– டாக்டர் டி.கமலாரதி, ஹோமியோபதி மருத்துவர், மனநல ஆலோசகர்

நம் அன்றாட வாழ்வில் இன்று செல்போன் முக்கிய அங்கமாகி விட்டது; அவசியமான ஒன்றாகி விட்டது. அதை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செல்போனே உலகம் என்று கிடக்கிறார்கள். மது போதை, கஞ்சா போதை, சினிமா போதை என்பது போல கைப்பேசியே கதியென்று கிடப்பதும் ஒருவகை போதைதான்.

செல்போன் போதை, மாணவர்களையும், இளைஞர்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இணையதளம், சமூக ஊடகங்கள் என்று மூழ்கிக் கிடக்கிறார்கள். அடிக்கடி செல்ஃபி எடுப்பது, அதை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போட்டு, அதிக ‘லைக்’களுக்கு ஆசைப்படுவது என்று இருப்பதும் ஒருவகை மனநல பாதிப்புதான். செய்திகள், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காகவும், வேலை மற்றும் தொழில் நிமித்தமாகவும், பயனுள்ள விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும் கைப்பேசியை சிறிது நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘ரிலாக்சேஷனு’க்காகவும் சிலர் சிறிது நேரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேநேரத்தில், நமது ஓய்வு நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் செல்போனுக்காக நாம் இழக்கக்கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல்நலனும், மனநலனும் முக்கியம். ஓயாது உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் சிறிது ஓய்வும், சரியான தூக்கமும் அவசியம். ஆனால், இக்கால இளைஞர்கள் பலர் முழுநேரமும் வீடியோ கேம்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்களே கதியென்று கிடக்கிறார்கள். உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், சமூகத்துடன் தொடர்பு இல்லாமல் தங்களுக்கென்று தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னை மறந்து, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட அறியாமல் போனிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் செல்போன் போதை. இப்போதையினால் பாதிக்கப்பட்டவர்கள், தூங்கும்போதும் அருகில் செல்போன் இருக்கும். விழிக்கும்போதே செல்போன் முகத்தில்தான் விழிப்பார்கள். செல்போன் ஒலித்தால் உடனே அவசரமாக எடுப்பது, ‘நோட்டிபிகேஷன்ஸ்’ வந்தால் உடனே எடுத்துப் பார்ப்பது, வாட்ஸ்அப்பில் செய்திகள் ஏதும் வரவில்லை என்றால் வருத்தப்படுவது, அடிக்கடி போனை எடுத்து மெசேஜ் ஏதும் வந்துள்ளதா என பார்ப்பது, செல்போனில் சார்ஜ் இல்லை என்றாலோ பழுது அடைந்தாலோ பதறுவது, கோபப்படுவது என்று இருப்பார்கள். தூங்கும் நேரம், சாப்பிடும் நேரத்தைக் கூட மறந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லது சாப்பிடும்போது கூட செல்போனை நோண்டிக் கொண்டிருப்பார்கள். இரவில் அதிகநேரம் கண் விழித்து செல்போனை நோண்டிக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற செயல்களால் இவர்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும். காலையில் தாமதமாக எழுவது, கல்லூரி, அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது, கல்லூரியில் பாடத்தை கவனிக்காமல் தூங்குவது; அலுவலகத்தில் வேலையைக் கவனிக்காமல் தூங்குவது, மற்றவர்களிடம் சுமூக உறவில்லாமல் இருப்பது, சகஜமாக பழகத் தயங்குவது போன்ற பிரச்னைகளுடன் காணப்படுவார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களின் படிப்பும், முன்னேற்றமும் இதனால் மிகவும் பாதிக்கப்படும். கணவன்&மனைவி இடையே நெருக்கம் குறைந்து உறவில் நாட்டமில்லாமல் போய்விடும்.

கைப்பேசியில் அதிகநேரம் பேசுவதாலோ அல்லது அதிக நேரம் பார்ப்பதனாலோ கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் கண், காது, நரம்பு மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படலாம். செவித்திறன் குறைவு, கண் எரிச்சல், கண் பார்வை குறைவு, காது வலி வருவதாக கூறப்படுகிறது. கைப்பேசியில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் கண் மற்றும் மூளையில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கைப்பேசிக்கு அடிமையானவர்களுக்கு மன அழுத்தம், அதீத கோபம், எரிச்சல் போன்ற மனநல பிரச்னைகளும், மனநோயும் வரும். அவர்களின் திறமை, ஆளுமைத்திறன், சிந்திக்கும் திறன் குறையும். சிறுவர்கள் அதிகம் கைப்பேசி பயன்படுத்துவதால் நடத்தைப் பிரச்னைகள் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதனால் அதிகம் கோபப்படுவது, பிடிவாதம், கீழ்படியாமை, எதிர்த்துப் பேசுவது போன்ற குண மாறுபாடுகள் தோன்றும். சிறுவர்கள் எளிதில் கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுவர். நீங்கள் கைப்பேசியை பிடுங்கும்போது உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்படும். கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி, வெளி விளையாட்டுக்களில் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். வெளி நிகழ்ச்சிகளுக்கு கிளம்ப வேண்டும் என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள்.

தற்போது மாணவர்கள் ‘பப்ஜி’ போன்ற கைப்பேசி வீடியோ விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இணையதளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் விளையாடுகிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அவர்கள் கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருந்தால், மனநல ஆலோசகர், மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை (கவுன்சலிங்) மற்றும் சிகிச்சை பெற்று, அதிலிருந்து அவர்களை முழுமையாக வெளிக்கொணர முடியும். சிறு குழந்தைகளுக்கு ‘ஸ்மார்ட் போனில்’ வீடியோ அல்லது பாடல்களைக் காட்டி உணவு ஊட்டாதீர்கள். அவர்கள் சேட்டை, தொந்தரவு பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைப்பேசியை கொடுக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்களும் அதற்கு அடிமையாகி விடுவர். பின்பு கைப்பேசி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். அழுது அடம் பிடிப்பார்கள். பேச்சும் தாமதமாகும். பென்சில் பிடித்து எழுதும் திறன் பாதிக்கப்படலாம். கற்றல் குறைபாடும் ஏற்படும்.

செல்போன் போதையிலிருந்து படிப்படியாக மீண்டு வர முடியும். ஒரேநாளில் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கைப்பேசியை பறித்து வைத்துக் கொண்டால், உடனே மாற்ற முடியும் என எண்ணாதீர்கள். அது தவறு. அவ்வாறு செய்தால் அது அவர்களுக்கு அதிக கோபமூட்டுவதாகவும், உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பும், வெறித்தனத்தை மூட்டுவதாகவும் அமையும். எனவே, படிப்படியாக குறைக்க வேண்டும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரி. எனவே நீங்கள் முதலில் உங்கள் கைப்பேசியை அளவோடு பயன்படுத்துங்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் முதலில், தான் கைப்பேசிக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். படிப்படியாக குறைக்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த வேண்டும். கைப்பேசியில் பேசும்போது தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள். வாய்ப்பு கிடைக்கும்போது உறவினர்களை நேரில் சந்தித்துப் பேசுங்கள். தேவையில்லாத கால்களை அட்டன்ட் செய்யாதீர்கள்.

பெரும்பாலும் நண்பர்களை நேரில் சந்தித்து அளவளாவுங்கள். கைப்பேசி விளையாட்டுக்களை தவிர்த்து, விளையாட்டு மைதானங்களில் அவர்களுடன் சேர்ந்து கால்பந்து, கபடி, கிரிக்கெட் என எதையாவது விளையாடுங்கள்.

போனில் வீண் அரட்டை அடித்து, மணிக்கணக்கில் பேசி, உங்கள் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

தற்போது எதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானாலும், உடனே ‘ஸ்மார்ட் போனில்’ ‘கூகுள் சர்ச்’ செய்வது வாடிக்கையாகி விட்டது. முதலில் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது சீனியர்களிடம் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். அல்லது பதிலை புத்தகங்களில் தேடுங்கள். பதில் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே கூகுளில் தேடுங்கள். முக்கியமாக உங்கள் செல்போனின் ‘நோட்டிபிகேஷன்ஸ்’&ஐ ஆஃப் செய்து வையுங்கள். இரவு தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பும், காலையில் எழுந்ததும் 1 மணி நேரம் வரையிலும் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து விடுங்கள்.

தூங்கும் நேரத்தில் கைப்பேசியை ஆஃப் செய்து வையுங்கள். அல்லது ‘தொல்லை செய்யாதீர்கள்’ – ‘மோட்’-ஐ ஆன் செய்து வையுங்கள். படிக்கும் நேரத்தில் கைப்பேசியை ஆஃப் செய்து வையுங்கள். வாரம் ஒருநாள் விரதம் இருப்பது போல, வாரம் ஒருநாள் ஸ்மார்ட் போனை ‘தொடா’ விரதம் இருங்கள். ‘டிஜிட்டல் ஃபாஸ்டிங்’ எனப்படும் இத்தகைய ‘இ&விரதங்கள்’ தான் இப்போது வெளிநாடுகளில் டிரெண்டிங்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வளைதளங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தால், இரண்டு மாதங்களுக்கு அதன் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்து பாருங்கள். அதன்பிறகு அதன் மீதுள்ள ஈர்ப்பு குறைய ஆரம்பித்துவிடும். அல்லது, இது தொடர்பான செயலிகளை உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.

உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஓவியம் வரைதல், பாட்டு, நடனம், அறிவியல் கண்டுபிடிப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டிசைனிங் என்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றில் கவனத்தை செலுத்துங்கள்.

செல்போன் அடிமைத்தனத்தால் நீங்கள் மறந்த, உங்களது பழைய நல்ல பொழுது போக்குகளை திரும்பவும் கொண்டு வாருங்கள். உதாரணம் & புத்தகம் வாசித்தல், கதை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல். இவ்வாறு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால், கைப்பேசியை அடிக்கடி பார்க்கும் நேரமும் குறையும்; உங்கள் திறமையும் புதுப்பொலிவு பெறும்.

முக்கியமான வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். செல்போன் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு, உங்களது பசுமையான பழைய வாழ்க்கையை மீட்டெடுத்து மெருகேற்றுங்கள்.

பிள்ளைகள் பெற்றோர்களுடன் வாழும் காலம் குறுகிய காலம்தான். எனவே உயிரோட்டம் இல்லாத மிஷினை (செல்போனை) ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களைப் பெற்றவர்களுடன் உணர்வுபூர்வமாக அளவளாவி மகிழுங்கள். நிழல் வாழ்க்கையின் (வீடியோ கேம்ஸ்) வெற்றிக்கு ஆசைப்பட்டு நிஜ வாழ்க்கையில் தோற்று விடாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு, அதனை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். அவ்வாறு பயணித்தால், எட்டாக் கனியைக்கூட வெற்றிக் கனியாக்கி விடலாம்.