கால்-கை வலிப்பை காக்கை வலிப்பு என்று சொல்லி பழகி விட்டோம். இயல்பான உடல் அசைவுகளில் மாற்றம் ஏற்பட்டாலோ,சில நிமிடங்களுக்கு மட்டும் சுய நினைவு இருந்தாலும் அவர் இழுப்பு, வலிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார் என்று பொருள். தொடர்ந்து வலிப்பு ஏற்படும் ஒரு வகை நோய் காக்கை வலிப்பு(Epilepsy) ஆகும்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருக்கும் கால் கை வலிப்பு வரலாம். சாதாரணமாக நமது மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. காக்கை வலிப்பு நோய் எனக்கு இருக்கிறது என்று யாரும் வெளியில் சொல்லிக்கொள்ள விரும்புவது இல்லை.இதனால் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில் ஒருவித அச்சமும் தயக்கமும் இருக்கிறது.

இந்த தடைகளை உடைக்கும் விதத்தில்..

காவேரி மருத்துவமனைகள் குழுமம் ஒருங்கிணைந்த மண்டல வலிப்பு நோய் சிகிச்சை மையத்தை (K-REC) சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்பட இருக்கிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக,மூன்று கிளைகளிலும் வலிப்பு நோய் சிகிச்சைக்கான சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த மையங்களில் நரம்பியல் நிபுணர்கள், மூளை-கதிர்வீச்சியல் நிபுணர்கள், நரம்பு-மின்னியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள், மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழு ஒருங்கிணைந்து செயல்படும்.

இந்த மூன்று மையங்களைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் 15 நாட்களுக்கு ஒருமுறை காணொளி வாயிலாக ஒன்றுகூடி சந்தித்து, நோயாளிகளின் பாதிப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்து தீர்வுகாண விரிவாக விவாதிப்பார்கள். மருத்துவக் குழுக்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தரவுகளை முறையாகச் சேகரிக்கவும், வலிப்பு நோய் சிகிச்சைக்கான பொதுவான நெறிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளன.

மருந்துகளால் போதுமான அளவு கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய் உள்ளவர்கள், கூடுதல் பரிசோதனைகளுக்காக ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை வலிப்பு நோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.அவர்களுக்கு, அறுவைசிகிச்சை உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகள் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அறுவைசிகிச்சை செய்வது என்ற முடிவு எடுக்கப்படுமானால்,அந்த சிகிச்சை மையத்திலேயே தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பின்தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள காவேரி மருத்துவமனை வலிப்பு நோய் சிகிச்சை மையத்திற்கே அந்நோயாளிகள் மீண்டும் மாற்றப்படுவார்கள்.

நரம்பியல் துறையின் பல்வேறு பிரிவுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் துல்லியமான நோயறிதலும் மற்றும் வலிப்பு நோய்க்கு பலனளிக்கும் மேலாண்மை சிகிச்சையும் சாத்தியமாகும். ஏனெனில், வலிப்பு நோயின் வகையைத் தவறாகக் கணித்தால் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம்; அதேபோல, மூளையில் ஏற்படும் சிறிய கட்டிகள் அல்லது பிற மாற்றங்கள் காரணமாகவும் மருந்துகள் திறம்பட செயலாற்றாமல் போகலாம். இத்தகைய சூழலில் நோயாளிக்கு அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வாக அமையும்.

இந்த மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் செயல்பட்டு வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர்,டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காக்கை வலிப்பு நோய்க்கு சிகிச்சை இருக்கிறது… மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவது சிறந்த பணியாகும்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.