டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி.

கோபம் ஏன் வருகிறது?

ஒருவரது நடவடிக்கை நமக்குப் பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லாக் கோபத்துக்குப் பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.

கோபத்தின் போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுபூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.

ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது.

கோபப்படுவதற்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை.நாம் நமது இலக்கை நோக்கிச் செல்வதற்கான ஆற்றலைத் தரும் நல்ல விஷயமே கோபம்.கோபத்தைப் பல நேரங்களில் நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம்.அதற்காகத்தான் நாம் வெட்கப்படவேண்டும்

அச்சத்தைப் போன்றே கோபமும் தேவையற்ற உணர்வு எனப் பலரும் நினைக்கின்றனர். கோபப்படாமலே இருப்பதுதான் நல்ல வழி என நாம் நினைக்கிறோம். உண்மையிலேயே கோபம் என்பது தேவையே இல்லாத ஒன்றுதானா?

கோபப்படுவது இயற்கையான உணர்வே.எதற்காக, எப்போது,எப்படி. யாரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது சூட்சுமம். கோபம் என்பது கொதிக்கும் நீராவியைப் போன்றது.சரியாக நெறிப்படுத்தினால் புகைவண்டியையே இழுக்கலாம். சரியாகக் கையாளப்படாவிட்டால் உருளைக் கிழங்கை வேகவைக்கக்கூடப் பயன்படாது.

சச்சின்போல இருங்கள்

ஆங்கிலத்திலே சப்ளிமேஷன் எனச் சொல்வார்கள். தமிழிலே பதங்கமாதல். கற்பூரம் போன்ற ஒரு திடப்பொருள் திரவ வடிவத்தை அடையாமல் நேரடியாக ஆவியாவதைக் குறிக்கும் இயற்பியல் சொல் அது.தங்களுடைய ஏமாற்றம்,கோபம், அச்சம்,இயலாமை போன்ற நிலைகளைக்கூடச் சரியான முறையில் வழிமுறைப்படுத்தி உன்னதமாக்கும் ரசவாதத்தைக் குறிக்க உளவியலில் இச்சொல் பயன்படுகிறது.

நம்மைக் கோபபடுத்தக்கூடிய சூழலை,சிறுமையை நமது செயலால் மாற்றியமைப்பதே கோபத்தைப் பதங்கமாக்குகிறது. வார்த்தைகளில் வெடிப்பதாலோ, பொருட்களை உடைப்பதாலோ, அருகில் இருப்பவர்களைத் தாக்குவதாலோ அல்ல.

ஷார்ஜாவில் 1998-ம் ஆண்டு நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி. இறுதிப் போட்டிக்கு முந்தையப் போட்டி ஒன்றில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஹென்றி ஒலங்கா என்ற பந்துவீச்சாளர் சச்சின் டெண்டுல்கரைச் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக்கிவிட்டார். உடனே மகிழ்ச்சியில் டெண்டுல்கரை அவமானப்படுத்துவது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு சச்சின் அவரை முறைக்கவோ கத்தவோ செய்யவில்லை.

அடுத்த போட்டி, இறுதிப் போட்டி. அப்போது ருத்ரதாண்டவம் ஆடி ஒலங்காவின் பந்துகளைச் சிதற அடித்துச் சதமடித்துத் துவம்சம் செய்தார் சச்சின்.அப்போதும் அவருடைய கோபத்தின் வெளிப்பாடு முகத்திலோ உடல்மொழியிலோ தென்படவில்லை. இதுதான் கோபத்தை நமது உயர்வுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் முறை.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கலை. உடனடித் தீர்வு மற்றும் நீண்ட காலப் பழக்கங்கள் மூலம் உங்கள் கோபத்தை மேலாண்மை செய்ய முடியும்.
கோபத்தை ஆரோக்கியமான முறையில் கையாள இதோ சில எளிய வழிகள்:

*கோபம் வரும் தருணத்தில் 1 முதல் 10 வரை மெதுவாக எண்ணுவது மூளையை அமைதிப்படுத்த உதவும்.

*பிரச்னை உள்ள இடத்தை விட்டு விலகுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியேறி வேறு அறைக்கு அல்லது வெளியிடங்களுக்குச் செல்வது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

*ஆழமாகச் சுவாசியுங்கள். மூக்கு வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, வாய் வழியாக வெளியே விடுங்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவது இதயத் துடிப்பைச் சீராக்கும்.

*பேசுவதைத் தவிர்க்கவும். கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளைக் கொட்டுவது பின்னாளில் வருத்தத்தைத் தரும். எனவே, அமைதி அடையும் வரை எதையும் பேசாமல் இருப்பது நல்லது.

*ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் குடிப்பது அல்லது முகத்தைக் கழுவுவது உங்கள் உடல் சூட்டையும் கோபத்தையும் குறைக்க உதவும்.