அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள்.

நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய்க்கும் சென்றுவிடும். இதனால் குடல் புழு முதல் டைபாய்டு வரை பல நோய்த்தொற்றுகள் ஏற்படும்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடையும். இதைத் தவிர்க்க கைகளில் தகுந்த பாதுகாப்பு உறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.

அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம்.

அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவார்கள். நகப்பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதில் கவனம் தேவை!

தலைமுடிக்குச் சாயங்களைப் பயன்படுத்தும்போது தரமான சாயத்தைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தரம் குறைந்த முடிச்சாயங்களில் ‘பாராபினைலின் டையமின்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது நக இடுக்குகளில் படியுமானால் புற்றுநோய் உருவாகிற வாய்ப்பு உண்டு.

நகம் வறண்டு போயிருந்தால் பாலிஷுக்கு பதிலாக மாய்ச்சுரைசரை பயன்படுத்தலாம்.

போட்டா பிரின்ட் ரசாயனத்தில் வேலை செய்கிறவர்கள், தடயவியல் துறையில் வேலை செய்கிறவர்கள் போன்றோரின் நகங்கள் பழுப்பு நிறத்துக்கு மாற வாய்ப்புண்டு. இவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சரும நோய் நிபுணரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.

ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள், கார்பன் கரித்தூள் வேலை, பெட்ரோலியம் மற்றும் டீசல் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கையுறை அணிந்து வேலை செய்ய வேண்டியது அவசியம். அதிலும் துணியால் செய்த கையுறையை உள்பக்கத்திலும், அதன் மேலே ரப்பர் கையுறைகளையும் அணிந்துகொண்டால் மிகவும் நல்லது.

பாட்டில் மூடி போன்றவற்றைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

காலுக்குச் சரியான அளவில் உள்ள  பொருத்தமான ஷூக்களை அணி்ய வேண்டியது முக்கியம்.

நகங்களை அதிக நீளத்தில் வளர்க்க ஆசைப்படாதீர்கள். அப்படி வளர்க்கும்போது அடிக்கடி அதில் காயம் ஏற்பட வாய்ப்புண்டாகும். அது நகத்தின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

நகத்தின் அளவிலோ, நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள்.

பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், முழு தானியங்கள், காய்கறி, கீரைகள், கொட்டைகள், பயறுகள் போன்ற உணவுகளை அதிமாக சேர்த்துக்கொண்டால் நகம் ஆரோக்கியமாக வளரும்.நகங்களை வெட்டும்போது கவனம்

விரல் நகங்களைக் கடிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களைக் கவனமாக வெட்டுங்கள். முக்கியமாக, பிளேடால் அல்லது கத்திரிக்கோலால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். முக்கியமாக, ஓரங்களில் உள்ள நகங்களை வெட்டும்போது அதிக கவனம் தேவை.  குளித்து முடித்ததும் நகங்களை வெட்டுவது நல்லது. பொதுவாக, கால் விரல் நகங்களை வெட்டுவதற்குக் கடினமாக இருக்கும். அப்போது உப்புத்தண்ணீரில்  அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் உப்பைக் கரைத்துக்கொண்டு, அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தபின் நகம் வெட்டினால் எளிதாக இருக்கும்.நகம் வெட்டும் கருவியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.