முதுமை வந்துவிட்டால் உடற்பயிற்சி தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் அதிகம். இதுவும் ஒரு தவறான கருத்து. சிலருக்குள்ள உடல்நலப் பிரச்னைகளால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவதுண்டு. முதுமையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது எளிமையான உடற்பயிற்சி. மிகச் சிறந்த பயிற்சியும் கூட. யோகாசனம் செய்வது அடுத்த வழி. படுத்த படுக்கையில் இருப்பவர்கள் கூட படுத்துக் கொண்டே செய்யக் கூடிய சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

தனிமை வேண்டாம்

முதுமையில் உடலியக்கம் இல்லாத சோம்பேறி வாழ்க்கை கூடாது. முடிந்தவரை தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் குடும்பத்தாரோடும், முக்கியமாக பேரன், பேத்திகளோடும் உறவினரோடும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வெளியிலும் ஒரு நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொண்டு, சமூகத்தோடு இணைந்து வாழ வேண்டும். அப்போதுதான் மன மகிழ்ச்சி மிகுந்த ஆரோக்கியம் நிறைந்த வெற்றிகரமான முதுமை வாழ்வு கிட்டும்.