-டாக்டர் ஜி.ராஜமோகன்

பொதுவான மனநலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்வெழுச்சிகளே. அவை மனச்சோர்வும், பதற்றமும். மனச்சோர்வு என்பது வருத்தமாகவும், சோகமாகவும் நம்பிக்கையற்றும் இருப்பது. மனச்சோர்வு ஓரளவு மட்டும் இருந்தால், அதை ‘இயல்பானது’ என்று கூறலாம். ஆனால், அதே மனச்சோர்வு எல்லை மீறிப்போய் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடத் தொடங்கினால் அதுவே பிரச்னை ஆகிவிடுகிறது. களைப்பு, ஒரு செயலில் மனதை செலுத்த இயலாமை போன்ற முடமாக்கும் நோய்க்குறிகளோடு மனச்சோர்வு தொடரலாம். இந்த உணர்வு நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கும். ஒரு வேலையைச் செய்யவோ வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவோ இயலாமல் போய்விடும். மனச்சோர்வு ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளில் குறுக்கிட்டு, நீண்ட காலத்துக்கு தொடருமானால், இவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறர் என்று நாம் முடிவு செய்து விடலாம்.

பயத்தோடும் பரபரப்போடும் உணர்வதே பதற்ற நோயின் நோய்க்குறிகள் ஆகும். மனச்சோர்வை போலவே சில சூழல்களில் இது இயல்பான உணர்வு என்று கூறலாம். இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் இது பதற்ற நோயாக மாறி ஒருவரின் அன்றாட வாழ்வில் குறுக்கிடுகிறது அல்லது கடுமையான நோய்க்குறிகளை உருவாக்குகிறது.

மனச்சோர்வோ, மனப்பதற்றமோ தொடர்ந்து நீடித்தால் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரை சந்திப்பது அவசியம்.

பாதிப்புகள்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவரிடம் கீழ்க்காணும் நோய்க்குறிகளில் சில காணப்படும்.

உடலியக்கம் சார்ந்தது

  • களைப்போடு சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்தல்
  • உடம்பு முழுதும் இன்னது என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத வலி

உணர்வு

  • சோகமாகவும் வருத்தமாகவும் உணர்வது
  • வாழ்க்கை, சமூகத் தொடர்பு, பணி போன்றவற்றில் ஆர்வம் இழந்த நிலை
  • குற்ற உணர்வு

சிந்தனை

  • எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இழந்த நிலை
  • முடிவுகளை எடுப்பதில் சிரமம்
  • மற்றவர்களைப் போல நாமும் இல்லை என்ற எண்ணம் (தாழ்வான சுய மதிப்பு)
  • உயிரோடு இல்லாவிட்டால் நன்றாக இருக்கம் என்ற எண்ணம்
  • தற்கொலை செய்து கொள்வது தொடர்பான எண்ணமும் திட்டங்களும்
  • மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமம்

நடத்தை

  • நிம்மதியற்ற தூக்கம் (பொதுவாக தூக்கம் குறைவு; அரிதாக அதீத தூக்கம்)
  • பசியின்மை (சில வேளைகளில் கடும் பசி)
  • பாலுறவில் நாட்டம் குறைதல்