டாக்டர் எஸ்.வெங்கடாசலம்,
ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர்.

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.அந்த கிராமத்தில் பலருடன் இரண்டறக் கலந்து பழகியிருக்கிறேன். அந்த மக்களின் அன்பும் உபசரிக்கும் பண்புகளும் மறக்க முடியாதவை.

எனது மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு ஒரு நாள் மாலையில் மனைவியுடன் வந்தார்.நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாகவும், மாலை 5 மணிக்கு வருமாறும் பணிப்பெண்கள் கூறியுள்ளனர்.அவர் கண்ணீருடன் கும்பிட்டு வேண்டியிருக்கிறார். அவரின் மனைவியும் டாக்டருக்கு இவரை நல்லாத் தெரியும். இவரு பேரைச் சொல்லுங்க என்று சொல்லியிருக்கிறார். பணிப்பெண்கள் விவரத்தைக் கூறியதம்… அவரைக் காண வந்தேன்.

என்னைக் கண்டதும் கண்களில் இருந்து நீர் தாரைதாரையாய் பெருகி வழிந்தது. ஊமை போல சைகையில் ஏதோ சொல்ல முயன்றார். சிறுகுரல் கூட அவரது வாயிலிருந்து வரவில்லை.அவரது மனைவியிடம் விசாரித்தேன். மதியம் ஒன்றரை மணிக்கு வழக்கம் போல சாப்பிட வந்தார்.ரொம்பப் பசிக்குது என்றார். அவரை உட்காரச் சொல்லி விட்டு தட்டில் சோறு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால்… அவரால் பேச முடியவில்லை. தொண்டையை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு, புரண்டு அழுதார். சத்தமும் வரவில்லை. நானும் பயந்து விட்டேன் என்றார்.

பீதியில் இருந்த நோயாளிக்கு முதலில் அகோனைட் மருந்து அளித்தேன். அவரது துயரம் தணியவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை அவரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஜீரணிக்கவும் இயலவில்லை. குழந்தையைப் போல் கேவிக் கேவி அழுதார்.அடுத்து Causticum உயர்வீரியத்தில்
ஒரு வேளை கொடுத்து விட்டு, “Brain-CT” ஆய்வு செய்து வருமாறு அனுப்பினேன். இரண்டாம் நாள் மதியம் வந்தார்.CT ஆய்வு அறிக்கை “BULPAR PALSY” என்று சுட்டிக் காட்டியது. ‘ARNICA-10M’ மருந்தினை நீரில் கலந்து (உறங்கும் நேரம் தவிர) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10மி.லி வீதம் தொடர்ந்து அருந்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன்.

மூன்றாம் நாள் காலை அவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுமாய் சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.இன்று காலை எழுந்ததும் அவர் வழக்கம் போல் பேசினார்.நன்றாகப் பேசினார் என்று அவரது மனைவி நன்றி பெருக்கோடு கூற… அவர் மீண்டும் கண்களில் நீர் வழிய கும்பிட்ட படி, ” சார்! என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சுன்னு நெனச்சேன்.கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க… ரொம்ப நன்றி” என்று நா தழுதழுக்கக் கூறினார்.சுவரில் மாட்டியிருந்த ஹோமியோபதியின் தந்தை மாமேதை டாக்டர் ஹானிமனைக் காட்டி… நாம் எல்லோரும் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றேன்.

இந்த சிகிச்சைக்குப் பின் அவரை எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தால்… இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.