
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D.உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை,
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),கோயம்புத்தூர்.
உணவே மருந்து; மருந்தே உணவு… என்பது தமிழர்களின் வாழ்வியல் நெறி. நமது சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் நறுமணப் பொருட்களின் சேமிப்பகம் அல்ல; அது ஒரு நடமாடும் மருத்துவமனை. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ‘மிளகாய்’ வெறும் காரத்திற்காகவும், சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகிறது என்று நினைத்தால் அது தவறு.நாவின் சுவையைத் தூண்டி, உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும் மிளகாய்க்குள் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன.
காய்கறிகளில் காரத்தன்மை கொண்டதாக இருந்தாலும்,நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. காரத்தின் பின்னே ஒளிந்திருக்கும் அந்த ஆரோக்கிய ரகசியங்களையும், மிளகாய் நம் உடலுக்குச் செய்யும் நன்மைகளையும விரிவாகக் காண்போம்.
நம் ஆரோக்கியம் நம் கையில்.நம் ஆரோக்கியம் நம்மை சுற்றி இருக்கும் சின்னஞ்சிறு மூலிகைகளின் சேர்மங்களில்.நம் குடும்பத்தின் ஆரோக்கியமும் நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில்.
மிளகாய்…பெயர் சொன்னதுமே காரம் என்ற சுவையே நமக்கு நினைவில் வரும். நம் நாட்டு சமையலில் மிளகாய் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய பொருளாக உள்ளது.இது காரத்திற்கு மட்டுமின்றி உணவின் சுவையை கூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால்,இந்த மிளகாய் நம் நாட்டின் காய்களில் ஒன்று அல்ல. தென் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டை தாயகமாக கொண்டதுதான் மிளகாய்.நம் பாரம்பரிய சமையல் முறைகளில் நாம் காரத்திற்காக பயன்படுத்தியது மிளகு மட்டுமே. மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் நம் உணவை மருத்துவ குணம் கொண்டதாக மாற்றிய ஒன்றாகும்.
ஆனால், காலப்போக்கில் போர்ச்சுகீஸ் வணிகர்களால் தென்னிந்தியாவிலும் அரேபிய வணிகர்களால் வட இந்தியாவிலும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய் மிளகின் இடத்தை பிடித்தது.இது மிளகு போன்ற காரத்தன்மை கொண்டுள்ளதால் மிளகு +ஆய் ( மிளகாய் போன்ற என்னும் பொருளில்)என இணைந்து மிளகாய் என்னும் பெயரைப் பெற்றது. 7500 BCE ஆண்டுகளுக்கு பழமையான இது 6000 BCE ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு வணிகர்களுடன் பயணத்தை மேற்கொண்டது. இன்று மிளகாய் இந்திய தேசத்தின் ஒரு காய் அல்ல என்பதை நாம் நம்ப மறுக்கும் அளவிற்கு நம் உணவுக் கலாச்சாரத்தில் ஒன்றாகி விட்டது எனலாம்.
இவ்வாறு நம் உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கேப்சிஸின் என்ற மருத்துவ செயல் பொருளை கொண்டுள்ளது. இன்று 90 சதவீதத்திற்கும் அதிகமான வலி நிவாரணிகளின் முக்கிய மருந்துப் பொருளாக இருப்பது இந்த கேப்சிஸின்.
மிக அதிகமான எரிச்சலை உண்டாக்கும் என்பதால் வலி உள்ள உடல் பாகங்கள் மற்றும் செல்களுக்கு ஆற்றலை அதிகரித்து குணமாக்கும் தன்மையை தருகிறது. இதனாலேயே மிளகாய் மிக அற்புதமான மருந்துப் பொருளாகவும் உள்ளது. ஆயுர்வேதம்,சித்த மருத்துவம்,நாட்டு மருத்துவம் என பல்வேறு மருத்துவ முறைகளிலும் மிளகாய் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
இது வலி நிவாரணி மட்டுமல்ல.அலர்ஜி எதிர்ப்புத் தன்மைக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பண்புகளுக்கும் முக்கியமானது என அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக பார்க்கும் போது தசை மற்றும் எலும்பு வலிகளை நீக்கவும்,மூட்டு வலி மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்க மேல் பூச்சு களிம்புகளில் முதன்மையான சேர்ம பொருளாக உள்ளது.
உள் மருந்துகளில் சேர்க்கப்படும் போது செரிமானத்தை தூண்டுவதாகவும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.எனவேதான் இறைச்சி வகைகளை சமைக்கும் போது அதிக காரம் சேர்க்கப்படுகிறது. இது வெப்பத்தை அதிகரிப்பதால் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி மிக வலுவான இறைச்சியையும் இலகுவாக்கி, எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.இதன் காரணமாகவே காய்கறி உணவுகளை விட இறைச்சி உணவுகளில் காரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
மிளகாயின் மருத்துவ செயல்பாடுகள் என்பது தோலில் உள்ள வலி ஏற்பிகளை தூண்டி அவற்றின் உணர்வுத் திறனை குறைப்பதன் மூலம் வலியை குறைக்க உதவுகிறது. கீழ்வாதம்,அக்கி தொடர்பான நரம்பியல் மற்றும் நீரிழிவு சார்ந்த நரம்பியல் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. கடுமையான தலைவலியை தணிப்பதற்கு மூக்கின் உட்புறத்தில் கேப்சிஸின் தடவலாம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிகக் காரமான உணவு அல்சரை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவில் கேப்சிஸினை பயன்படுத்தும் போது செரிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெப்ப உற்பத்தியை அதிகரிப்பதால் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி,எடை மேலாண்மைக்கு உதவும் எனவும் அறியப்படுகிறது. செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதால் வாயுத்தொல்லை, வயிற்றுக் கோளாறு மற்றும் பசியின்மையை போக்க நாட்டு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இருதய நோய்களுக்கான மருத்துவ குணம் என எடுத்துக் கொண்டால் மிளகாய் ரத்தம் உறைவதை குறைக்கும்.மேலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுவதால் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வைட்டமின் சி மற்றும் ஏ அதிகப்படியாக உள்ள காய்களில் மிளகாயும் ஒன்று. மிளகாயில் பல வகைகள் உள்ளன. காரத்திற்காக சமையலில் பயன்படுத்தப்படும் நீள மற்றும் குண்டு பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய்,கேப்சிகம் என அறியப்படும் குடை மிளகாய், மற்றொரு சிற்றினமான நெய் மிளகாய் என மிளகாயின் வகைகள் உலகம் எங்கும் பல்வேறு விதமாக அறியப்படுகிறது. இவற்றுள் காரமற்ற குடை மிளகாய்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், ஆராய்ச்சிகளின் மூலம் உருவாக்கப்பட்ட வகையாகும். இக்குடை மிளகாய் பல்வேறு காய்கறிகளை விடவும் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள காய் எனலாம்.மேலும் இது உணவை சுவையாக்கும், மணமாக்கும் என்பதால் மிக அதிகமான உணவு வகைகளில் தவிர்க்க முடியாத ஒரு காயாக உள்ளது.
எனவே தான் குடைமிளகாய் சேர்க்கப்பட்ட துரித உணவுகள் ஏராளமாக இக்காலகட்டத்தில் விரும்பப்படுகிறது. சிவப்பு,மஞ்சள், பச்சை என பல்வேறு நிறங்களிலும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் காயாகவும் உள்ளது.
மிளகாயை காயாகவே உண்ணலாம் என்பது குடைமிளகாயின் ஒரு உன்னதம் என்றே சொல்லலாம். காளான்,பன்னீர் போன்ற தற்போதைய உணவுகளுடன் மிகப் பொருத்தமாக சேர்வதால் இவற்றிற்கான வணிக ரீதியான பயன்களும் அதிகம் எனலாம்.
குடைமிளகாயில் நிறைந்துள்ள நீர்ச்சத்து நம் சருமத்தின் பராமரிப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.இது நம் தோலை இளமையாக வைத்திருக்க தேவையான கொலாஜனை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்துகின்றனர்.
குடைமிளகாயை அரைத்து முகத்தில் பூசினால்,இறந்த சரும செல்களை நீக்கி,செல்களுக்கு நீர்ச் சத்தை அதிகரித்து புத்துணர்வு ஊட்டுவதாக உள்ளது.
மிளகாயின் பூவும் மருத்துவத் தன்மை கொண்டதுதான். மிளகாய் பூவில் உள்ள லூட்டின் மற்றும் சீக்சாந்தின் போன்ற கரோட்டினாயுடுகள், விழித்திரை செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் வயது தொடர்பான பார்வைக் குறைவு அபாயத்தை குறைக்கிறது.
அனைத்து உணவுத் தயாரிப்புகளிலும் நாம் மிளகாயை சேர்க்கத் தான் செய்கிறோம். ஆனாலும், ஒவ்வொரு வகை மிளகாயையும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்த வேண்டும்.பச்சை மிளகாய் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.ஆனால், மிக அதிகப்படியான காரம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிதமான அளவுகளில் எடுத்துக்கொண்டால் தான் கேப்சிஸின் மற்றும் கேப்சினாயுடுகள் “ஹெச். பைலோரி” எனப்படும் அல்சரை உருவாக்கும் கிருமிகளிடம் இருந்து காப்பதாக அமைகிறது. அதீதகாரம் கொண்ட உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் வரலாம். எனவே சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள (Capsicum frutescens) கேப்ஸிகம் ப்ரூட்டசின்ஸ் பிரி பிரி (Piri Piri) மிளகாய் அதீத காரத்தை கொடுக்கும் தன்மை கொண்டது என்பதால், தற்போதைய துரித உணவு வகைகளிலும், வெளிநாட்டு உணவு வகைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.உலக உணவு வணிகத்தில் “ஹாட் சாஸ்” எனப்படும் உணவுத் தயாரிப்பில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வகையாகவும் இது உள்ளது.
அளவுக்கு அதிகமான காரம் வயிற்றுப் பகுதியில் புண்களை உண்டாக்க கூடும். புண்கள் புற்று நோயாகவும் மாறலாம். எனவே அதீத கார உணவுகளை எடுக்க வேண்டாம்.குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நம் நாட்டின் காலச் சூழலுக்கு ஏற்ப இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் வகைகள் சரியான அளவுகளில் நாம் எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம் பிற நாடுகளில் அந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொண்ட வகைகளை நாம் உட்கொள்ளும் போதும், அதிகப்படியாக பயன்படுத்தும் போதும் ஆரோக்கியம் மேம்படுவதற்கு பதிலாக ஆரோக்கிய கேடுகள் விளைவிப்பதாகவும் இருக்கும்.
மிளகாய்த் தூளில் கலப்படம் செய்யப்படுகிறது. சரியான தூளை வாங்கி பயன்படுத்த வேண்டும். நலமுடன் வாழ மிளகாயை முறையாக பயன்படுத்திட பயிற்சி பெற வேண்டும்.

