
-அங்கயற்கண்ணி ரஜூ,M.Sc.M.Phil.
பெண் என்றால் அன்பு…
பெண் என்றால் அழகு…
பெண் என்றால்
பொறுமை…
பெண் என்றால் கருணை…
பெண் என்றால் தாய்மை…!
பெண் என்பவள் தாயாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, தோழியாக, சித்தியாக, அத்தையாக, பாட்டியாக… என்று பல அவதாரங்களை எடுக்கிறாள். இவற்றில் முக்கியமான அவதாரம் அன்னை தெரசாவாக வாழும் அம்மா வாழ்க்கை.
அம்மாவுக்கு குடும்பத் தலைவி என்ற பொறுப்பு வரும்போது அவள் உலகமே குழந்தைகள் மற்றும் கணவன்தான். ஒரு நாளும் அவள் தன்னைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
காலையில் எழுந்து குளித்து முடித்து,குழந்தைகளை கண்ணே மணியே என்று கொஞ்சி காபி, டீ குடிக்க வைப்பது, டிபன் செய்வது,மதிய உணவு சமைத்து டப்பாவில் வைத்து 7, 8 மணிக்குள் முதலில் குழந்தைகளை கிளப்பி விட்டு,அடுத்து ஆபீசுக்கு கிளம்பும் கணவருக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து ஒன்பது மணிக்கு அவரை கிளப்ப வேண்டும்.பிறகு அவள் சாப்பிட்டு முடிக்க பத்து மணி ஆகிவிடும். அதன் பின் துணி துவைப்பது, வீடு துடைப்பது என்று வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும்.
வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தால் சொல்லவே வேண்டியது இல்லை.
இரண்டு வேலைகள். இரவு வந்து சமைத்து பரிமாறி தூங்க மணி 10 ஆகலாம்.அடுத்த நாள் மறுபடியும் அதே வேலைகள்.
பழங்களைப் பிழிந்து ஜூஸ் போட்டால் கூட குழந்தைகளுக்கு , கணவருக்கு என்று கொடுத்துவிட்டு கடைசியில் இருக்கும் ஒரு வாய் ஜூசை வாயில் ஊற்றிக்கொண்டு பரவாயில்லை என்று விட்டுவிடும் பெண்களே அதிகம். சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும் இல்லை.தன் உடலை கவனித்துக் கொள்வதும் இல்லை. தன்னைப் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களைப் கவனிப்பதிலேயே நேரம் செலவழிப்பதால் 40 வயதைத் தாண்டும் பெண்களுக்கு பலவிதமான உடல் பாதிப்புகள் வருகின்றன.
பெகள் தன்னைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று தனக்காக நேரம் ஒதுக்குவதில்லை. சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை. குடும்பமே முக்கியம் என்று இருந்து விடுகிறார்கள். கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வதற்கும் சாப்பிட்டாயா… என்று கேட்பதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இப்போது அந்த வாய்ப்பும் இல்லை.
பெண்கள் கட்டாயமாக அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.கவனமாக இருந்தால் தான் நோயின்றி வாழ முடியும். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழமொழி. நம் உடலை கவனித்துக் கொண்டால்தான் நம் குடும்பம் நன்றாக இருக்கும். ஒரு குடும்பத்தில் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த குடும்பமே ஸ்தம்பித்து விடும். இத்தனை நாள் எல்லா வேலைகளையும் எடுத்து போட்டு செய்து கொண்டிருந்தவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிரமம்.
ஒரு குடும்பம் தாயை இழந்தால் அந்த குடும்பத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு வாழ்க்கையே சூனியமாகும். எனக்கு 10 வயது இருக்கும்போது என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதனால் நானே குடும்ப வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.படிப்புடன் குடும்ப வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன்.
எனக்கு திருமணம் முடிந்ததும் சென்னை வந்தோம். குடும்பம்… குடும்பம்.எப்போதும் குடும்பத்தை பற்றிய சிந்தனைதான்.ஓய்வின்றி வேலை செய்து கொண்டே இருப்பேன்.
என் நலனைப் பற்றி கண்டு கொண்டதே இல்லை.
திடீரென்று உடல் எடை அதிகரித்தது. முட்டி வலி, ஒரு பக்க தலைவலியால் சிரமப்பட்டேன். மருத்துவர்கள் தைராய்டு பிரச்னை என்று சொல்லி மருந்து கொடுத்தார்கள்.
ஆனால்,ரத்த அணுக்கள் குறைந்து கொண்டே இருந்தது.பிறகு டெஸ்ட் எடுத்த போது SLE (Systamic Lupus Erythematosus) என்பது Autoimmune Disease …
அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி,தவறுதலாக ஆரோக்கியமான திசுக்களையும் பாதிக்கத் தொடங்கும்.அதனால் ரத்த அணுக்கள் குறைந்து கொண்டே இருக்கும்.அதை சரி செய்ய மருந்து மாத்திரைகள்,அயன் இன்ஜெக்ஷன் என்று எல்லா மருத்துவமும் பார்த்து எதுவும் பிரயோஜனம் இல்லை.
கடைசியில் ஸ்டீராய்டு மருந்து கொடுத்தால் தான் ரத்த அணுக்களை அதிகரிக்க முடியும் என்று சொன்னார்கள். அதிகப்படியான ஸ்டீராய்டு கொடுத்ததால் எனக்கு மூச்சு திணறல் வந்தது.அதுவரை எப்படியும் சரியாகிவிடும் என்று தைரியமாக இருந்த எனக்கு சிறிது சிறிதாக தைரியம் குறைந்தது. நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு என் கணவர் என்ன செய்வார் என்று எனக்குள் பயம் கவ்விக் கொண்டது.
எங்கள் குடும்பமே ஸ்தம்பித்தது.மூச்சு திணறல் அதிகமாகியபோது பெரிய மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றார்கள்.மூச்சுத் திணறல் இப்படியே இருந்தால் கோமாவிற்கு போய் விடுவேன் என்றார் மருத்துவர்.ஒரு ஊசி 60 ஆயிரம் ரூபாய் ஐந்து ஊசிகள் போட வேண்டும். அதுவும் உயிர்பிழைப்பதற்கு 30 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்கள்.
உடனே என் குடும்பத்தார் அங்கு இருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு தொடர்ந்து 45 நாட்கள் மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தேன்.
எனது குடும்பம் என்னை காப்பாற்றியது.அவர்களுக்காக நான் புது தெம்புடன்
உற்சாகமாக மீண்டு வந்தேன். மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக் கொண்டாலும் உடல் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றால் நம்முடைய சாப்பாட்டு முறையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதனால் இயற்கை உணவு முறையை பின்பற்ற ஆரம்பித்தேன். நம்முடைய உணவு முறையில் உள்ள சத்தான உணவுகளை சாப்பிட்டாலே நாம் பல வியாதிகளை சரி செய்து கொள்ள முடியும். மருத்துவமனையில் இருந்து வந்தபோது எனக்கு உடம்பு இளைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் எலும்பு வலுவில்லாமல் இருந்தது.அதனால் தொடர்ந்து பிரண்டை,முடக்கத்தான் கீரை,கீரை வகைகள் அனைத்தையும் தாராளமாக எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் தஞ்சாவூரில் இருந்தபோது வீட்டு வேலியிலேயே பிரண்டை,முடக்கத்தான் கீரை எல்லாம் படர்ந்து கிடக்கும். சென்னையில் தேடி கண்டுபிடித்து தான் வாங்க வேண்டும்.கட்டு 20 ரூபாய்,30 ரூபாய் என்று விற்கிறார்கள்.
என் கணவர் கீரை விற்பதை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்து விடுவார்கள்.வாரத்துக்கு இரண்டு நாள் கட்டாயமாக பிரண்டை துவையல் சேர்த்துக் கொண்டால் எலும்பு வலுவாகும்.பிரண்டை துவையலுக்கு பிரண்டையை நன்கு நார் எடுத்து சிறு,சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கி,நான்கு காய்ந்த மிளகாய்,புளி,உப்பு வைத்து அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். முடக்கத்தான் கீரையை பொறுத்தவரை சிறிது மிளகு சீரகம் சேர்த்து,கழுவிய கீரையை மிக்ஸியில் விட்டு நன்கு அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். நல்ல சுவையாகவும் இருக்கும்.
தொடர்ந்து முடக்கத்தான் கீரையும் பிரண்டையும் சேர்த்துக் கொண்டேன்.
அதுமட்டும் இல்லாமல் அரிசிக்கு பதில் கம்பு, கேழ்வரகு,தினை என்று சிறுதானியங்கள் பயறு வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தோம்.நல்ல மாற்றம் தெரிந்தது.
நோய் வந்த பிறகு கஷ்டப்படுவதற்கு பதிலாக வரும் முன் காப்பதே நல்லதல்லவா! பெண்கள் 40 வயதுக்கு மேல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு, உளுந்தங்களி முதலிய உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்களின் கர்ப்பப்பையை பலப்படுத்தும். மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கும்.
உளுந்தங்களி இடுப்பு எலும்பு வலியை குறைத்து எலும்பை பலப்படுத்த உதவும்.
கம்பு,சிவப்பரிசி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலை வலுப்படுத்த உதவும்.கம்பு எல்லா தானியங்களையும் விட அதிகமாக சத்துகளை கொண்டது.ரத்த விருத்திக்கு உதவுகிறது. சிவப்பரிசியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் நன்கு வலுவடையும். கம்பு, சிவப்பரிசி சேர்த்து மாவு அரைத்து வைத்துக் கொண்டு கஞ்சி வைத்து குடிக்கலாம். சிவப்பரிசி,உளுந்து சேர்த்து இட்லி, தோசை மாவு செய்து சாப்பிடலாம்.
உணவில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. தொடர்ந்து உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்து வர வேண்டும். தனக்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கட்டாயமாக அந்த குடும்பத்தின் தலைவி நலமாக இருக்க வேண்டும். பெண்கள் வீட்டின் கண்கள் அல்லவா!

