ந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக அதிக தலசீமியா சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடினர். அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

தலசீமியா என்பது ஒரு பரம்பரை ரத்தக் கோளாறு ஆகும். இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது.இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான ரத்தச்சோகையையும்,வாழ்நாள் முழுவதும் ரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால், இந்நிலை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி,உடல் உறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும்.

சுமார் 4.2 கோடி இந்தியர்கள் பீட்டா-தலசீமியா மரபணுவைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல்,கேரியர் ஸ்கிரீனிங்,சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் மீது இந்த பாதிப்பு ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தை உணர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மேம்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) திட்டங்கள், விழிப்புணர்வு முயற்சிகள், ஆரம்பகால நோய் கண்டறிதல், விரிவான நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளுக்கான குழந்தை ரத்தவியல் மற்றும் தலசீமியா சிகிச்சையை தீவிரமாக வலுப்படுத்தி வருகின்றன.

இந்தத் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை,கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்துடன் இணைந்து, ‘தலசீமியா பால் சேவா யோஜனா’ (டிபிஎஸ்ஒய்) முன்முயற்சியின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைப் பெற ஆதரவளித்து வருகிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நான்காம் கட்டத்தில் இருக்கும் இத்திட்டம்,இந்தியா தழுவிய சிகிச்சை அணுகுமுறையின் மூலம் ‘தலசீமியா மேஜர்’ மற்றும் ‘சிவியர் அப்லாஸ்டிக் அனிமியா’ கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் முக்கியச் சுகாதார அணுகல் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

தலசீமியா மேஜர் பாதிப்புள்ள பல குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மட்டுமே தற்போதுள்ள ஒரே குணப்படுத்தும் சிகிச்சை விருப்பமாகும். அப்போலோவின் சிறப்பு குழந்தை ரத்தவியல் மற்றும் பிஎம்டி உள்கட்டமைப்பு மூலம்,தகுதியுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, கொடையாளர் பொருத்த மதிப்பாய்வு, மருத்துவப் பரிசோதனை,மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், முறையான சிகிச்சை ஆதரவு ஆகியவை சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை மேம்படுத்த வழங்கப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனை இதுவரை 500-க்கும் மேற்பட்ட தலசீமியா எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளதுடன், இத்திட்டத்தின் மூலம் 93% தலசீமியா இல்லாத வாழ்நாள் விகிதத்தை எட்டியுள்ளது. முழுமையான தகுதியுள்ள கொடையாளர்கள் இல்லாத குழந்தைகளுக்கு ஹாப்லோ-ஐடென்டிக்கல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட புதுமையான சிகிச்சை முறைகளை அப்போலோ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.இது இந்த அரிய ரத்தக் கோளாறை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குக் குணப்படுத்தும் சிகிச்சை கிடைப்பதை மேலும் மேம்படுத்துகிறது.

டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், “தலசீமியா இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அமைதியாக பாதித்து வருகிறது. இருப்பினும்,இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. ஆரம்பத்திலேயே பரிசோதனை, சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை கிடைத்தால்,பல குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற முடியும்.

அப்போலோவில், மருத்துவ சேவை என்பது மருத்துவமனைகளின் எல்லையைத் தாண்டிய ஒரு சமூகப் பொறுப்பு என நாங்கள் நம்புகிறோம். மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் ஒரே நோக்கத்துடன் இணையும்போது தான் உண்மையான மாற்றம் உருவாகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகளை அதிகமானோருக்கு கொண்டு சேர்க்கவும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் கோல் இந்தியா நிறுவனம் வழங்கிய ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க நிறுவனங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு அவர்களின் உதவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் பல நிறுவனங்கள் தலசீமியா குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழும் உரிமையும் கிடைக்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் பேசிய தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தை நலவியல் மற்றும் ரத்தவியல் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ரேவதி ராஜ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

“தலசீமியா என்பது குழந்தையை மட்டுமல்ல,முழு குடும்பத்தின் உணர்ச்சியையும், நிதி ரீதியான நல்வாழ்வையும் பாதிக்கிறது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான வாய்ப்புகள் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.இன்று, எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒவ்வொரு தலசீமியா வெற்றியாளரின் துணிச்சலையும் நாங்கள் கொண்டாடுகிறோம் என்றார்”.
-ஷைலஜா.