மீபகாலமாக முதுகு வலியால் அவதிப்படுபவர்களை அதிக அளவில் பார்க்கிறேன். முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும்.சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும்.அந்த மாதிரி காரணங்களில் மிகவும் முக்கியமானவை முதுகெலும்புச் சவ்வு விலகுவதும் (Disc prolapse) முதுகெலும்பு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதும்.

இந்தக் காரணங்களால் முதுகெலும்பை ஒட்டி தண்டுவடம் செல்லும் துவாரம் சிறுத்துவிடுகிறது. இதனால் அங்குள்ள நரம்பு அழுத்தப்படுகிறது. அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு,ரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக,காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் முதுகிலிருந்து காலுக்குப் பரவும் வலியை ‘சியாட்டிகா’ (Sciatica) என்கிறோம்.

ஆரம்பத்தில் இந்த வலி அவ்வப்போது கீழ்முதுகில் மட்டும் ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி எனத் தீர்மானித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். திடீரென்று வலி கடுமையாகிப் பின்புறத் தொடைக்கோ காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பாயும். படுத்து உறங்கும்போது வலி குறைந்து, நடக்கும்போது அதிகமாகும்.நாளாக ஆக காலில் மரத்துப்போன உணர்வும் ஏற்படும். இதைக் காலத்தோடு கவனிக்காவிட்டால் கால் மெலிந்துவிடும்.

ஆப்ரேஷன் எப்போது அவசியம்?

முதுகெலும்புச் தொடையில்/ காலில் வலி இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.இது சியாட்டிகாவுக்கு முந்தைய நிலை. எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனையில் இதை உறுதி செய்ய முடியும்.ஓய்வு எடுப்பது,இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி,ட்ராக்ஷன் சிகிச்சை,வலி குறைப்பு மாத்திரைகள்/ஊசிகள் போன்றவற்றால் வலி சரியாகிவிட வாய்ப்புகள் அதிகம். சிலருக்குத் தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.ஆனால்,சவ்வு விலகியிருந்து,வலி கடுமையாகி கால் மரத்துப்போனால், முதுகெலும்புகள் வீங்கியிருந்தால் ஆப்ரேஷன் அவசியம்.

இந்த ஆப்ரேஷனை நரம்பில் செய்வதில்லை. பாதிக்கப்பட்ட தண்டுவடத்தைச் சார்ந்த முதுகெலும்பில்தான் செய்கிறார்கள். கழுத்தை நெரிப்பவரின் கைகளை எடுத்துவிடுகிற மாதிரி,கால் நரம்பை அழுத்திக்கொண்டிருக்கும் சவ்வை மட்டும் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அந்த இடத்தில் உலோகச் சவ்வைப் பதிக்கிறார்கள். இன்றைக்குள்ள நவீன கருவிகளின் துணையுடன் இந்த ஆப்ரேஷனை நுட்பமாகச் செய்துவிடுவதால் பயப்படத் தேவையில்லை.

சமீபகாலமாக முதுகைக் கிழிக்காமல் லேப்ராஸ்கோப்பி உதவியுடன் முதுகில் சில துளைகள் மட்டும் போட்டு நவீனமாகவும் (Lumbar Endoscopic Discectomy) இதைச் செய்கிறார்கள். ஆனால், பயனாளிக்கு எந்த வகை ஆப்ரேஷன் தேவை என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். எதுவானாலும் ஆப்ரேஷனுக்குப் பிறகு முதுகுத் தசைகளுக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகுக்குப் பலம் கிடைக்கும். முதுகுவலி மீண்டும் ஏற்படாது.

முதுகெலும்பு விலகிவிட்டால்?

இனியா ஓர் இளம் மனைவி.அவர் ஒருமுறை வீட்டுப் பரணியில் இருந்த சூட்கேஸை ஏணி வைத்து இறக்கும்போது ஏணிப்படியில் தடுமாறித் தரையில் விழுந்துவிட்டார். இடுப்பிலும் காலிலும் பலத்த அடி; அதிக வலி. எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் முதுகெலும்பில் சவ்வு விலகியிருந்தது. அத்துடன் 4-வது, 5-வது லம்பார் எலும்புகளும் விலகியிருந்தன. எலும்பு மருத்துவரிடம்
அனுப்பிவைத்தேன். இனியா தாய்மையை எதிர்நோக்கிக்கொண்டிருப்பவர் என்பதால்,’விலகிய சவ்வை அகற்றுவது மட்டும் சரிப்படாது; இடம் மாறிய எலும்புகளை சரியான இடத்துக்குக் கொண்டுவந்து, அவை மறுபடியும் விலகிவிடாமல் இருக்க,உலோக ஸ்குருக்களை எலும்புகளில் பொருத்தி நிலை நிறுத்தினால்தான் வலி பூரணமாகக் குணமாகும்.அவர் கர்ப்பமடையும் போதும் பிரசவத்தின்போதும் இந்த வலி வராது என முடிவு செய்த எலும்பு மருத்துவர் அப்படியே செய்தார். அதன் பிறகு இனியா எவ்வித சிரமமும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார்.

இனியாவுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்'(Spondylolisthesis) என்று பெயர். பிறவிக்கோளாறு, விபத்து,அடிபடுதல், அழற்சி போன்றவை காரணமாகவும், அதிக சுமை தூக்குவது, கடுமையான ஜிம் பயிற்சிகள்/எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் முதுகெலும்பு விலகிவிடும். முக்கியமாக,லம்பார் பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்ததுபோல் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்க வேண்டிய எலும்புகள், கோபித்துக்கொள்ளும் குழந்தை அம்மாவின் பிடியிலிருந்து நழுவி ஓடுவதுபோல் பக்கவாட்டிலோ முன்புறமோ நழுவிவிடும். ஏற்கெனவே சொன்னதுபோல் இதிலும் தண்டுவட நரம்புகள் அழுத்தப்பட்டு முதுகுவலி,கால்வலி கடுமையாகும். இதற்கும் அறுவை சிகிச்சைதான் உதவும்.

 

முதுகுவலியைத் தடுக்க 10 கட்டளைகள்!

1.நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதையும், அடிக்கடி குனிந்து எழுந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும்.

2.நாற்காலியில் உட்காரும்போது கால் மீது கால் போட்டு உட்காரக்கூடாது.

3.முதுகுவலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கக் கூடாது.இவர்கள் தரையிலோ, பெஞ்சிலோதான் படுக்க வேண்டும் என்பதில்லை; சரியான மெத்தையில் பக்கவாட்டில்,சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

4.சுமையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும்.சுமையை மார்பில் தாங்கிக்கொள்ள வேண்டும்.

5.நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே தரையைச் சுத்தம் செய்யவது நல்லது.

6.மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

7.உயரமான செருப்புகள் அணிவது ஆகாது.

8.மோசமான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டீயரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.

9.உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.அதிக எடை பல நோய் பாதிப்புகளை தரலாம்‌.ஆயுளும் குறையலாம்.

10.சிறு வயதில் இருந்தே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
உடற்பயிற்சி செய்து வந்தால் இதய நோய்களை தவிர்க்கலாம்.இளமையுடன் உற்சாகமாக வாழலாம்.