
டாக்டர்.கே.ராதாகிருஷ்ணன்.மனநல மருத்துவர்
திருமணமான புதிதில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரும். தம்பதியருக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும்கூட தாம்பத்தியமே அதைத் தீர்த்துவிடும். ஆனால், நாற்பது வயதுக்குமேல் முதிர்ச்சி வந்துவிடுவதால் அதுவே சரியாகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. அது தீவிர சிக்கலில்தான் போய் முடியும். இப்போதுதான் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் தேவைப்படும்.
அப்போது, குறிப்பிட்ட பிரச்னையில் இருவருக்குமே என்ன பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்துவோம். இருவரையும் பேச வைத்து, அவர்களே தங்களுடைய தவறைப் புரிந்துகொள்ள உளப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவோம். இருவருக்கும் இடையே என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது எந்தளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் சாத்தியம் என்பதையும் புரிய வைப்போம். இருவரையும் பேச வைக்கும்போதே ஒருவர் மற்றொருவர்மீது எந்தளவுக்கு அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறார் என்பது தெரிந்துவிடும். இருவருக்கும் இடையே புரிதலில் என்ன சிக்கல் உள்ளது என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறி, சில ஆலோசனைகளை வழங்குவோம்.
தம்பதியருக்கான பொதுவான ஆலோசனைகள்:
1.தம்பதியருக்கு இடையே சிக்கல்கள் வந்தால் அதை ஒருவர் மற்றொருவர்மீது பழிபோட்டு, திருப்தியடையும் மனப்பான்மை இருக்கக்கூடாது. அப்படி ஒருவர் மற்றவர் மீது பழிபோட்டால் அதில் திருப்திப்பட்டுக் கொள்ளலாமே ஒழிய அதில் முடிவை எட்ட முடியாது.
2.எந்தவொரு பிரச்சனையையும் தம்பதியர் உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது. அதை அறிவுப்பூர்வமாக அணுகும் பக்குவத்தையே இருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
3.ஒரு சிக்கல் மற்றொருவரால்தான் வருகிறது என்கிற மனப்பான்மை வரக்கூடாது. அதற்கு இருவருமே காரணமாக இருக்கலாம் என்பதை அறிதல் அவசியம்.
4.முன்முடிவுகளோடு பிரச்சனையை அணுக வேண்டாம். உதாரணமாக, எப்போதும் நானே கஷ்டப்படுகிறேன். என்மீது உனக்கு அக்கறையே இல்லை.. இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது- இதுவெல்லாம் முன்முடிவான தீர்மானங்கள். இப்படிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
5.சிக்கல்கள் வரும்போது, அதற்குத் தான் எந்த வகையில் காரணம் என்பதையும், இதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் இருவருமே ஆராய வேண்டும்.
6.தம்பதியருக்கிடையே என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் இருவருக்குமிடையே அன்பும்,புரிதலும் தேவை. இவை இரண்டும் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்த்துவிடமுடியும்.
7.இன்றைய சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு அவரது (கணவனோ/ மனைவியோ) கேரக்டர் காரணமல்ல, சில சூழல்களால் அது நடந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளவேண்டும். பிரச்சனையைப் பொதுமைப்படுத்திப் பேசக்கூடாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும்போது தம்பதியர் மகிழ்ச்சியோடு வாழலாம்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால் உடனே விவாகரத்து என்ற முடிவுக்கு வரக் கூடாது.
மனநல மருத்துவர்கள்,சைக்கோ தெரபிஸ்ட்டுகளின் ஆலோசனை பெறுவது நல்லது.நமது பிரச்சனைகளை மற்றவர்கள் தீர்க்க முடியாது என்று நம்புவது தவறு.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் புதிய வழிகளை தெரிந்துகொள்ளவும் நிபுணர்கள் உதவுவார்கள்.

