மது உடலில் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல்.இது ஜீரண மண்டலத்தோடு இணைந்து இயங்கும் மிகப்பெரிய சுரப்பி ஆகும். நம் வயிற்றில் மேல் பகுதியில், வலது பக்கத்தில் உதர விதானத்தின் கீழ் நெஞ்சு எலும்புகளின் பின் அமைந்துள்ளது. இதன் சராசரி எடை 1500 கிராம்.

நாம் உண்ணும் உணவில் நாம் செலவு செய்தது போக,மீதம் இருக்கும் உபரி ஆற்றலை, சத்துகளை, விட்டமின்களை,தாது உப்புகளை சேர்த்து வைக்கும் சேமிப்பு கிடங்காக செயல்படுகிறது.

இதுபோல் 500க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பணிகளை கல்லீரல் செய்கிறது என்றால் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

விரதம் இருக்கும் போதோ,அல்லது உணவு கிடைக்காத சூழ்நிலையில் பசியில் தவிக்கும் போது…ஏற்கனவே சேமித்துள்ள கொழுப்பை சத்தியாக மாற்றி நமது உடல் சீராக இயங்க உதவுகிறது கல்லீரல்.அதனால்தான் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள், இரண்டு,மூன்று நாட்கள் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிகிறது.

நாம் உணவின் மூலம் உட்கொள்ளும் ஆற்றலுக்கும் நாம் அன்றாடம் செலவிடும் ஆற்றலுக்கும் இடையே சமநிலை இல்லாதபோது உடலில் எஞ்சி இருக்கும் அதிகப்படியான சக்தி வயிறு மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கொழுப்பாக படிந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளால் கல்லீரலுக்குள் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதையே ஃபேட்டி லிவர்(Fatty liver) என்று சொல்கிறார்கள்.

நம் உடல் அதிகப்படியான ஆற்றலை சேர்த்து வைத்து விட்டால் என்ன… நல்லது தானே!என நாம் நினைக்கலாம்.

அங்குதான் ஆபத்து ஆரம்பமாகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலில் சேரும் கொழுப்பு படிப்படியாக அதன் செயல் திறனையே முடக்கி விடும் அளவுக்கு ஆபத்தாகி விடுகிறது.

கல்லீரல் பிரச்னைக்கு உள்ளாகி செயல் இழக்கும் நிலைக்கு வரும் வரை நமக்கு எந்தவித அறிகுறிகளும் தெரியாது.வலியோ தொல்லைகளோ இருக்காது.அதனால் இதை ஆங்கிலத்தில் சைலன்ட் டிசீஸ் என்று அழைக்கிறார்கள்.

1.அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.(Alcoholic Fatty liver Disease)

2மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் அல்லது மதுவை அளவோடு குடிப்பவர்களுக்கும் ஏற்படும் நோய். (Non-alcoholic Fatty liver)

யார் யார் பாதிக்கப்படலாம்?

1.அதிக கலோரிகள் உள்ள உணவு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறவர்கள்.
2.உடற்பயிற்சி,உடல் உழைப்பு இல்லாதவர்கள்.
3.பாரம்பரியமாக, மரபணு வகையில் வந்த அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள்.
4.சர்க்கரை நோயாளிகள்.

அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்பு ஆரம்ப நிலையில்(Grade 1&2)
எவ்வித அறிகுறிகளும் இருக்காது. தற்செயலாகவோ அல்லது வேறு வயிறு உபாதைகளுக்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது தான் பலருக்கும் தெரியவரும்.
சிலருக்கு வயிற்றின் மேல் வலது பகுதியில் கனத்த உணர்வு,மிதமான வலி இருக்கலாம்.

கல்லீரல் பாதிப்பு மூன்றாவது நான்காவது நிலைக்கு போகும் போது,கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும் அறிகுறிகள் ஏற்படலாம்.

முற்றிய நிலையில் மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல்,கால் வீக்கம்,பசியின்மை, உடல் எடை குறைதல்
(கை,கால் தசைகள் சுருங்குதல்). உடல் பலவீனம்,அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

தடுப்பது எப்படி?

சரோகளிட்டசார்(Saroglitazar),ரெஸ்மெடிரோம் (Resmetirom) ஆகிய இரண்டு புதிய மருந்துகள் தவிர இதுநாள் வரை எந்த மருந்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு புதிதாக வரவில்லை.

இருப்பினும் பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் கல்லீரல் பாதிப்பை தடுத்து நிறுத்தலாம்.

1.உடல் எடையை சரியாக பராமரித்து வர வேண்டும்.
2.உணவுக் கட்டுப்பாடு முக்கியம். சர்க்கரை, இனிப்பு,மைதா, பேக்கரி உணவுகள், கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3.தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து நிறைந்த பருப்பு, சிறுதானியங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
4.வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் ,45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5.மதுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
6.சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்து மாத்திரைகளை முறையாக சாப்பிட்டு வர வேண்டும்.
7.தினசரி குறைந்தபட்சம் 6-7 மணி நேர தூக்கம் அவசியம்.
8.மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை முக்கியம்.
9.கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால்,சிகிச்சை அளிக்க முடியாத போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

கல்லீரலில் கொழுப்பு சேர்வது என்பது இயல்பானது, இயற்கையானது. நாம் பசியோடு இருக்கும்போது நமக்கு சக்தியை கொடுக்கும் பணியை செய்வது கல்லீரல். கல்லீரலில் சேரும் கொழுப்பானது அளவுக்கு அதிகமாக போகும் போது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.எனவே கல்லீரலை முறையாக பாதுகாப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

தகவல் தொடர்புக்கு:
Dr G மனோகரன் MS.,MCh.
அடையார் லிவர் & காஸ்ட்ரோ கிளினிக்,
அடையார்,
9443779979.