
சமீப காலமாக சடன் டெத் என்று அழைக்கப்படுகிற மரணங்கள் அதிகரித்து வருகின்றன.மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள்தான் உதவிக்கு வருகிறார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான ஆபத்துடன் அழைத்து வரப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு சென்னையின் பிரபலமான எம்ஜிஎம் ஹெல்த்கேர்,மலர் மருத்துவமனை மருத்துவர்கள். நரம்பியல் மற்றும் இதய சிகிச்சைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமான மேம்பட்ட நுண்துளை செயல்முறை மூலம் வழங்கி அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த இந்த நோயாளிக்கு, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கடுமையான அடைப்பின் காரணமாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது.மேலும், அவரது இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் கடுமையாக பாதிக்கும் வகையில் கரோனரி தமனியிலும் பெரிய அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பல்வேறு சிறப்பு துறைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு, முதலில் மூளையில் இருந்த அடைப்பைச் சரிசெய்ய மண்டை ஒட்டுக்குள் ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து கழுத்துப் பகுதியில் இருந்த அடைப்பை அகற்ற ‘கரோடிட் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்க ‘கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது.
வியப்பூட்டும் விதத்தில்,இந்த மூன்று நுண்துளை சிகிச்சைகளுமே இந்நோயாளிக்கு உடலின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழப்பை ஏற்படுத்தும் மயக்க மருந்து ஊசி மட்டுமே கொடுத்து செய்யப்பட்டன. புரட்சிகரமான இந்த நவீன நுண்துளை செயல்முறைகளின் காரணமாக விரைவாக குணமடைந்த இந்நோயாளி நான்கே நாட்களில் சீரான உடல்நிலையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிர் காக்கும் இந்த சிக்கலான சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவக் குழுவிற்கு முதுநிலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோல்டன் அவர் என்று சொல்லப்படுகிற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில்… சரியான,முறையான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நமது இதில் சார்பில் பாராட்டுகள்.
-ஷைலஜா,
ஹெல்த் அண்ட் பியூட்டி.

