலேயே சளி பிடிக்கும்போது குழந்தைகளுக்கு நிறைய மருந்துகளையும், ஸ்பிரே போன்ற உபகரணங்களையும் கொடுத்து விடுகிறார்கள்.பிறகு குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இது போன்ற ஸ்பிரே பயன்படுத்தினால் தான் சளி குணமடையும் என்று ஆகிவிடுகிறது. அதனால் நம்முடைய பாரம்பரிய முறைகளை மாற்றாமல் இருப்பது நல்லது.
சிறு,சிறு கை வைத்தியங்களை நாமே செய்து கொள்வதும் நல்லது. சளிக்கு சிறிது ஓமவல்லியையும் துளசியையும் சேர்த்து சாரு எடுத்து கொடுத்தாலே சளி குணமடையும்.
மாலை நேரத்தில் புட்டு,பணியாரம், பால் கொழுக்கட்டை, கோதுமை கொழுக்கட்டை, போளி,வடை என்று பலவகையான மாலை நேர உணவுகளை செய்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இப்போது குழந்தைகள் ரோட்டோர கடைகளில் நின்று பானிபூரியும், பேல்பூரியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாலைப் பலகாரங்கள் மட்டுமல்லாமல் வீடுகளில் சமைப்பதே தற்பொழுது குறைந்து வருகிறது.
முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும்போது மட்டும்தான் ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம்.பயணம் என்றால் பல வகையான கட்டு சாதம் செய்து எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். இப்போது வீடுகளில் சமைப்பது குறைந்து சனி,ஞாயிறு என்றாலே ஹோட்டல் தான் என்று ஆகிவிட்டது.பல குடும்பங்களில் வேலை நாட்களில் சமைப்பது கூட குறைந்துவிட்டது. தற்போது ஐ.டி. கம்பெனிகள் பெருகி விட்டதால் அங்கு பணிபுரிபவர்கள் சுகி,சுமாட்டோ போன்ற ஆன்லைன் ஆப்புகள் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அதைப் பார்த்து நிறைய பேர் வீட்டில் சமைப்பதை குறைத்து ஆன்லைனில் ஆர்டர் தான்.
ஆட்டுக்கல்லில் ஆட்டி புசுபுசுவென சுடச்சுட ஆவி பறக்க இட்டிலி சாப்பிட்ட காலமெல்லாம் இப்போது பறந்து விட்டது. கிரைண்டரில் மாவாட்டிக் கொண்டிருந்த மக்கள் கூட இப்போது பாக்கெட் மாவுகளை வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.வீட்டில் அரைத்த மாவு என்றால் நாம் மாவு கரைத்து புளிக்க விடுவோம்.ஆனால் கடைகளில் வாங்கும் மாவு புளிப்பதற்காக கட்டாயமாக சில ரசாயன பொருட்களை சேர்ப்பார்கள்.அது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது ஆகும்.
அதுமட்டுமில்லாமல் சாம்பார் பொடி அரைக்க மிளகாய் , மல்லி,மிளகு,சீரகம், சோம்பு,பருப்பு,அரிசி என்று அனைத்தையும் மாடியில் உலர்த்தி காய வைத்து அரைப்பது வழக்கம்.
அந்தப் பழக்கம் கூட இப்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது.மிளகாய்த் தூள்,மசாலா தூள், ரசப்பொடி, சாம்பார் பொடி என்று அனைத்தையுமே பாக்கெட்டுகளில் போட்டு அடைத்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் கலருக்காகவும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் நிறைய கெமிக்கல்களை கலக்கிறார்கள்.இது போன்ற உணவுகளை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கட்டாயமாக உடல் பாதிக்கும். இக்காலத்தில் வரும் கேன்சர் ,ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி…
இது போன்ற பல வியாதிகளுக்கு பாக்கெட்டுகளில் அடைத்த உணவுப் பொருட்கள் காரணமாகவும் அமைகிறது.இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் வியாபாரிகளுக்கு மட்டுமே லாபமே ஒழிய நம்முடைய உடம்புக்கு கேடு தான்.அதனால் முடிந்தவரை நம் வீட்டில் அரைத்த மாவு,மிளகாய் பொடி, இட்லி பொடி என்று நாமே தயார் செய்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் நாம் உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும். எனவே நம் வாழ்க்கை நம் கையில் என்பதை உணர்ந்து நம்மால் முடிந்தவரை உணவை நம்முடைய வீட்டிலேயே நாமே தயாரித்து காலை, மாலை, இரவு என்று உண்ணுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.அது நீண்ட நாட்கள் நோய் இன்றி வாழ நமக்கு வழிவகுக்கும்.ஆம் நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது.
(ஹெல்த் அண்ட் பியூட்டி/Health and Beauty)

