மீப காலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையாக சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை நிபுணர்கள், 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

சிக்கலான மண்டையோட்டுத் திறப்பு அறுவை

சிகிச்சையின் மூலம் இந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னதாக, கட்டியை சுருங்கச்செய்வதற்கு ரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலைசேஷன்)சிகிச்சையின் மூலம் கட்டியின் ரத்த ஓட்டம் மருத்துவர்களால் கணிசமாக குறைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு விடாப்பிடியான தலைவலி, பலவீனம் மற்றும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமம் உள்ளிட்ட நரம்பியல் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. விரிவான மூளைப் பரிசோதனை செய்யப்பட்டதில் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு திசுக்களான மெனிஞ்சியஸ் திசுக்களிலிருந்து தோன்றும் மூளை உறை புற்றுநோய் (மெனிஞ்சியோமா) என்ற மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் கட்டியை அகற்ற துல்லியமான மண்டையோட்டு திறப்பு அறுவைசிகிச்சை
தேவைப்பட்டது. இது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றி மூளைக்குள் சென்று கட்டியை அகற்றுவதற்கு வழிவகுக்கும் திறந்தநிலை மூளை அறுவை சிகிச்சையாகும். இருப்பினும்,இந்த நுட்பமான,அதிக சிக்கலான அறுவை சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் எம்போலைசேஷன் என்ற நவீன குறைந்தபட்ச ஊடுருவல் செயல்முறையை மேற்கொண்டனர். இதில் கட்டிக்கு ரத்தஓட்டத்தை வழங்கும் முக்கிய ரத்த நாளங்கள் தடுக்கப்பட்டு,ரத்த ஓட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்த செயல்முறையானது அடுத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவியதுடன், நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினருக்கு தெளிவான பார்வைநிலை கிடைப்பதை சாத்தியமாக்கியது; இதன் மூலம் கட்டியை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் அகற்ற முடிந்தது.

இந்த எம்போலைசேஷன் சிகிச்சையை நரம்பியல் இடையீட்டு சிகிச்சைப் பிரிவின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் கார்த்திகேயன் எஸ். டாக்டர் சாய் பிரசாந்த் பி.ஆர். மேற்கொண்டபோது,மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆகிப் சலியா மண்டையோட்டு திறப்பு அறுவைசிகிச்சையை செய்தார். நரம்பியல் துறையின் இடையீட்டு சிகிச்சை, அறுவைசிகிச்சை, மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை வல்லுனர்கள் என பல்வேறு துறைகளுக்கிடையிலான நேர்த்தியான ஒருங்கிணைப்பு இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “மூளையில் இதுபோன்ற பெரிய கட்டிகள் மிகவும் அரிதானவை, உலகளவில் இதுபோன்ற சில நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பல்துறை நிபுணர்களின் கவனமான திட்டமிடல் மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கட்டியை முழுமையாக அகற்ற முடிந்தது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய எம்போலைசேஷன் செயல்முறை, கட்டிக்கான ரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைத்ததால், அதிக பாதுகாப்புடனும் மற்றும் துல்லியத்துடனும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. உடல் இயக்கத்திறனை அதிகளவில் பாதிக்கக் கூடிய ஒரு செயல்முறை என்ற கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் மூளைக் கட்டி அறுவை சிகிச்சை குறித்து இருக்கிறது. இருப்பினும்,நவீன நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் நரம்பியல் இடையீட்டு நுட்பங்களின் சமீப முன்னேற்றங்கள் காரணமாக,இது போன்ற கவலைகள் இப்போது இருக்க வேண்டியதில்லை” என்றார்.

சாதனை செய்த மருத்துவ குழுவுக்கு நமது எதிர் சார்பில் வாழ்த்துகள்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.