
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.
உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.
மருத்துவ மூலிகைகள் என்பது நம் வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கிறது. இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம். பொதுவாக நாம் மூலிகைகளைப் பற்றி அறிந்து கொள்கிறபோது அந்த மூலிகையின் பயன்களையும்,அந்த மூலிகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
இந்த மாதம் நாம் அறிந்து கொள்ள இருக்கும் மூலிகை நம் வீட்டு சமையலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதும்,மருத்துவ காரணங்களுக்காக பல்வேறு மக்களால் பயன்படுத்தப்படுவதுமான இலவங்கப்பட்டை ஆகும்.நமக்கு நன்கு அறிமுகமான இலவங்கப்பட்டையைப் பற்றி புதிதாக என்ன அறியப் போகிறோம் என்ற ஆச்சரியத்தோடுதான் இக்கட்டுரையை நீங்கள் வாசிப்பீர்கள்.
பொதுவாக இலவங்கப்பட்டையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும் என்றாலும் நமக்குத் தெரியாத மருத்துவ ரகசியங்கள் ஏராளமாக உள்ளன.

சின்னமன் இலவங்கப்பட்டை
பொதுவாக இலவங்கப்பட்டையை நாம் மசாலா பொருட்களில் ஒன்றாகவே பயன்படுத்தி வந்தோம்.பிறகு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று பல்வேறு தளங்கள் மூலம் நாம் அறிந்ததாலும்,சில மூலிகை மருத்துவ முறைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாலும், பெரும்பாலானவர்கள் இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து அதனை வடித்து வடிநீரை தினமும் பயன்படுத்துகின்றனர்.
சமையல் அடிப்படையிலான பல வலைத்தளங்களிலும் கேக் செய்வதற்கு பொதுவாக இலவங்கப்பட்டை பொடி பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.இதனால் குழந்தைகள் மிக அதிக அளவில் இலவங்கப்பட்டையை உட்கொள்கின்றனர். எனவே இலவங்கப்பட்டையைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு அவசியமாகிறது.

கேசியாவின் பட்டை
இலவங்கப்பட்டை சின்னமோமம் ஜெய்லானிக்கம் (Cinnamomum zeylanicum அல்லது Cinnamomum verum) எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இம்மரம் லாரேசி குடும்பத்தை சார்ந்ததாகும். இத்தாவர குடும்பம் நறுமணம் மிக்க பல தாவரங்களை உள்ளடக்கியுள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மரங்களின் இலைகள் பொதுவாக பிரியாணி இலையாக அல்லது பே லீஃப் என்ற பெயரால் அறியப்படுகிறது. சரியான பே அல்லது பிரியாணி இலைகள் என்பது சின்னமோமம் தமலா (Cinnamomum tamala) எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் இலைகள் ஆகும். இதன் இலைகளுக்கு பட்டை மற்றும் கிராம்பின் கூட்டு நறுமணம் இருக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் தன்மை உடையது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் பிரியாணி போன்ற உணவு வகைகளிலும், இறைச்சி வகைகளை சமைக்கும் பொழுதும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இருப்பினும் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான மரங்களின் இலைகளும், லவங்கப்பட்டை மரத்தின் இலைகளுமே கூட பிரியாணி இலை அல்லது பே(Bay) இலைகள் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
இலவங்க மரத்தின் பட்டைக்கும் இலைக்கும், தனித்துவமான நறுமணம் இருப்பதால் இது தவிர்க்க முடியாத மசாலா பொருளாக உள்ளது.ஆனால், கடைகளில் இருந்து நாம் வாங்கும் இலவங்கப்பட்டையானது பொதுவாக இம்மரத்தின் பட்டையாக இருப்பதில்லை. இம்மரத்தின் பட்டைக்கு என சில பண்புகள் உள்ளன. இப்பண்புகளைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்ட பின் இவற்றை வாங்கி பயன்படுத்தினால் இதற்கான முழு பலனையும் நாம் பெற முடியும்.
பொதுவாக மரப் பட்டை என்றால் மரத்தின் வெளிப்புறத்தில் இருந்து உரித்து எடுக்கப்படும் பட்டை என்று நினைப்போம். ஆனால் சின்னமோமம் ஜெய்லானிக்கம் என்னும் மரங்களிலிருந்து பெறப்படும் மரப்பட்டையானது வெளிப்புற பட்டை அல்ல.இது உட்புறமாக காணப்படும் மெல்லிய பட்டைப் பகுதியாகும்.இது பொதுவாக சுருள்ப்பட்டை என்றே அழைக்கப்படுகிறது.
இச்சுருள்பட்டை ஒரு புறம் மட்டுமே சுருண்டு இருக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கும்போது வெளிப்புற பட்டை அல்லது,கேசியா (Cinnamomum cassia/Cinnamomum aromaticum) எனப்படும் மரத்திலிருந்து பெறப்படும் தடிமனான பட்டைகளே நமக்கு இலவங்கப்பட்டை என்ற பெயரில் விற்கப்படுகிறது. கேசியாவின் பட்டைகள் இருபுறம் இருந்தும் சுருண்டு நடுவில் குழாய் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். தடிமனான பட்டைகளாகவும் இருக்கும்.இவ்வாறு இருக்கும் பட்டைகள் சரியான இலவங்கப்பட்டைகள் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டையின் நிறம் லேசான பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடர் சிவப்பு நிறங்கள் அல்லது அடர் பழுப்பு நிறங்கள் காணப்பட்டால் இலவங்கப்பட்டைக்கு பதிலாக கொடுக்கப்படும் கேசியாவின் பட்டை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இலவங்கப்பட்டைகள் ஒரு புறம் மட்டுமே சுருண்டு நடுவில் துளைகளற்று நிரம்பி இருக்கும்.லேசான இனிப்புச் சுவையுடன் கூடிய மெல்லிய நறுமணம் கொண்டிருக்கும்.
ஆனால்,கேசியாவின் பட்டைகள் மிக அடர்வான நறுமணம் உடையதாக இருக்கும். கேசியாவின் பட்டைகள் விலையில் மிகக் குறைவு என்பதாலும் மிக அதிகமாக கலப்பட பொருளாக பயன்படுத்தப்படுகிறது.இதன் மிக அதிக நறுமணத்திற்கு காரணம் கௌமெரின் என்று சொல்லப்படும் ஒரு வேதிப்பொருளாகும். கௌமெரின் மிக அதிகமாக உட்கொள்ளப்பட்டால், கல்லீரலை பாதிக்கும் மற்றும் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் தன்மையை கொண்டதாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பொதுவாகவே உடலில் மற்ற உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தில் மிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
சர்க்கரை அளவை குறைக்கும் என்று இலவங்கப்பட்டையின் நீரை அருந்தி அது கேசியாவின் இலவங்கப்பட்டையாக இருக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் மேலும் சீர்கெடும் என்பதால் நாம் பயன்படுத்தும் இலவங்கப்பட்டைகளின் பண்புகளை
தெளிவாக அறிந்து கொண்டு,சரியான இலவங்கப்பட்டையை தேர்ந்தெடுத்து அதன் மருத்துவ பயனை பெற வேண்டும்.
இத்தகைய சிறப்பான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சின்னமன்/இலவங்கப்பட்டையானது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே வளர்கிறது. 16,17 ஆம் நூற்றாண்டுகளில் தான் இலவங்கப்பட்டை இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. ஆனால்,இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முக்கிய மருத்துவ அல்லது உணவுப் பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது.சைனா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் வளரும் கேசியாவின் பட்டைகள் மிகவும் விலை குறைவு என்பதால் இவையே பொதுவாக இலவங்கப்பட்டை என்ற பெயரில் விற்கப்படுகிறது.
இலவங்கப்பட்டை பொடியாக வர்த்தக ரீதியாக விற்கப்படும் போது,காபி கொட்டைகளின் தோல் பகுதி கலப்பட பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டையுடன் கலக்கப்படும் காபி கொட்டையின் தோல் பகுதி லெட் (ஈயம்) எனப்படும் ஹெவி மெட்டல் அதிகமுடையதாக இருக்கிறது.இதுவும் பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்கும் நச்சுப் பொருளாகும். எனவே சமைப்பதற்கோ அல்லது மருத்துவ பயன்பாட்டிற்கோ பயன்படுத்த சரியான இலவங்கப்பட்டையை கண்டறிந்து வாங்கி வீடுகளிலேயே பொடி செய்து பயன்படுத்துதல் நல்லது.
இலவங்கப்பட்டை தேநீர்,காய்ச்சல்,சளி, அஜீரணம் போன்ற உடல் உபாதைகளை சரி செய்ய வல்லது. தினமும் தேநீர் போல் அருந்தப்பட்டால் சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும், மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை சீர் செய்யவும், தசை மற்றும் மூட்டு வலி நிவாரணியாகவும் அமையும்.மேலும் ஆன்ட்டிசெப்டிக் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளை கொண்டுள்ளதால் உடலுக்கு மிகவும் பயனுள்ளது. மனநலத்திற்கும் உகந்ததாக இப்பட்டையின் பொடி மற்றும் தேநீர் உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இலவங்கப்பட்டையை சரியாக கண்டறிந்து,
பயன்படுத்தி நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகள்!
–ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

