-டாக்டர் கு.சிவராயன், சித்த மருத்துவர்.

ணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு வலியை வைத்துக் கொண்டு ரொமான்ஸ் பண்ணுவது கஷ்டம். மலச்சிக்கலுடன் இருந்துகொண்டு எப்படி கனிவாய்க் காதல் பார்வை பார்க்க முடியும்? அப்படியே ட்ரை பண்ணினாலும் “ஏன் இப்படி முறைக்கிறீங்க?..ன்னு,” யுத்தம் துவங்கலாம். ஆதலினால் காதல் செய்வீர் அடிப்படை ஆரோக்கியத்துடன்.

சரி!திருமண பந்தத்தை ஃபெவிகால் போட்டு ஒட்டிவைக்க சிறப்பு உணவுகள்,மூலிகை ரெசிபிகள் இருக்கிறதா என்று கேட்டால்,உண்டு… ஆனால் அவை ரெடிமேட் இல்லை. கஸ்டம் மேட்.. கிச்சனில் துவங்கும் காதல், இடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கிளுகிளுப்பாகி, இரவில் இதமான தாம்பத்யமாகும் வித்தைக்கு நீங்கள்தான் கூடுதல் மெனக்கெட்டு, அக்கறைப்பட்டு சமைத்து, அலங்கரித்து, அழகாய்ப் பரிமாறி, உடன் உட்கார்ந்துச் சாப்பிட்டு, சமைத்ததைப் பாராட்டி, அவ்வப்போது “அன்றைக்கு செஞ்சியே கோதுமை ரவா இட்லி..சூப்பர்” என்பது போல் அங்கீகரித்திருக்க வேண்டும். பார்த்தவுடன் பலருக்கு பற்றிக்கொண்டு வரும் உப்புமா கூட இந்த ஃபார்முலாவில் இருந்தால் தாம்பத்ய வாழ்விற்கான சிறப்புண வாயிருக்கும்.சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

சோர்வில்லாத முகம், உடல் தாம்பத்ய வாழ்வின் அடித்தளம்.

எப்போதும் புத்துணர்வாய் இருக்க தினசரி ஒரு வேளை பழங்கள் எடுப்பது மிக மிக அவசியம். ஒருவேளை தைராய்டு பிரச்னை இருந்தால் குணப்படுத்த வேண்டும்.சர்க்கரை கட்டுக்குள் இல்லையென்றால் அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.அப்போது சோர்வு மறையும்.

பழங்களில் குறிப்பாக மாதுளை காதல் பெருக்கும் ஒரு கனி என சீன மருத்துவமும் நவீன தாவரவியலாளர்களும் பல காலமாய்ச் சொல்லி வருகிறார்கள். கொஞ்சம் கூடுதல் விலை என்றாலும் மாதுளை மரத்தில் விளையும் வயாகரா. காய்ந்த திராட்சை (கிஸ்மிஸ்), ஸ்ட்ராபெர்ரி,சிவப்பு கொய்யா இவையெல்லாம் உடலுக்கும் மனதுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ டீச்சர்ஸ். இனி ஆஸ்பத்திரிக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பழம் வாங்கிச் சென்று பழகுங்கள்.உடல் வியாதி மட்டுமல்ல மன வியாதியும் போய்விடும்.

காமம் பெருக்கும் கீரைகள் என்று,சிறு கீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை என ஒரு பட்டியலையே சித்த மருத்துவம் சொல்லியிருக்கிறது. இனி கிள்ளுக்கீரை என அலட்சியமாக கீரையைப் பார்க்காமல்,கீரையை நரம்பு டானிக்காக பாருங்கள்.கீரையில் பொதிந்துள்ள கனிமங்களும், உப்புக்களும் பல நரம்பை பலப்படுத்தும் சத்துகளும் வேறு தாவரங்களில் குறைவு.சின்ன குழந்தைகளாய் இருக்கும்போதே கீரையை விரும்பி உண்ணும் பழக்கத்தை உண்டாக்குங்கள்.. கீரை மட்டும் பிடிக்காது எனச் சொல்லும் இளைஞர்யுவதி கூட்டம் பெருகி வருகிறது. பின்னாளில் அவர்கள் நரம்பு டாக்டரையோ,கரு உருவாக்க உதவி செய்யும் கம்பெனிகளையோ நாடாமல் இருக்க அந்த கீரைகள் உதவிடும்.பாலி சிஸ்டிக் ஓவரி கூடி வருவதற்கும் “கீரை சாப்பிடமாட்டேங்” கிற பிள்ளையின் பிடிவாதமும், “செல்லத்துக்கு நூடுல்ஸ் தரவா?” எனும் அம்மாவின் அலட்சியமும்தான் ஒரு முக்கிய காரணம்.ஹை கிளைசிமிக் தன்மையுடைய உணவை கீரை லோ கிளைசிமிக் ஆக்கும். அதன் ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிடார்ஸ் சத்துகள் ரத்தத்தில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.

கருத்தரிக்க தயாராக இருக்கும் புதுமணப்பெண் ஃபோலிக் அமில விட்டமின் சத்து எடுத்துக்கொள்வது அவசியம்.

ஆண்கள் பாதாம், சாரைப்பருப்பு கலந்த பசும்பால் அருந்துவதும், முடிந்தால் அரை சிட்டிகை அதில் சாதிக்காய் போட்டு அருந்துவது நலம். ( ஒரு சிலருக்கு சாதிக்காய் மலச்சிக்கல் தரக்கூடும்.அவர்கள் அதனைத் தவிர்க்கலாம்). இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதுகூட தாம்பத்ய வாழ்விற்கு உதவிடும்.அதன் பொட்டாசிய சத்தும் டெஸ்டோஸ்டீரோனை தூண்டும் சத்துகளும் அதற்கு சான்றளிக்கின்றன.மாதவிடாய் சீராக இல்லாத இளம்பெண்கள், உணவில் உளுந்து, சோயா,வெந்தயம், பூண்டு இவற்றை எடுப்பதும், வாய்ப்பிருப்பின் கற்றாழைச் சாறு சாப்பிடுவதும் அவர்கள் தாம்பத்ய வாழ்விற்கும் கருத்தரிப்பிற்கும் நல்லது.

காய்கறிகளில் முருங்கைக்கு முதலிடம்.பாக்யராஜ் பரிந்துரைத்ததாலல்ல.மருத்துவ உலகமும் வரிந்து கட்டிக்கொண்டு முருங்கையின் கீரை, காய்,விதைக்கு ஆண்களின் விந்தணுக்களைக் கூட்டும் சக்தியுண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.பெண்களுக்கு வெண்பூசணி, இருவருக்குமே வெண்டைக்காய், டபுள் பீன்ஸ், சுரைக்காய்,கேரட், பீட்ரூட்,சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை,திருமண வாழ்விற்கான அவசியமான காய்கறிகள்.

ஸ்ட்ராபெர்ரியை வாங்கி சாக்லேட் சாஸில் முக்கி, சந்தனப் பேழையில் தந்தாலும், கொடுப்பவர் முகமலர்ச்சியும்,வாங்குபவர் அகமகிழ்வும்தான் தாம்பத்யம் தூண்டும். அதற்கு உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் குதூகலமாகவும் இருப்பது மிக மிக அவசியம்.7 நட்சத்திர விடுதி விருந்தைவிட, மொட்டைமாடி நிலவொளியில் பரிமாறப்படும் கம்பங்கூழ் “ஒஸ்தி”!