டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன்,
இயக்குனர், கதிரியக்க நிபுணர், ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ்.

சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் இந்தியா இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் வேகமெடுத்திருக்கிறது.பொருளாதார வளர்ச்சியானது லட்சக்கணக்கான மக்களை நகர்ப்புற, நடுத்தர வர்க்கமாக உயர்த்தியிருந்தாலும்,தொடர்ந்து அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் அவர்களது குடும்பப் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாகவே இருந்து வருகின்றது. பெருநகரங்களிலும், இரண்டாம் நிலை நகரங்களிலும் வசிக்கும் பல குடும்பங்களுக்கு, சிறந்த சிகிச்சையின் அடித்தளமான ‘துல்லியமான மற்றும் ஆரம்பக்கட்ட நோயறிதல்’என்பது இன்றும் பொருளாதார ரீதியாக எட்ட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஒரு ரேடியாலஜிஸ்டாக (Radiologist)எனது அன்றாடப் பணியில், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சிகிச்சை தாமதமாவதையும், அதனால் உடல்நலச் சிக்கல்கள் அதிகரிப்பதையும், தவிர்த்திருக்க வேண்டிய வேதனைகளை நோயாளிகள் அனுபவிப்பதையும் நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.

ஆனால், மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளும் புதிய நோயறிதல் முறைகள்,இந்த நிலையை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கியுள்ளன.

நம் முன்னே இருக்கும் முக்கிய சவால்:

அதிகரிக்கும் செலவுகளும், மருத்துவ சேவையைப் பெறுவதில் உள்ள தடைகளும்
கடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவில் மருத்துவச் செலவுகள் மக்களின் வருமான உயர்வையும் தாண்டி,மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காக மக்கள் முதலில் தள்ளிப்போடுவது, மருத்துவப் பரிசோதனைகளையும்,சிறப்பு மருத்துவர்களை நேரில் சந்தித்து பெறும் ஆலோசனைகளையும் தான்.

பெருநகரங்களிலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் குறைவான கட்டணத்தில் பரிசோதனை செய்யும் வசதிகள் பரவலாக இல்லை. இதனால், நோயாளிகள் வேறு வழியின்றி அதிகக் கட்டணம் கொண்ட மருத்துவமனை சிகிச்சை தொகுப்புகளை நாட வேண்டியுள்ளது; அல்லது ஒரே பரிசோதனைக்காகப் பலமுறை மருத்துவமனைக்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ள இந்தச் சிக்கலை மேலும் பெரிதாக்குவது, கதிரியக்கவியல் (Radiology)மற்றும் நோயியல்(Pathology) போன்ற துறைகளில் நிலவும் நிபுணர்களின் பற்றாக்குறைதான். ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை முடிவுகளைத் துல்லியமாகப் படித்துச் சொல்வதற்கு இந்த நிபுணர்கள் மிகவும் அவசியமானவர்கள்.

துறைசார்ந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில் நோயறிதல் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆண்டுக்கு 23.1 சதவீதம் என்ற விகிதத்தில் (23.1% CAGR) வளர்ந்து வருகிறது.இதற்கு ஒரு முக்கியக் காரணம், இத்துறையில் போதிய அளவு திறமையான மருத்துவ நிபுணர்கள் இல்லாததே ஆகும்.

அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மாதிரிகள்:

மலிவு விலை சிகிச்சையை விரிவுபடுத்துதல் மருத்துவச் சேவையை மக்கள் எளிதாகப் பெறுவதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது, ‘அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மாதிரி’ (High-volume diagnostic model) ஆகும்.

இந்த முறையானது, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளை சாத்தியமாக்கும் வகையில் மையப்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் (Centralized Laboratories), பரவலாக செயல்பட்டு வரும் சேகரிப்பு மையங்கள் மற்றும் இணையவழி அறிக்கை முறைகளை(Online Reporting) ஒன்றிணைத்துச் செயல்படுகிறது. இதன் மூலம்,ஒரே நேரத்தில் ஏராளமான பரிசோதனைகளை மிகத் திறமையாகவும் வேகமாகவும் மேற்கொள்ள முடிகிறது.

உதாரணமாக, இந்தியாவின் முன்னணிப் பரிசோதனை நிறுவனங்கள், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பரிசோதனை மையங்களை இயக்குகின்றன. அதிக அளவில் சோதனைகள் நடைபெறுவதால், ஒவ்வொரு தனிப்பட்ட பரிசோதனைக்கும் ஆகும் செலவு கணிசமாகக் குறைகிறது.

தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் டிஜிட்டல் சுகாதாரப் பதிவேடுகள் நோயாளியின் மருத்துவத் தகவல்களையும் பரிசோதனை முடிவுகளையும் ஒருங்கிணைக்கின்றன.இதனால், தேவையற்ற மறுபரிசோதனைகளைத் தவிர்க்க முடிவதோடு, நோயாளிகளுக்கான செலவும் வெகுவாக குறைகிறது.

இந்த ABDM திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான டிஜிட்டல் சுகாதாரப் பதிவேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இது மருத்துவர்களுக்கும் பரிசோதனை மையங்களுக்கும் இடையே நோயாளியின் மருத்துவ வரலாற்றைப் பகிர்வதையும், அணுகுவதையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. நாடு தழுவிய துல்லியமான புள்ளிவிவரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும்,இந்த டிஜிட்டல் ஒருங்கிணைப்பு சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதி செய்வதோடு, மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய வீணான செலவுகளைக் குறைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கதிரியக்கக் கட்டமைப்பிலும் (Radiology Infrastructure), நோயாளி பராமரிப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவராக, இந்த மாற்றத்தை நான் நேரில் காண்கிறேன். வழக்கமான ரத்தப் பரிசோதனையோ அல்லது ஸ்கேன் வசதியையோ,முன்பு இருந்தது போல அதிகக் கட்டணம் குறித்த பயம் ஏதுமின்றி, அதிகமான நோயாளிகளால் இப்போது செய்துகொள்ள முடிகிறது.

தொலைமருத்துவம்:

தூரமும் தடையில்லை, தாமதமும் இல்லை.  சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு, குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களில் வசிக்கும் நோயாளிகளுக்கு, தொலைமருத்துவத் தளங்கள் (Telemedicine platforms) இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டன.
இந்தியாவின் முதன்மைத் தொலைமருத்துவச் சேவையான ‘இ-சஞ்சீவினி’ (eSanjeevani), இதுவரை கோடிக்கணக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் நோயாளிகளை இணைப்பதன் மூலம்,நிபுணர்களை நேரில் சென்று சந்திக்க வேண்டிய பயணங்களைத் தவிர்க்க இது உதவுகிறது. இதனால் நோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பெரும் அலைச்சலும், பணமும் மிச்சமாகிறது.

உள்ளூரில் செய்யப்படும் பரிசோதனைகளை, வெளியூரில் இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையோடு இணைப்பதன் மூலம்,நோயாளிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க முடிகிறது. மேலும்,நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லாமல்,சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து,உரியத் தொடர் சிகிச்சையைப் பெற இது வழிவகுக்கிறது.

எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன்களில் உள்ள பாதிப்புகளை (Abnormalities) உடனுக்குடன் சுட்டிக்காட்டுவதன் மூலம்,கதிரியக்க நிபுணர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பேருதவியாக இருக்கின்றன. இதனால், பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பல நாட்கள் காத்திருந்த நிலை மாறி,இப்போது சில மணிநேரங்களிலேயே முடிவுகள் கிடைக்கின்றன.

மேலும்,அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடைபெறும் இடங்களில்,ஒரு நோயாளிக்கு ஆகும் செலவும் கணிசமாகக் குறைகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம்:

துல்லியம், விரைவான பரிசோதனை முடிவுகள் மற்றும் மலிவான கட்டணம்
செயற்கை நுண்ணறிவு இன்று நோயறிதல் துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பரிசோதனை முடிவுகளின் துல்லியத்தை அதிகரிப்பது, முடிவுகள் கிடைக்கும் நேரத்தை வெகுவாகக் குறைப்பது மற்றும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய பகுதிகளையும் தாண்டி மருத்துவ சேவையை விரிவுபடுத்துவது எனப் பல வகைகளில் இது முக்கிய பங்காற்றுகிறது.

2024 முதல் 2030-ம் ஆண்டிற்குள், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மருத்துவ நோயறிதல் சந்தை கிட்டத்தட்ட நான்கு மடங்கு வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில்—குறிப்பாக கதிரியக்கவியல் நோயியல் மற்றும் நோயைக் முன்கூட்டியே கணிக்கும் பகுப்பாய்வு (Predictive analytics) ஆகியவற்றில்—இந்தத் தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை இது காட்டுகிறது.

கதிரியக்கத் துறையை எடுத்துக்கொண்டால்,இந்தியா முழுவதும் தற்போது1.48 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே கருவிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இமேஜிங் மற்றும் ஸ்கேன்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும் (Image interpretation), தொலைதூரக் கண்காணிப்பிற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுவதால், இத்துறையின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. பெருநகரங்களைத் தாண்டி,இப்போது புறநகர்ப் பகுதிகளிலும் இந்த வசதிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் செயற்கை நுண்ணறிவு
நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) மற்றும் காசநோய் (TB) போன்றவற்றுக்கான பரிசோதனைக் கருவிகள் மூலம், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொது சுகாதார சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட பரிசோதனைக் கருவிகள் இதுவரை பல்லாயிரக்கணக்கான மருத்துவப் படங்களை ஆய்வு செய்து, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குப் பயனளித்துள்ளன. அதேபோல, “காசநோய்க்கு எதிரான இருமல்” (Cough Against TB) போன்ற சமூகத் திட்டங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே நுரையீரலைப் பாதிக்கும் காசநோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றன.இம்முறை அமல்படுத்தப்பட்ட இடங்களில், வழக்கமான முறைகளைக் காட்டிலும் கூடுதலாக 12 முதல் 16 சதவீதம் வரை நோயாளிகளைக் கண்டறிய முடிந்துள்ளது.

நாம் இங்கே முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு மருத்துவர்களுக்கு மாற்றானது அல்ல; அது அவர்களின் சேவையை இன்னும் பலரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி மட்டுமே.

வேலைப்பளு அதிகம் உள்ள ஆய்வகங்கள் மற்றும் ஸ்கேன் மையங்களில், மருத்துவ அறிக்கைகளை (Reports) விரைவாகத் தயாரிக்கவும், மருத்துவர்களின் சோர்வைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் நிபுணர்களால் சிக்கலான மருத்துவ வழக்குகளில் அதிக கவனம் செலுத்த முடிவதோடு, குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை முடிவுகளையும் எட்ட முடிகிறது.
இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் இந்தியாவின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருக்கும், இரண்டாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி அன்றாட வாழ்வில் அர்த்தமுள்ள நன்மைகளைத் தருகிறது.

பெரிய அளவில் செயல்படும் நவீன பரிசோதனை முறைகள், வழக்கமான சோதனைகளுக்கான செலவைக் குறைத்துள்ளன. இதனால் நோயாளிகள் தங்கள் கைக்காசை அதிகம் செலவு செய்வது குறைந்து, முன்னெச்சரிக்கை மற்றும் தொடர் பரிசோதனைகளைச் செய்துகொள்வது எளிதாகியுள்ளது.

டெலிமெடிசின் (Telemedicine) வசதி மூலம்,நோயாளிகள் பெரிய நகரங்களுக்குப் பயணம் செய்யும் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தி, அங்கிருந்தபடியே சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடிகிறது.அதே வேளையில், புற்றுநோய், காசநோய்,இதயம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் அறிகுறிகள் தீவிரமடைவதற்கு முன்பே, அவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் உதவுகின்றன.

ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதாரப் பதிவேடுகளின் (Unified Digital Health Records) பயன்பாடு அதிகரித்து வருவதால்,ஒரு நோயாளியின் பரிசோதனை முடிவுகளை எந்த மருத்துவரும் எளிதாகப் பார்க்க முடிகிறது.இது தேவையற்ற மறுபரிசோதனைகளைத் தவிர்ப்பதுடன், சிகிச்சையில் தாமதம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்கிறது.இன்று கோயம்புத்தூர், ஜெய்ப்பூர் அல்லது கொச்சி போன்ற நகரங்களில் உள்ள ஒரு நோயாளி,ஒரு காலத்தில் பெருநகரங்களில் மட்டுமே கிடைத்த உயர்தரமான பரிசோதனைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும், மிகக் குறைந்த செலவில் பெற முடிகிறது.

மருத்துவச் சமத்துவத்தின் முதல் படியாக நோயறிதல் (Diagnostics) அனைவருக்கும் எளிதாகி இருக்கிறது

இந்தியாவின் மருத்துவத் தேவைகள் வளர்ந்து வரும் சூழலில், சரியான நேரத்தில், குறைவான செலவில்,தரமான சிகிச்சையை அளிப்பதில் நோயறிதல் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.
டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியுடன் செயல்படும் பெரிய அளவிலான பரிசோதனை மையங்கள்,’தரமும் மலிவான விலையும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல, இரண்டும் சாத்தியமே’ என்பதை நிரூபித்து வருகின்றன.
பரிசோதனை முடிவுகள் வரும் நேரத்தைக் குறைப்பது,சிறப்பு மருத்துவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவது மற்றும் நவீன பரிசோதனை வசதிகளை மக்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பது ஆகியவற்றின் மூலம்,நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும்,சிறு நகர மக்களும் நீண்ட காலமாகச் சந்தித்து வந்த மருத்துவ இடைவெளியை இம்முறைகள் சரிசெய்கின்றன.

செயற்கை நுண்ணறிவு:

மருத்துவத் துறையின் முன்னேற்றத்தை பல மடங்கு அதிகரிக்க செய்யும் ஒரு மாபெரும் சக்தி
குறிப்பாக, மருத்துவர்களின் பணிச்சுமையைச் சமாளிக்கவும், துல்லியமாக நோயைக் கண்டறியவும், மருத்துவ நிபுணத்துவம் குறிப்பிட்ட புவியியல் எல்லைகளைத் தாண்டிச் சென்றடையவும் உதவும் ஒரு மாபெரும் சக்தியாக (Force multiplier) செயற்கை நுண்ணறிவு உருவெடுத்துள்ளது.

விரிவுபடுத்தக்கூடிய செயல்பாட்டு மாதிரிகள் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பதிவேடுகளுடன் இது இணையும்போது, நோயை முற்றிய நிலையில் கண்டறிவது என்ற நிலை மாறி, ‘ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது’ என்பதே வழக்கமாக மாறும் ஒரு சூழல் உருவாகிறது.
எதிர்காலக் குறிக்கோள் எதிர்காலத்தில், தொழில்நுட்பத்தை நோயாளிகளின் உண்மையான தேவைகளுடன் இணைக்கும் அதே வேளையில், மருத்துவ ரீதியான உறுதித்தன்மை (Clinical validation), தரவுப் பாதுகாப்பு (Data security) மற்றும் நெறிமுறைகளை (Ethical use) உறுதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றை சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளும் இந்த முறை, இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் (inclusive), உறுதியான மற்றும் நிலையான சுகாதாரக் கட்டமைப்பின் மிக வலிமையான தூண்களில் ஒன்றாகத் திகழும் என்பது நிச்சயம்.