-டாக்டர்.சதாசிவம் ரமேஷ்

ன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்நியருக்காக சுதவைத் திறந்துவைத்தல், அண்டை வீட்டாருக்கு பாத்திரம் கழுவிக் கொடுத்தல், மூத்தோர், இளையோருக்கு துணிகளைத் துவைத்தோ பெட்டி போட்டோ கொடுத்தல் ஆகிய செயல்களைச் செய்தோரின் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. அத்தகைய அன்பான உதவிகளை அவர்கள் அதனால் தொடர்ந்து செய்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இந்த அவசரமான, போட்டியிட்டுப் போரிடும் உலகிலே அன்பும், கருணையும், மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெறுவோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன.

தெரிந்தவரோ, தெரியாதவரோ யாராக இருப்பினும் அவரிடம் காட்டும் அன்பு, கருணை நமக்கு ஆனந்தமே. அது தவிர எதிர்பாராத விதத்தில் நேரத்தில் நமக்கு அவர்களில் ஒரு சிலர், உதவியும் புரியலாம். உறவுகளையும் வலுப்படுத்தும் திறன் வாய்ந்தவை அன்பும் கருணையும்.

மேலும் ஒருவரது மனச்சோர்வையும் அவை போக்கு கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்துகின்றன. சிறப்பான மனநலத்தைப் பேண உதவுகின்றன. ஒருவரது அன்பிற்கும்

அவரது உடல் நலம், மனநலம் மகிழ்ச்சி ஆகியவற்றிற்கும் நல்ல பொருத்தம் உண்டு. ரத்த தானம் செய்பவர்கள், உடல் உறுப்புதானம் செய்பவர்கள் அத்தகைய உயரிய கொடைச் செயல்களை இயல்பாகவே செய்ய முன்வருகிறார்கள். சிறப்பான, பிறருக்கு மிகுந்த பயனளிக்கும் செயலைச் செய்கிறோம் என்ற எண்ணமே அவர்களை மகிழ்ச்சிக்குரியவர் களாக்குகிறது.

பரிவு அல்லது தண்டனை மூலம் ஒருவரை அன்பும் கருணையும் காட்டுமாறு வற்புறுத்த இயலாது. அன்பும் கருணையும் தானாக வருபவை. பிறர் நம்மிடம் காட்டும் அன்பும் கருணையும், நாம் மற்றவரிடம் காட்டத் தூண்டு கோலாக இருக்கும் .மேலும் அன்பும் கருணையும், காட்டுபவர்கள், மகிழ்வோடு உயர்ந்த வாழ்க்கை வாழ்வதைக் காணும் பிறரும் தாமும் அத்தகைய வாழ்க்கை வாழும் பொருட்டு பிறரிடம் அன்பும் கருணையும் காட்டக்கூடும். நாளொன்றிற்கு சில அன்புச் செயல்கள் புரிந்து நாள்தோறும் இயன்ற அளவு அதனை அதிகரித்து வந்தால் நாம் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?

நாம் செய்யும் பணியில் மகிழ்ச்சி பெற வேண்டுமானால் அதை பயனுள்ளதாக நாம் கருதவேண்டும் என்பது மட்டுமின்றி அதற்குத் தேவையான ஆற்றலும் நமது ஆற்றலும் பொருந்தி வரவேண்டும். மேலும் முரண்பட்ட நோக்கங்களும், இலக்குகளும் மகிழ்ச்சியை அளிக்கா. குழப்பத்தையே விளைவிக்கும். மகிழ்ச்சி யுடைய மனிதர்களிடையே உடல் நலம், ஆக்கத்திறன் , செயலாற்றல், உதவும் பண்பு ஆகியவை இடம் பெறக் காணலாம். எனவே மகிழ்ச்சியாக வாழ மற்றவர்களுக்கு உதவுவோம்;வாழ்க்கையை கொண்டாடுவோம்.